நான் வாய்ப்புக்காக இல்ல நாட்டுக்காக ஆடுறவன், அந்த சான்ஸ் கிடைக்கலைனாலும் கவலைப்பட மாட்டேன் – தாக்கூர் நெகிழ்ச்சி பேட்டி

Shardul thakur
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்க எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று முடிந்த ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2 – 1 (3) என்ற கணக்கில் வென்ற இந்தியா 2023 உலக கோப்பைக்கு தயாராகும் இறுதிக்கட்ட பயணத்தை வெற்றியுடன் துவங்கியுள்ளது. குறிப்பாக முதல் போட்டியில் வென்ற தங்களை 2வது போட்டியில் 5 வருடங்கள் கழித்து வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸை 3வது போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் வீரர்களுடன் இந்தியா தோற்கடித்து கோப்பையை வென்றது. அந்த போட்டியில் 85 ரன்கள் எடுத்த சுப்மன் கில் ஆட்டநாயகன் விருதை வென்றாலும் வெறும் 6.3 ஓவரிலேயே 37 ரன்களை கொடுத்து 4 முக்கிய விக்கெட்டுகளை எடுத்த சர்துல் தாக்கூர் அறிவிக்கப்படாத ஆட்டநாயகனாக அசத்தினார்.

மேலும் மொத்தமாக இந்த தொடரில் 8 விக்கெட்களை எடுத்துள்ள அவர் கடந்த 2019 உலக கோப்பைக்கு பின் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்களை (53) எடுத்த இந்திய பந்து வீச்சாளர் என்ற சாதனையை சத்தமின்றி செய்து வருகிறார். மும்பையைச் சேர்ந்த அவர் கடந்த 2017இல் அறிமுகமாகி தடுமாறினாலும் 2018 – 2021 வரையிலான காலகட்டங்களில் ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சென்னை அணியில் சிறப்பாக செயல்பட்டார்.

- Advertisement -

நாட்டுக்காக ஆடுறேன்:
அதன் எதிரொலியாக 2019 உலகக் கோப்பைக்கு பின் அசத்த துவங்கிய அவர் 2021இல் ஆஸ்திரேலிய மண்ணில் பதிவு செய்த மறக்க முடியாத காபா வெற்றியிலும் இங்கிலாந்தின் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் பதிவு செய்த வெற்றியிலும் ஆல் ரவுண்டராக முக்கிய பங்காற்றினார். அத்துடன் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டிலும் எதிரணி பேட்ஸ்மேன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்கும் போதெல்லாம் அதை உடைத்து ஒரே ஓவரில் 2 விக்கெட்களை எடுத்து மேஜிக் நிகழ்த்தக்கூடிய தன்மையை கொண்டுள்ள அவரை ரசிகர்கள் லார்ட் என கொண்டாடுகின்றனர்.

இருப்பினும் விக்கெட்டுக்கு ரன்களை வாரி வழங்கும் பிரச்சனையை கொண்டுள்ள அவர் அதை சரி செய்தால் 2023 உலக கோப்பையில் நிச்சயமாக விளையாட தகுதியானவர் என்றே சொல்லலாம். இந்நிலையில் தாம் இந்திய அணியில் நிரந்தர இடத்தை பிடிப்பதற்காக விளையாடுபவன் அல்ல என்று தெரிவிக்கும் சர்துல் தாக்கூர் 2023 உலகக்கோப்பையில் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் அதற்காக கவலைப்பட போவதில்லை என்று நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். இது பற்றி 3வது போட்டியில் முடிவில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இந்த தொடரில் நான் 8 விக்கெட்டுகளை எடுத்ததற்காக மகிழ்ச்சியடைகிறேன். வாய்ப்புக்காக வருட கணக்கில் காத்திருக்கும் என்னைப் போன்ற வீரர்கள் சில நேரங்களில் அசத்த முடியும். சில நேரங்களில் அசத்த முடிவதில்லை. இருப்பினும் எந்த தொடரில் வாய்ப்பு கிடைத்தாலும் அது எனக்கு பெரிய தன்னம்பிக்கையை கொடுக்கிறது. ஏனெனில் நான் என்னுடைய கேரியரில் அனுபவத்தை மட்டுமே சேர்த்து வருகிறேன்”

“குறிப்பாக நான் அணியில் என்னுடைய இடத்திற்காக விளையாடுவதை பற்றி எப்போதும் யோசித்ததில்லை. ஏனெனில் நான் அந்த மனநிலையுடன் விளையாடக்கூடிய வீரர் கிடையாது. அதனால் ஒருவேளை 2023 உலகக்கோப்பையில் தேர்வு செய்யப்படாமல் போனால் அது இந்திய அணியின் முடிவாகும். அதற்காக நான் எதுவும் செய்ய முடியாது. எனவே நான் எப்போதுமே போட்டியின் சூழ்நிலைக்கேற்றவாறு அணிக்காக சிறப்பாக செயல்பட முயற்சித்து வருகிறேன். மேலும் இந்த வருடம் நான் ஒரு ஒருநாள் தொடரில் விளையாடவில்லை என்று நினைக்கிறேன்”

- Advertisement -

“அதாவது சொந்த மண்ணில் ஜனவரியில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான தொடரில் விளையாடவில்லை. அதற்கான காரணம் எனக்கு தெரியவில்லை. ஆனாலும் அதை தவிர்த்து கடந்து 2 வருடங்களில் நடைபெற்ற பெரும்பாலான ஒருநாள் தொடர்களில் நான் விளையாடியுள்ளேன். குறிப்பாக அணி நிர்வாகம் என்னிடம் ஏதோ எதிர்பார்க்கிறது என்பதாலேயே தொடர்ந்து தேர்வு செய்யப்பட்டு வருகிறேன்”

இதையும் படிங்க:IND vs WI : டி20 தொடரை வெல்லப்போவது யார்? வரலாற்று புள்ளிவிவரம் – முதல் டி20 நடக்கும் பிட்ச், வெதர் ரிப்போர்ட் இதோ

“எனவே விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அணி நிர்வாகம் என் மீது ஏதோ தன்னம்பிக்கை வைத்து வாய்ப்பு கொடுப்பதாக உணர்கிறேன். கடந்த சில வருடங்களில் நாம் ஆழமான பேட்டிங் வரிசையுடன் விளையாடி வருகிறோம். அதனால் எனக்கான வேலை முக்கியத்துவம் பெறுகிறது. எனவே வாய்ப்பு கிடைத்தால் பேட்டிங், பவுலிங் அல்லது ஃபீல்டிங் என அனைத்து துறைகளிலும் அணிக்காக பாடுபட தயாராக இருக்கிறேன். அதனால் போட்டியின் முடிவில் எந்த துறையாக இருந்தாலும் என்னுடைய செயல்பாடுகள் வெற்றியில் தாக்கத்தை ஏற்படுத்தினால் அதுவே எனக்கு மகிழ்ச்சியாகும்” என்று கூறினார்.

Advertisement