
சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்து விளங்கிய வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு ஹால் ஆஃப் ஃபேம் எனும் கௌரவ விருதை ஐசிசி அறிவிப்பது வழக்கமாகும். குறிப்பாக சர்வதேச கிரிக்கெட்டில் தங்களுடைய நாட்டுக்காக சிறந்து விளங்கி புதிய பரிணாமத்தை ஏற்படுத்தியவர்களுக்கு ஐசிசி இந்த விருதை 2009 முதல் வழங்கி வருகிறது. அந்த வரிசையில் 2024ஆம் ஆண்டுக்கான அந்த விருதை ஐசிசி அறிவித்துள்ளது.
அதில் முதலாவதாக தென்னாப்பிரிக்கா அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரர் ஏபி டீ வில்லியர்ஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். எப்படி போட்டாலும் அனைத்து திசைகளிலும் அடித்து நொறுக்கும் திறமையை கொண்ட அவர் மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என்ற பாராட்டுகளைப் பெற்றவர். அத்துடன் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமான சதமடித்த வீரராகவும் அவர் சாதனை படைத்துள்ளார்.
தென்னாபிரிக்காவுக்காக 14 வருடங்கள் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய அவர் 20000க்கும் மேற்பட்ட ரன்களை குவித்து வெற்றிகளில் பங்காற்றியுள்ளார். அவரைத் தொடர்ந்து முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் சர் அலெஸ்டர் குக் புதிய ஹால் ஆஃப் பேம் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது. 161 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 12472 ரன்கள் குவித்த குக் இங்கிலாந்து அணியின் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக போற்றப்படுகிறார்.
சொல்லப்போனால் சமீபத்தில் ஜோ ரூட் உடைப்பதற்கு முன்பு வரை இங்கிலாந்துக்காக அதிக டெஸ்ட் ரன்கள் மற்றும் சதங்கள் அடித்த வீரராக குக் சாதனை படைத்திருந்தார். அந்த இருவருடன் முன்னாள் இந்திய ஜாம்பவான் வீராங்கனை நீத்து டேவிட் இந்த கௌரவ விருதை பெறுவதாகவும் ஐசிசி அறிவித்துள்ளது. இந்தியாவுக்காக அவர் 97 ஒருநாள் மற்றும் 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
குறிப்பாக ஒருநாள் கிரிக்கெட்டில் 141 விக்கெட்டுகளை எடுத்துள்ள அவர் அதிக விக்கெட்கள் எடுத்த இந்திய ஸ்பின்னர் என்ற சாதனை படைத்துள்ளார். 1995 – 2008 வரையிலான காலக்கட்டங்களில் இந்தியாவுக்காக விளையாடி வெற்றிகளில் பங்காற்றிய அவர் தற்போது ஹால் ஆஃப் பேம் விருதை வென்றுள்ளார். இதன் வாயிலாக டயானா எடுல்ஜிக்கு பின் இந்த ஐசிசி விருதை வெல்லும் 2வது இந்திய வீராங்கனை என்ற சாதனையும் அவர் படைத்துள்ளார்.
இதையும் படிங்க: 211/2 டூ 225/6.. பென் டக்கெட் சதத்தை தாண்டி.. இங்கிலாந்தை சரித்த பாகிஸ்தான்.. முதல் முறையாக ஓங்கிய கை
இந்த அங்கீகாரத்தை பெறுவது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ள நீத்து டேவிட் தமக்கு ஆதரவளித்த பிசிசிஐ மற்றும் இந்திய ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அந்த மூவருக்கும் ஐசிசி மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இதையடுத்து வரும் வரம் அந்த மூவருக்கும் இந்த விருதுகளை ஐசிசி வழங்கி பாராட்ட உள்ளது குறிப்பிடத்தக்கது.