12 பந்தில் 5 சிக்ஸர்.. ஆர்சிபியை விளாசி மைதானத்துக்கு வெளியே மெகா சிக்ஸரை பறக்க விட்ட பூரான்.. அதிரடி சாதனை

RCB vs LSG 1
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 2ஆம் தேதி பெங்களூருவில் 15வது லீக் போட்டி நடைபெற்றது. அதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதின. அந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து பேட்டிங் செய்த லக்னோவுக்கு குயிண்டன் டீ காக் அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தார்.

ஆனால் அவருடன் 53 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த கேப்டன் கே.எல். ராகுல் 20 (14) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். அந்த சமயத்தில் 32 ரன்களில் இருந்த போது கொடுத்த கேட்சை மேக்ஸ்வெல் தவற விட்டதைப் பயன்படுத்திய டீ காக் தொடர்ந்து அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார். ஆனால் எதிர்ப்புறம் தடுமாற்றமாக விளையாடிய தேவதூத் படிக்கள் 6 (11) ரன்களில் சிராஜ் வேகத்தில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.

- Advertisement -

மிரட்டிய பூரான்:
அப்போது வந்த மார்கஸ் ஸ்டோனிஸ் அதிரடியாக விளையாட முயற்சித்து 24 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்த சில ஓவர்களில் மறுபுறம் 36 பந்துகளில் 50 ரன்கள் தொட்ட டீ காக் தொடர்ந்து அதிரடியாக விளையாடி 8 பவுண்டரி 5 சிக்ஸருடன் 81 (56) ரன்கள் குவித்து அவுட்டானார். அப்போது வந்த ஆயுஸ் படோனி டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.

ஆனால் எதிர்ப்புறம் களமிறங்கியிருந்த நட்சத்திர வீரர் நிக்கோலஸ் பூரான் தம்முடைய ஸ்டைலில் அதிரடியாக விளையாடினார். குறிப்பாக ரீஸ் டாப்லி 19வது ஓவரில் 2, 3 ஆகிய பந்துகளில் அடுத்தடுத்த சிக்சர்களை பறக்க விட்டு அவர் 4வது பந்தில் சின்னசாமி மைதானத்திற்கு வெளியே பந்து பறக்கும் அளவுக்கு 106 மீட்டர் முரட்டுத்தனமான ஹாட்ரிக் சிக்சரை தெறிக்க விட்டார்.

- Advertisement -

அதன் வாயிலாக இந்த வருட ஐபிஎல் தொடரில் மிகப்பெரிய சிக்சரை அடித்த வீரர் என்ற வெங்கடேஷ் ஐயர் சாதனையை சமன் செய்த அவர் முகமது சிராஜ் வீசிய கடைசி ஓவரிலும் 2 சிக்சர்கள் அடித்தார். அந்த வகையில் கடைசி வரை அவுட்டாகாமல் ஒரு பவுண்டரி 5 சிக்சருடன் 40* (21) ரன்கள் குவித்த அவர் நல்ல ஃபினிஷிங் கொடுத்தார். அதனால் 20 ஓவரில் லக்னோ 181/5 ரன்கள் எடுத்து வெற்றிக்கு போராடுவதற்கு தேவையான ஸ்கோர் அடித்தது.

இதையும் படிங்க: தினேஷ் கார்த்திக்கின் மோசமான ஐ.பி.எல் சாதனையை சமன் செய்த ரோஹித் சர்மா – விவரம் இதோ

மறுபுறம் ஆரம்பத்தில் சிறப்பாக பந்து வீசினாலும் கடைசி நேரத்தில் வழக்கம் போல கொஞ்சம் ரன்களை வாரி வழங்கிய பெங்களூரு சார்பில் அதிகபட்சமாக கிளன் மேக்ஸ்வெல் 2 விக்கெட்டுகள் எடுத்தார். இதைத் தொடர்ந்து 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு விளையாடி வருகிறது. குறிப்பாக கடந்த போட்டியில் தோல்வியை சந்தித்த பெங்களூரு இம்முறை அதிலிருந்து மீண்டு வரும் முனைப்புடன் பேட்டிங் செய்து வருகிறது.

Advertisement