அதை மறுக்க முடியாது.. மிகப்பெரிய பாரம்பரியம் கிடைச்சுருக்கு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜை வாழ்த்திய சூரியகுமார்

Suryakumar Ruturaj
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியனாக களமிறங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எம்எஸ் தோனி கேப்டன்ஷிப் பதவியிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2008 முதல் கேப்டனாக செயல்பட்டு வந்த அவருடைய தலைமையில் 5 கோப்பைகளை வென்றுள்ள சென்னை வெற்றிகரமான அணியாக சாதனை படைத்துள்ளது.

மேலும் 2 சாம்பியன்ஸ் லீக் டி20 கோப்பைகளையும் வென்றுள்ள தோனி 133 வெற்றிகளை பதிவு செய்து ஐபிஎல் வரலாற்றில் வெற்றிகரமான கேப்டனாகவும் சாதனை படைத்துள்ளார். ஆனால் இன்னும் சில மாதங்களில் 42 வயதை தொடும் அவர் கடந்த வருடமே முழங்கால் வலியால் அவதிப்பட்டார். எனவே வருங்காலத்தை கருத்தில் கொண்டு கேப்டன்ஷிப் பொறுப்பை ருதுராஜ் கைக்வாட் கையில் தோனி ஒப்படைத்துள்ளதாக சிஎஸ்கே நிர்வாக அறிவித்துள்ளது.

- Advertisement -

வாழ்த்திய சூர்யகுமார்:
மறுபுறம் கடந்த 2019ஆம் ஆண்டு தோனி தலைமையில் அறிமுகமான ருதுராஜ் 2021 சீசனில் அதிக ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை வென்று சென்னை 4வது கோப்பையை வெல்ல உதவினார். அதே போல கடந்த வருடம் கிட்டத்தட்ட 500 ரன்கள் அடித்து சென்னை 5வது கோப்பையை வெல்ல உதவிய அவர் இந்திய அணிக்காகவும் அறிமுகமாகி கணிசமான போட்டிகளில் விளையாடியுள்ளார்.

அந்த வகையில் நல்ல இளம் வீரராக தன்னை அடையாளப்படுத்தியுள்ள அவர் உள்ளூர் தொடரில் மகாராஷ்டிரா அணிக்காக கடந்த 5 வருடங்களாக கேப்டனாக செயல்பட்டு வருகிறார். எனவே தமக்கு அடுத்தபடியாக சிஎஸ்கே அணியை வழி நடத்துவதற்கு ருதுராஜ் தகுதியானவர் என்று கருதி தோனி இந்த முடிவை எடுத்துள்ளார் என்று நம்பப்படுகிறது.

- Advertisement -

இந்நிலையில் தோனி போன்ற மகத்தான கேப்டனின் இடத்தை ருதுராஜ் நிரப்புவது கடினம் என்று தெரியும் என சூரியகுமார் யாதவ் கூறியுள்ளார். ஆனால் இயற்கையாகவே அமைதியை கொண்டுள்ள உங்களால் தோனி விட்டு சென்ற சிஎஸ்கே அணியின் மரபை முன்னோக்கி எடுத்துச் செல்ல முடியும் என்று அவருக்கு சூரியகுமார் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது பற்றி இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு.

இதையும் படிங்க: கதை அப்படி போகுதா.. வெளிநாட்டு வீரர்களின் சம்பளத்தில் கைவைக்கும் பிசிசிஐ.. ஐபிஎல் சேர்மேன் வெளியிட்ட அறிவிப்பு

“நீங்கள் நிரப்புவதற்கு மிகப்பெரிய இடம் கிடைத்துள்ளது என்பதை மறுக்க முடியாது தம்பி. ஆனால் உங்களின் குளிர்ச்சியான மற்றும் அமைதியான இயல்பினால் இந்த அணியின் பாரம்பரியத்தை நீங்கள் சிறப்பாக முன்னெடுத்துச் செல்வீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். உங்கள் அனைவருக்கும் அன்பையும் அதிர்ஷ்டத்தையும் வாழ்த்துகிறேன்” என்று கூறினார். இதைத்தொடர்ந்து மார்ச் 22ஆம் தேதி முதல் போட்டியில் பெங்களூரு அணியை சிஎஸ்கே கேப்டனாக ருதுராஜ் எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.

Advertisement