பாகிஸ்தானுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இங்கிலாந்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற பாகிஸ்தான் ஆரம்பத்திலேயே முன்னிலை வகிக்கிறது. அந்த நிலையில் அத்தொடரின் இரண்டாவது போட்டி அக்டோபர் 15ஆம் தேதி முல்தான் மைதானத்தில் துவங்கியது. அப்போட்டியில் பாபர் அசாம், நாசிம் ஷா, சாகின் அப்ரிடி ஆகிய 3 வீரர்களை பாகிஸ்தான் அதிரடியாக கழற்றி விட்டது.
அந்த சூழ்நிலையில் துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய அந்த அணி முதல் இன்னிங்ஸில் போராடி 366 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தானுக்கு கேப்டன் சான் மசூத் 3, அப்துல்லா ஷபிக் 7, சௌத் ஷகீல் 4 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர்.
பென் டக்கெட் சதம்:
இருப்பினும் பாபர் அசாமுக்கு பதிலாக வாய்ப்பு பெற்ற கம்ரான் குலாம் தனது அறிமுகப் போட்டியிலேயே சதமடித்து 118 ரன்கள் குவித்து அசத்தினார். அவருடன் சாய்ப் ஆயுப் 77, முகமது ரிஸ்வான் 41, ஆகா சல்மான் 31, அமீர் ஜமால் 37, நோமன் அலி 32 ரன்கள் எடுத்து கை கொடுத்தனர். இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக ஜாக் லீச் 4, பிரைடன் கார்ஸ் 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
அதன் பின் களமிறங்கிய இங்கிலாந்துக்கு 73 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜாக் கிராவ்லி 27 ரன்களில் அவுட்டானார். அவருடன் சேர்ந்து விளையாடிய பென் டக்கெட் சிறப்பாக பேட்டிங் செய்து அரை சதமடித்தார். தொடர்ந்து 88 ரன்கள் அடித்த போது டெஸ்ட் கிரிக்கெட்டில் பந்துகள் அடிப்படையில் அதிவேகமாக 2000 ரன்கள் அடித்த வீரர் என்ற டிம் சௌதீயின் (2418 பந்துகள்) சாதனையை உடைத்த பென் டக்கெட் (2293 பந்துகளில்) புதிய உலக சாதனை படைத்தார். ஆனால் எதிர்ப்புறம் வந்த ஓலி போப்பை 29 ரன்களில் போல்டாக்கிய சஜித் கான் அடுத்ததாக வந்த நம்பிக்கை நட்சத்திரம் ஜோ ரூட்டையும் 34 ரன்கள் கிளீன் போல்ட்டாக்கினார்.
ஓங்கும் பாகிஸ்தான்:
தற்போது முரட்டுத்தனமான ஃபார்மில் இருக்கும் ஜோ ரூட்டை அவுட்டாக்கி ஆச்சரியத்தை ஏற்படுத்திய அவர் மறுபுறம் சதமடித்து சவாலை கொடுத்த பென் டக்கெட்டையும் 114 ரன்களில் அவுட்டாகி திருப்புமுனையை உண்டாக்கினார். அதோடு நிறுத்தாத சஜித் கான் அடுத்ததாக வந்த ஹாரி ப்ரூக்கை 9 ரன்களில் அவுட்டாக்கிய நிலையில் அடுத்ததாக வந்த கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 1 ரன்னில் நோமன் அலியிடம் சிக்கினார்.
இதையும் படிங்க: அந்த 3 பசங்களையும் ஆஸ்திரேலியா கூட்டிட்டு போற பிளான் இருக்கு – ரோஹித் சர்மா அறிவிப்பு
அதனால் 211-2 என்ற நல்ல நிலையில் இருந்த இங்கிலாந்து திடீரென 225-6 என சரிந்தது. அப்போது நிறைவுக்கு வந்த இரண்டாவது நாள் ஆட்டத்தின் முடிவில் இங்கிலாந்து 239-6 ரன்கள் எடுத்து இன்னும் பாகிஸ்தானை விட 127 ரன்கள் பின்தங்கியுள்ளது. களத்தில் ஜேமி ஸ்மித் 12*, பிரைடன் கார்ஸ் 2* ரன்களுடன் உள்ளனர். அந்த வகையில் இரண்டாவது நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் மிகச் சிறப்பாக விளையாடி நீண்ட நாட்கள் கழித்து தங்களுடைய கையை ஓங்கியுள்ளது என்று சொல்லலாம்.



