தெ.ஆ வையே சாய்ச்சவங்க.. உங்கள சும்மா விடுவாங்கலா? பங்களாதேஷை மண்ணை கவ்வ வைத்த நெதர்லாந்து – அசத்தல் வெற்றி

NED vs BAN
- Advertisement -

இந்தியாவில் ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 தொடரில் அக்டோபர் 28ஆம் தேதி உலகப்புகழ் பெற்ற கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் மதியம் 2 மணிக்கு நடைபெற்ற 28வது லீக் போட்டியில் கத்துக்குட்டிகளான நெதர்லாந்து மற்றும் வங்கதேச அணிகள் மோதின. அந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து கடுமையாக போராடி 50 ஓவரில் 229 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

அந்த அணிக்கு விக்ரம்ஜித் சிங் 3, மேக்ஸ் ஓ’தாவுத் 0, ஆகர்மேன் 15 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் குறைந்த ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். ஆனாலும் 3வது இடத்தில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய வைஸ்லே பரேசி 8 பவுண்டரியுடன் 41 (42) ரன்களும் மிடில் ஆர்டரில் கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் நிதானமாக விளையாடி 6 பவுண்டரியுடன் 68 ரன்களும் எடுத்தனர்.

- Advertisement -

அவர்களுடன் எங்கேல்பேர்ச்ட் 35, லோகன் வேன் பீக் 23* (16) ரன்கள் எடுத்து அசத்திய நிலையில் வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக சோரிபுல் இஸ்லாம், தஸ்கின் அகமது, முஸ்தஃபிஷர் ரஹ்மான், மெகிதி ஹசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 230 என்ற சுலபமான இலக்கை துரத்திய வங்கதேசத்திற்கு ஆரம்பத்திலேயே நம்பிக்கை நட்சத்திரம் லிட்டன் தாஸ் தடுமாற்றமாக விளையாடி 3 (12) ரன்களில் அவுட்டாக டன்சித் ஹசன் 15, நஜூமுள் சாண்டோவும் 9 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றத்தை கொடுத்தனர்.

அதனால் சரிவை சந்தித்த அந்த அணிக்கு கை கொடுத்து காப்பாற்ற வேண்டிய கேப்டன் சாகிப் அல் ஹசனை 5 ரன்களில் காலி செய்த வேன் மீக்ரன் நட்சத்திர அனுபவ வீரர் முஸ்பிக்கர் ரஹீமையும் 1 ரன்னில் அவுட்டாக்கி போட்டியில் திருப்பு முனையை ஏற்படுத்தினார். அதன் காரணமாக 70/6 என பெரிய சரிவை சந்தித்த வங்கதேசத்தை மிடில் ஆர்டரில் காப்பாற்ற போராடிய முகமதுல்லாவும் 20 ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினார்கள்.

- Advertisement -

அப்படி சுமாரான பேட்டிங்கை வெளிப்படுத்திய வங்கதேசம் 42.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 142 ரன்களுக்கு சுருண்டு தோல்வியை சந்தித்தது. அந்தளவுக்கு பந்து வீச்சில் அபாரமாக செயல்பட்டு 87 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றி பெற்ற நெதர்லாந்து சார்பில் அதிகபட்சமாக வேன் மீக்ரன் 4, பஸ் டீ லீடி 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

இதையும் படிங்க: மீண்டும் ஃபார்முக்கு வந்த ஆஸ்திரேலியா.. உலகின் வேறு எந்த அணியும் செய்யாத இரட்டை உலக சாதனை

அதனால் ஏற்கனவே வலுவான தென்னாபிரிக்காவை அசால்டாக தோற்கடித்த நெதர்லாந்து 6 போட்டிகளில் 2வது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் 8வது இடத்திற்கு முன்னேறியது. சொல்லப்போனால் இதன் வாயிலாக உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட தொடரில் 2 வெற்றிகளை பதிவு செய்து நெதர்லாந்து சரித்திர சாதனை படைத்துள்ளது. மறுபுறம் 6 போட்டியில் 5வது தோல்வியை பதிவு செய்த வங்கதேசம் இத்தொடரிலிருந்து லீக் சுற்றுடன் 99% வெளியேறியுள்ளது அந்நாட்டு ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

Advertisement