
வங்கதேசத்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2 – 0 (2) என்ற கணக்கில் இந்தியா வென்றது. அதனால் பாகிஸ்தானை போல வீழ்த்துவோம் என்று சவால் விடுத்த வங்கதேசத்துக்கு இந்தியா செயலில் தக்க பதிலடி கொடுத்தது. ஆனால் அதன் பின்பும் டி20 தொடரில் இந்தியாவை வீழ்த்துவோம் என்று வங்கதேச கேப்டன் நஜ்முல் சாண்டோ சவால் விடுத்தார்.
குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் பெரிய அணி என்பதை தாண்டி போட்டி நாளன்று சிறப்பாக விளையாடுபவர்களே வெல்வார்கள் என்று சாண்டோ கூறியிருந்தார். அந்த அணி தாங்களாக இருந்து இந்தியாவை வீழ்த்துவோம் என்று அவர் தெரிவித்திருந்தார். ஆனால் இதுவரை நடைபெற்று 2 போட்டிகளிலும் வங்கதேசத்தை அடித்து நொறுக்கிய இந்தியா அடுத்தடுத்த வெற்றிகளுடன் 2 – 0* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியுள்ளது.
இதைத் தொடர்ந்து சம்பிரதாய கடைசிப் போட்டி அக்டோபர் 12ஆம் தேதி ஹைதராபாத் நகரில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்தியாவிடம் தோற்றதை அதிர்ஷ்டமாக நினைப்பதாக வங்கதேச அணியின் துணைப் பயிற்சியாளர் நிக் போதஸ் தெரிவித்துள்ளார். ஏனெனில் உலகின் நம்பர் ஒன் அணியான இந்தியாவிடம் தோற்றதால் நிறைய முன்னேற்ற பாடங்களைக் கற்றதாக அவர் வெளிப்படையாக கூறியுள்ளார்.
இது பற்றி 3வது போட்டிக்கு முன் அவர் பேசியது பின்வருமாறு. “இந்தியா தங்களிடம் இருக்கும் திறமை காரணமாக பேட்டிங், பவுலிங் ஆகிய இரண்டிலும் எங்கள் மீது அபாரமான அழுத்தத்தை போட்டனர். அதே சமயம் நீங்கள் எங்கே முன்னேற வேண்டும் என்பதையும் இந்தியா தெரிய வைத்தது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள நாங்கள் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும்”
“ஏனெனில் இங்கே நிறைய கற்றுக் கொள்ள முடியும். நீண்ட நேரமாக எப்படி அழுத்தத்தை உள்வாங்குவது? எப்படி அழுத்தமான சூழ்நிலைகளைப் படிப்பது? அதற்கு எப்படி தயாராவது? போன்றவற்றை தெரிந்து கொள்ளலாம். இந்தியாவுக்கு எதிராக விளையாடுவது கௌரவமாகும். ஏனெனில் உலகின் சிறந்த அணிக்கு எதிராக விளையாடும் போது நீங்கள் எதில் முன்னேற வேண்டும் என்பதை புரிந்துகொள்ள அவர்கள் உதவுகின்றனர்”
இதையும் படிங்க: 3 ஆவது டி20 போட்டியிலாவது ஹர்ஷித் ராணா அறிமுகம் ஆவாரா? – துணைப்பயிற்சியாளர் பதில் என்ன?
“அந்த வகையில் நாங்கள் ஒரு சிறந்த அணிக்கு எதிராக அவர்களுடைய சொந்த மண்ணில் விளையாடியுள்ளோம். ஆம் அதனுடன் சில மோசமான அனுபவங்களும் வந்துள்ளன. இருப்பினும் பேட்டிங்கில் நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு நாங்களே செயல்படவில்லை. அது பற்றி நாங்கள் பேசுகிறோம். ஆனால் களத்தில் வந்த செயல்பாடுகள் வேறு மாதிரியாக இருக்கிறது. இங்கே நாங்கள் 170, 180 ரன்களை எடுக்க விரும்புகிறோம்” என்று கூறினார்.