39/3 டூ 182 ரன்ஸ்.. மிரட்டிய அர்ஷிதீப்.. பஞ்சாப்பை பந்தாடிய நிதிஷ் ரெட்டி.. ஹைதரபாத் அணிக்காக அசத்தல் சாதனை

PBKS vs SRH
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் ஒன்பதாம் தேதி இரவு 7.30 மணிக்கு முல்லான்பூரில் 23வது லீக் போட்டி நடைபெற்றது. அதில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. அந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய ஹைதராபாத்துக்கு அதிரடியாக விளையாட முயற்சித்த டிராவிஸ் ஹெட்டை 21 (15) ரன்களில் காலி செய்த அர்ஷிதீப் சிங் அடுத்ததாக வந்த ஐடன் மார்க்ரமை டக் அவுட்டாக்கி மிரட்டினார்.

அப்போது வந்த இளம் வீரர் நிதிஷ் ரெட்டி அதிரடியாக விளையாடினார். ஆனால் எதிர்புறம் வேகமாக ரன்கள் குவிக்க முயற்சித்த அபிஷேக் ஷர்மா 16 (11) ரன்களில் சாம் கரண் வேகத்தில் செவிலியன் திரும்பினார். அடுத்து வந்த ராகுல் திரிபாதி மிகவும் தடுமாற்றமாக விளையாடி 11 (14) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். இருப்பினும் எதிர்ப்புறம் தொடர்ந்து அசத்திய நிதிஷ் ரெட்டி அரை சதமடித்து அசத்தினார்.

- Advertisement -

அசத்திய 20 வயது வீரர்:
ஆனால் அடுத்ததாக வந்த நட்சத்திர வீரர் ஹென்றிச் க்ளாஸென் தடுமாற்றமாக விளையாடி 10 (10) ரன்களில் ஹர்சல் படேல் வேகத்தில் அவுட்டானார். அதைத் தொடர்ந்து வந்த அப்துல் சமத் அதிரடியாக 5 பவுண்டரிகளை பறக்க விட்டு 6வது விக்கெட்டுக்கு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 25 (12) ரன்களை 208.33 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசினார்.

அப்போது அவரை அவுட்டாக்கிய அர்ஷ்தீப் சிங் அதே ஓவரில் மறுபுறம் சிறப்பாக விளையாடிய நித்திஷ் ரெட்டியையும் 4 பவுண்டரி 5 சிக்சருடன் 64 (37) ரன்களில் காலி செய்தார். ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்த வெறும் 20 வயதாகும் நிதிஷ் ரெட்டி இதன் வாயிலாக ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக இளம் வயதில் (20 வருடம் 319 நாட்கள்) அரை சதமடித்த இரண்டாவது வீரர் என்ற சாதனை படைத்தார்.

- Advertisement -

இதற்கு முன் பிரியம் கார்க் 19 வருடம் 307 நாட்களில் ஹைதராபாத் அணிக்காக அரை சதம் அடித்ததே முந்தைய சாதனையாகும். இறுதியில் சபாஷ் அகமது அதிரடியாக 14* (7) ரன்கள் எடுத்த உதவியுடன் 20 ஓவரில் 182/9 ரன்கள் குவித்து அசத்தியது. குறிப்பாக 39/3 என்ற மோசமான துவக்கத்தை பெற்று தடுமாறி அந்த அணி 150 தாண்டுமா என்று எதிர்பார்க்கப்பட்ட போது நித்திஷ் ரெட்டி, அப்துல் சமத் போன்ற இளம் வீரர்களின் அதிரடியால் வெற்றிக்கு போராடுவதற்கு தேவையான ஸ்கோரை எடுத்துள்ளது.

இதையும் படிங்க: 2 ஆண்டுகள் 2 பேரின் மூலம் கேப்டன் பொறுப்பிற்காக பட்டை தீட்டப்பட்ட ருதுராஜ் கெய்க்வாட் – என்ன நடந்தது?

இருப்பினும் அதிரடியாக விளையாடினால் இந்த ஸ்கோர் போதாது என்பதால் ஹைதராபாத் பந்து வீச்சில் அசத்த வேண்டிய நிலையில் உள்ளது. மறுபுறம் பஞ்சாப் அணி சார்பில் பந்து வீச்சில் அதிகபட்சமாக அர்ஷிதீப் சிங் 4, சாம் கரண் 2, ஹர்ஷல் படேல் 2 விக்கெட்டுகளை எடுத்தனர். இதைத்தொடர்ந்து 183 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி பேட்டிங் செய்து வருகிறது.

Advertisement