தல தோனியின் இடத்தை நிரப்ப முடியுமா? கேப்டனாக ருதுராஜ் பெற்ற வெற்றிகள் மற்றும் வரலாறு இதோ

Ruturaj Gaikwad Captaincy
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியிலிருந்து ஜாம்பவான் எம்எஸ் தோனி விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்துள்ளது. ஐபிஎல் துவங்கப்பட்ட 2008 முதல் தோனி தலைமையில் விளையாடிய சென்னை 14 சீசன்களில் 12 முறை பிளே ஆஃப் சுற்றுக்கு சென்று 10 முறை ஃபைனலுக்கு தகுதி பெற்று 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக சாதனை படைத்துள்ளது.

அதே போல 5 ஐபிஎல் கோப்பைகள், 2 சாம்பியன்ஸ் லீக் டி20 கோப்பைகள் என 7 சாம்பியன் பட்டங்களை வென்று கொடுத்த தோனி மகத்தான கேப்டனாக சாதனை படைத்துள்ளார். இருப்பினும் இன்னும் சில மாதங்களில் 42 வயதை தொட உள்ள அவர் கடந்த வருடமே முழங்கால் வலியால் அவதிப்பட்டதை பார்த்தோம்.

- Advertisement -

ருதுராஜ் சாதிப்பாரா:
எனவே வருங்காலத்தை கருத்தில் கொண்டு ருதுராஜ் கைக்வாட் கையில் கேப்டன்ஷிப் பொறுப்பை தோனி ஒப்படைத்துள்ளார். இந்த சமயத்தில் ருதுராஜ் கைக்வாட் கேப்டன்ஷிப் பற்றிய வரலாற்றை புரட்டிப் பார்ப்போம். மகாராஷ்டிராவை சேர்ந்த அவர் கடந்த 2020 முதல் தன்னுடைய மாநில அணிக்காக உள்ளூர் தொடர்களில் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

குறிப்பாக அவருடைய தலைமையில் 2022/23 விஜய் ஹசாரே கோப்பையில் சிறப்பாக விளையாடிய மகாராஷ்டிரா ஃபைனல் வரை சென்று அசத்தியது. சொல்லப்போனால் அந்த தொடரில் 5 இன்னிங்ஸில் இரட்டை சதம் உட்பட 660 ரன்கள் விளாசிய ருதுராஜ் அதிக ரன்கள் அடித்த வீரராக சாதனை படைத்தார். அதைத்தொடர்ந்து கடந்த வருடம் சீனாவில் நடைபெற்ற 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக ருதுராஜ் செயல்பட்டார்.

- Advertisement -

அந்தத் தொடரில் ஜெய்ஸ்வால், ரிங்கு சிங் போன்ற இளம் வீரர்களை நன்றாக வழி நடத்திய அவருடைய தலைமையில் இந்தியா தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்தது. அதன் வாயிலாக 2007 டி20 உலகக் கோப்பையை வென்ற தோனிக்கு பின் ஒரு பெரிய பலதரப்பு தொடரை வென்ற இரண்டாவது இந்திய கேப்டன் என்ற பெருமையை ருதுராஜ் பெற்றார். அதைத் தொடர்ந்து இந்தியா வெற்றி கண்ட 2023 அயர்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா டி20 தொடர்களில் ருதுராஜ் துணை கேப்டனாக செயல்பட்டுள்ளார்.

இதையும் படிங்க: அதை மறுக்க முடியாது.. மிகப்பெரிய பாரம்பரியம் கிடைச்சுருக்கு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜை வாழ்த்திய சூரியகுமார்

அந்த வகையில் தோனியை போலவே அமைதியாக இருக்கும் குணத்தை கொண்ட ருதுராஜ் கேப்டன்ஷிப் வேலையில் ஓரளவு அசத்தக்கூடிய திறமையை பெற்றுள்ளார் என்றே சொல்லலாம். எப்படி இருந்தாலும் அவரால் தோனியாக முடியாது என்பது நிதர்சனம். இருப்பினும் தோனியின் துணையுடன் தரமான வீரர்களை கொண்ட சிஎஸ்கே அணியை அவர் இம்முறை குறைந்தபட்சம் பிளே ஆஃப் சுற்றுக்கு அழைத்துச் செல்வார் என்று நம்பலாம்.

Advertisement