IPL 2023 : காயமடைந்த ஸ்ரேயாஸ்க்கு பதிலாக எதிர்பாரா புதிய கேப்டனை அறிவித்த கொல்கத்தா – ரசிகர்கள் வியப்பு

KKR vs SRH Tim Southee
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான 2023 ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 31 முதல் அகமதாபாத் நகரில் கோலாகலமாக துவங்குகிறது. வரலாற்றில் 16வது முறையாக நடைபெறும் இந்த தொடரின் கோப்பையை வெல்வதற்கு களமிறங்கும் 10 அணிகளில் 9 வருடங்கள் கழித்து 3வது கோப்பையை வெல்லும் லட்சியத்துடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களமிறங்குகிறது. நட்சத்திர முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் தலைமையில் கடந்த 2012இல் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்ற அந்த அணி கடைசியாக அவரது தலைமையிலேயே 2014இல் கோப்பையை வென்றிருந்தது.

அதன் பின் தினேஷ் கார்த்திக் தலைமையில் சில சீசன்களில் ஏமாற்றத்தை சந்தித்த அந்த அணி 2019 உலகக் கோப்பை வென்ற இங்கிலாந்தின் இயன் மோர்கன் தலைமையில் 2021 சீசனில் ஃபைனல் வரை சென்று சென்னையிடம் தோற்றது. அதை தொடர்ந்து வரலாற்றிலேயே முதல் முறையாக டெல்லி அணியை ஃபைனலுக்கு அழைத்துச் சென்ற கேப்டன்ஷிப் அனுபவமும் நல்ல இளமையும் திறமையும் கொண்ட இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் கொல்கத்தாவின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால் அவரது தலைமையில் கடந்த வருடம் சுமாராகவே செயல்பட்ட கொல்கத்தா பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் மீண்டும் ஏமாற்றத்திற்கு உள்ளானது.

- Advertisement -

எதிர்பாரா கேப்டன்:
குறிப்பாக வருண் சக்கரவர்த்தி, வெங்கடேஷ் ஐயர் போன்ற தக்க வைக்கப்பட்ட வீரர்கள் சொதப்பிய நிலையில் அணியை தேர்வு செய்வதில் நிர்வாக இயக்குனர் வெங்கி மைசூர் தலையிடுவதால் தம்மால் சுதந்திரமாக கேப்டனாக செயல்பட முடியவில்லை என்று ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்தது சர்ச்சைகளை ஏற்படுத்தியது. அந்த நிலையில் சமீபத்திய ஆஸ்திரேலிய தொடரின் போது காயத்தை சந்தித்த ஸ்ரேயாஸ் ஐயர் 2023 ஐபிஎல் தொடரில் விலகியதால் கேப்டனாக செயல்படப்போவது யார் என்று எதிர்பார்ப்பு அந்த அணி ரசிகர்களிடம் ஏற்பட்டது.

அந்த இடத்துக்கு சுழலில் மாயாஜாலம் நிகழ்த்தி நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வரும் சுனில் நரேன், முரட்டுத்தனமாக அடித்து வெற்றிகள் பெற்றுக் கொடுக்கும் ஆல் ரவுண்டர் ஆண்ட்ரே ரசல் மற்றும் லார்ட் என இந்திய ரசிகர்கள் கொண்டாடும் ஷார்துல் தாகூர் ஆகியோரில் யாரேனும் ஒருவர் தேர்வு செய்யப்படுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் 2023 சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை இந்திய வீரர் நித்திஷ் ராணா கேப்டனாக வழி நடத்துவார் என்று அந்த அணி நிர்வாகம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது ரசிகர்களுக்கு எதிர்பாராத ஒன்றாக அமைந்துள்ளது.

- Advertisement -

ஏனெனில் கடந்த 2021ஆம் ஆண்டு இந்தியாவுக்காக அறிமுகமான அவர் 2 டி20 மற்றும் 1 ஒருநாள் போட்டியில் சுமாராக செயல்பட்டதால் மேற்கொண்டு வாய்ப்பு பெறாமல் மொத்தமாக கழற்றி விடப்பட்டார். மேலும் கடந்த சில வருடங்களாகவே ஐபிஎல் தொடரிலும் சுமாராக செயல்பட்டு வரும் அவர் உள்ளூர் தொடரிலும் ரசிகர்கள் திரும்பி பார்க்கும் அளவுக்கு எந்த செயல்பாடுகளையும் வெளிப்படுத்தவில்லை. இருப்பினும் கடந்த 2018 முதல் தங்களது அணிக்காக விளையாடி வரும் நித்திஷ் ராணா உள்ளூர் கிரிக்கெட்டில் சயீத் முஷ்டாக் அலி கோப்பை போன்ற தொடர்களில் தனது மாநில அணிக்காக கேப்டனாக செயல்பட்ட அனுபவத்தை கொண்டுள்ளார்.

அதன் காரணமாக இந்த தொடரில் அவர் தங்களது அணியின் கேப்டனாக செயல்படுவார் என்று கொல்கத்தா நிர்வாகம் அறிவித்துள்ளது. அத்துடன் ரஞ்சி கோப்பைகளை வென்று இந்திய உள்ளூர் கிரிக்கெட்டின் மிகச்சிறந்த பயிற்சியாளராக பாராட்டப்படும் சந்திரகாந்த் பண்டிட் இந்த வருடம் கொல்கத்தா அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தான் உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக கேப்டன்ஷிப் செய்த நிதிஷ் ராணாவின் திறமைகளை உணர்ந்து கேப்டனாக நியமிக்க கொல்கத்தா அணிக்கு பரிந்துரை செய்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: IPL 2023 : எனக்கும் மறுபடியும் ஆர்.சி.பி அணிக்காக விளையாடனும்னு ஆசை தான். ஆனா.. – மனம்திறந்த ஏ.பி.டி

மொத்தத்தில் ரசிகர்கள் எதிர்பாராத வித்தியாசமான வீரரை கேப்டனாக நியமித்துள்ள கொல்கத்தா இந்த சீசனில் களமிறங்க தயாராகி வருகிறது. இருப்பினும் இந்த முடிவு பெரும்பாலான ரசிகர்களிடம் வரவேற்பை ஏற்படுத்தாமல் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement