
மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலியா – இந்தியா அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அப்போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 474 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடும் இந்தியா மூன்றாவது நாள் முடிவில் 358-9 ரன்கள் எடுத்து வெற்றிக்கு போராடி வருகிறது. இந்தியாவுக்கு ஜெய்ஸ்வால் 82 ரன்கள் குவித்து அசத்தினார்.
ஆனால் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, ராகுல், ஜடேஜா, ரிஷப் பண்ட் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் 221-7 என தடுமாறிய இந்தியாவை நித்திஷ் ரெட்டி வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் 127 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஃபாலோ ஆன் அவமானத்தை பெறுவதில் இருந்து காப்பாற்றினார்கள். அதில் வாசிங்டன் சுந்தர் 50 ரன்கள் குவித்து பெவிலியன் திரும்பினார்.
ஆனால் மறுபுறம் ஆஸ்திரேலியாவுக்கு சிம்ம சொப்பனமாக விளையாடிய நித்திஷ் ரெட்டி தனது முதல் சதத்தை அடித்து 105* ரன்கள் குவித்தார். அவர்களுடைய ஆட்டத்தால் இப்போட்டியில் போராடினால் வெல்லலாம் என்ற நிலைக்கு இந்திய அணி வந்துள்ளது. முன்னதாக இந்தப் போட்டியில் தம்முடைய மகன் சதத்தை அடித்ததை நித்திஷ் ரெட்டி தந்தை முட்யலு ரெட்டி அவர்கள் மைதானத்திலிருந்து நேரடியாக பார்த்து ஆனந்தக் கண்ணீர் விட்டார்.
அவரை போட்டி முடிந்ததும் ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட் மற்றும் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் ஆகியோர் நேரடியாக சென்று பேட்டி எடுத்தார்கள். இருப்பினும் அவர்களிடம் ஆங்கிலம் முழுமையாக தெரியாததாலும் ஆனந்த கண்ணீராலும் நிதிஷ் ரெட்டி தந்தை பேச முடியாமல் தடுமாறினார். ஆனால் கில்கிறிஸ்ட் போன்ற ஜாம்பவான் வந்து பேட்டி எடுக்கும் அளவுக்கு நிதிஷ் ரெட்டி தனது தந்தையை பெருமைப்படுத்தினார்.
மகனுக்காக தனது வேலையை விட்டு கிரிக்கெட்டில் உதவிய தந்தைக்கு இதை விட பெரிய கௌரவம் கிடைக்காது என்றே சொல்லலாம். மேலும் போட்டி முடிந்ததும் ஹோட்டல் அருகில் இருந்த தமது குடும்பத்தை பார்க்க நிதிஷ் சென்றார். அப்போது அவரை அம்மா ஆனந்தக் கண்ணீருடன் கட்டிபிடித்து முத்தம் கொடுத்து வரவேற்றார்.
இதையும் படிங்க: ரிஷப் பண்ட் மேல தப்பு இல்ல.. ஆனாலும் அவர் இதை கத்துக்கனும் – ரவி சாஸ்திரி அட்வைஸ்
அப்படியே அருகில் இருந்த தங்கை மற்றும் அப்பா ஆகியோரும் அவரை உணர்ச்சி பொங்க வரவேற்றார்கள். அப்போது நிதிஷ் அப்பா பேசியது பின்வருமாறு. “நிதிஷ் இன்று நன்றாக விளையாடினர். நான் பெருமையடைகிறேன். இந்த நிலையை எட்ட நாங்கள் சிரமத்தை சந்தித்தோம். இந்திய அணிக்கு நன்றியுடையவர்களாக இருக்கிறோம்” என்று கூறினார். நித்திஷ் தங்கை பேசியது பின்வருமாறு. “அண்ணனுக்கு இது எளிதான நான் பயணம் கிடையாது. நாங்கள் பெருமையாக இருக்கிறோம் என்று மட்டும் தான் சொல்வேன். அவர் சொன்னதை செய்துள்ளார்” என்று கூறினார்.