வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் 2024 கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அதில் ஆகஸ்ட் 31ஆம் தேதி செயின்ட் கிட்ஸ் நகரில் ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் – செயின்ட் கிட்ஸ் நேவிஸ் மற்றும் பட்ரியோட்ஸ் அணிகள் மோதின. அப்போட்டியில் டாஸ் வென்ற செயின்ட் கிட்ஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய ட்ரின்பாகோ அணிக்கு ஜேசன் ராய் 6 ரன்களில் அவுட்டானார். ஆனால் அடுத்ததாக வந்த நம்பிக்கை நட்சத்திரம் நிக்கோலஸ் பூரான் தம்முடைய ஸ்டைலில் எதிரணி பவுலர்களைப் பந்தாடினார். அவருடன் சேர்ந்து விளையாடிய சுனில் நரேன் தம்முடைய பங்கிற்கு அதிரடியாக விளையாடி 3 பவுண்டரி 4 சிக்ஸருடன் 38 (19) ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக வந்த செக்கேரி பாரிஸ் 13 (9) ரன்களில் அவுட்டானார்.
நிக்கோலஸ் பூரான் சரவெடி:
ஆனால் மறுபுறம் தொடர்ந்து பட்டாசாக விளையாடிய நிக்கோலஸ் பூரான் வெறும் 21 பந்துகளில் 50 ரன்கள் கடந்தார். தொடர்ந்து அதே வேகத்தில் சரவெடியாக பேட்டிங் செய்த அவர் 7 பவுண்டரி 9 சிக்ஸருடன் சதத்தைப் பற்றி கவலைப்படாமல் 97 (43) ரன்களை 225.58 ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி அவுட்டானார். அவருடன் மறுபுறம் சேர்ந்து விளையாடிய கேசி கார்ட்டி தனது பங்கிற்கு 9 பவுண்டரி 3 சிக்ஸருடன் 73* (35) ரன்கள் குவித்தார்.
அதனால் 20 ஓவரில் ட்ரின்பாகோ அணி 250-4 ரன்கள் குவித்து மிரட்டிய நிலையில் சுமாராக பந்து வீசிய செயின்ட் கிட்ஸ் சார்பில் அதிகபட்சமாக அன்றிச் நோர்ட்ஜெ 2 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத்தொடர்ந்து 251 ரன்களை துரத்திய செய்ன்ட் கிட்ஸ் அணி முடிந்தளவுக்கு அதிரடியாக விளையாட முயற்சித்தும் 20 ஓவரில் 206-8 ரன்கள் எடுத்து தோல்வியை சந்தித்தது. அதிகபட்சமாக மிக்லே லூயிஸ் 56, ட்ரிஷன் ஸ்டப்ஸ் 39, எவின் லெவிஸ் 39 ரன்கள் எடுத்தனர்.
உலக சாதனை:
அதன் காரணமாக 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ட்ரின்பாகோ அணிக்கு 97 ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றிய நிக்கோலஸ் பூரான் ஆட்டநாயகன் விருதை வென்றார். இதே போல இந்த வருடம் விளையாடிய டி20 கிரிக்கெட்டில் அவர் 58 போட்டிகளில் 13 அரை சதங்கள் உட்பட 1844 ரன்களையும் 139 சிக்ஸர்களையும் அடித்துள்ளார்.
இதையும் படிங்க: ரோஹித் சர்மா சொல்றது தான் கரெக்ட்.. அஸ்வின் கருத்துக்கு எதிராக ஜாம்பவான் ஜான்டி ரோட்ஸ் பேட்டி
இதன் வாயிலாக டி20 கிரிக்கெட்டில் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக சிக்ஸர்களை அடித்த வீரர் என்ற கிறிஸ் கெய்ல் சாதனையை உடைத்துள்ள நிக்கோலஸ் பூரான் புதிய உலக சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. நிக்கோலஸ் பூரான் : 139* (2024)
2. கிறிஸ் கெய்ல் : 135 (2015)
3. கிறிஸ் கெய்ல் : 121 (2012)
4. கிறிஸ் கெய்ல் : 116 (2011)
5. கிறிஸ் கெய்ல் : 112 (2016)
6. கிறிஸ் கெய்ல் : 101 (2017)
7. ஆண்ட்ரே ரசல் : 101 (2019)



