
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல் முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்தது. அதனால் 18 வருடங்கள் கழித்து விராட் கோலி கோப்பையை வென்றது பலரையும் மகிழ்ச்சியடைய வைத்தது. ஆனால் மறுபுறம் பஞ்சாப் கிங்ஸ் அணி இறுதிப்போட்டியில் வெறும் ஒரு சிக்சர் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்து 18வது வருடமாக கோப்பையை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டது.
இந்நிலையில் அந்தத் தோல்விக்கு தாமே காரணம் என்று பஞ்சாப் அணிக்காக விளையாடும் வீரர் நேஹல் வதேரா ஏமாற்றம் தெரிவித்துள்ளார். அந்தப் போட்டியில் 191 ரன்களை துரத்திய பஞ்சாப் அணிக்கு மிடில் ஆடரில் களமிறங்கிய அவர் தடுமாற்றமாக விளையாடி 15 (18) ரன்கள் மட்டுமே எடுத்து பெரிய பின்னடைவை ஏற்படுத்தினார். அதனால் கடைசியில் சசாங் 61* ரன்கள் எடுத்தும் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை.
இந்நிலையில் அந்த தோல்வி பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “முழுவதுமாக தோல்விக்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். அந்த சமயத்தில் நான் நன்றாக விளையாடியிருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக நாங்கள் வெற்றியைப் பெற்றிருப்போம். பிட்ச் மேலே எந்தக் குறையும் சொல்ல மாட்டேன். ஏனெனில் பெங்களூரு அங்கே 190 ரன்கள் அடித்தது”
“அந்த சமயத்தில் நான் போட்டியை ஆழமாக எடுத்துச் செல்வது பற்றி நினைத்தேன். போட்டியை ஆழமாக எடுத்துச் சென்று ஃபினிஷிங் செய்வது பற்றி நான் நம்புகிறேன். இருப்பினும் அது நான் ஃபினிஷிங் செய்யாமல் ஏமாற்றத்தைச் சந்தித்த நாட்களில் ஒன்றாகும். ஐபிஎல் 2025 தொடர் முழுவதுமே அதிரடியாக விளையாட வேண்டிய சமயத்தில் வேகமாக விளையாடியது எனக்கு வேலை செய்தது”
“ஆனால் ஃபைனலில் மட்டும் அது வேலை செய்யவில்லை. சில நேரங்களில் அது வேலை செய்யும் சில நாட்களில் நினைத்தது நடக்காது. அது பற்றி நான் வருத்தப்படவில்லை. ஏனெனில் அந்த சமயத்தில் நாங்கள் விக்கெட்டுகள் இழந்திருந்ததால் போட்டியை ஆழமாக எடுத்துச் செல்ல விரும்பினேன். இருப்பினும் நான் கொஞ்சம் வேகமாக விளையாயிருக்க வேண்டும்”
இதையும் படிங்க: 212க்கு அவுட்.. ஃபைனலில் ஆஸியை தெறிக்க விடும் தெ.ஆ.. டொனால்ட், மோர்கலை முந்தி ரபாடா 2 சாதனை
“அதிலிருந்து பாடத்தைக் கற்றுள்ள நான் வருங்காலங்களில் என்னுடைய அணியின் வெற்றிக்காக உதவுவேன். நாங்கள் 11 வருடம் கழித்து இறுதிப்போட்டிக்கு சென்றது பெரிய சாதனை. முக்கிய நேரத்தில் எங்களுக்கு சாதகமாக வெற்றி கிடைக்கா விட்டாலும் மற்ற அனைத்தும் சிறப்பாக அமைந்தது. 7 போட்டிகளில் 200+ ரன்கள் அடித்த நாங்கள் மொத்தமாக இந்த வருடம் 3000க்கும் மேற்பட்ட ரன்களை அடித்தோம். எங்களைப் பொறுத்த வரை அது பெரிய சாதனை” என்று கூறினார்.