இந்த நேரத்துல இந்தியாவுக்கு ஒரு தோல்வி வேணும்.. தோனி சொன்ன காரணத்தை பகிர்ந்த ரவி சாஸ்திரி

- Advertisement -

கோலாகலமாக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய முதல் 5 போட்டிகளில் தொடர்ந்து 5 வெற்றிகளை பதிவு செய்து புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் ஜொலித்து வருகிறது. குறிப்பாக வலுவான ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளை தோற்கடித்த இந்தியா சொந்த மண்ணில் தங்களை வலுவான அணி என்பதை நிரூபித்து வருகிறது.

அதிலும் குறிப்பாக பாகிஸ்தானை உலகக் கோப்பையில் தொடர்ந்து 8வது முறையாக தோற்கடித்து கௌரவத்தை தக்க வைத்த இந்தியா ஐசிசி தொடர்களில் 20 வருடங்கள் கழித்து முதல் முறையாக நியூசிலாந்தை தோற்கடித்து மோசமான வரலாற்றுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இதன் காரணமாக 2011 போல சொந்த மண்ணில் இம்முறை கண்டிப்பாக இந்தியா கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் ஆழமாக உருவாகியுள்ளது.

- Advertisement -

தோனியின் கூற்று:
ஏனெனில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, ராகுல் குல்தீப் யாதவ், பும்ரா, ஷமி பெரும்பாலான முக்கிய வீரர்கள் நல்ல ஃபார்மில் எதிரணிகளை தெறிக்க விடும் செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகின்றனர். சொல்லப்போனால் இந்த உலகக்கோப்பையில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து போன்ற டாப் அணிகள் குறைந்தது ஒரு தோல்வியை பதிவு செய்துள்ளது.

ஆனால் இந்தியா மட்டுமே இதுவரை தோல்வியை சந்திக்காத ஒரே அணியாக வெற்றி நடை போட்டு வருகிறது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இந்நிலையில் பொதுவாகவே உலகக்கோப்பையில் லீக் சுற்றிலேயே ஒரு தோல்வியை சந்திப்பது அவசியம் என்று முன்னாள் கேப்டன் தோனி அடிக்கடி கூறுவார் என ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

- Advertisement -

அதாவது ஆரம்பத்திலேயே நீங்கள் தோற்கும் போது உங்களுடைய பலம் பலவீனங்கள் வெளிப்பட்டு அதை நாக் அவுட் சுற்றுக்கு முன்பாக சரி செய்து கொள்ளும் வாய்ப்பு லீக் சுற்றிலேயே கிடைக்கும் என்று ரவி சாஸ்திரி கூறுயுள்ளார். ஆனால் நாக் அவுட் சுற்றில் திடீரென தோல்வியை சந்தித்தால் எந்த தவறையும் திருத்த முடியாமல் வெளியேற நேரிடும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

இதையும் படிங்க: கங்குலியின் 20 வருட மாஸ் சாதனை தகர்ப்பு.. ஆசிய கண்டத்தில் முதல் வீரராக ரோஹித் சர்மா வரலாற்று சாதனை

“2011 உலகக் கோப்பையில் இந்தியா ஒரு போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக தோல்வியை சந்தித்தது. ஆனால் அதில் இந்தியா கோப்பையை வென்றது. மேலும் “சில சமயங்களில் உலக கோப்பையின் லீக் சுற்றில் ஒரு ஆட்டத்தில் தோல்வியடைவது நல்லது. ஏனெனில் செமி ஃபைனல் அல்லது ஃபைனல் போன்ற போட்டியில் திடீரென நீங்கள் தவறின் பிடியில் சிக்கினால் மொத்தமாக நடுங்குவீர்கள்” என்று தோனி கேப்டனாக இருந்த போது சொன்னது எனக்கு நினைவிருக்கிறது” என்று கூறினார். அவர் கூறுவது போல 2015, 2019 உலகக்கோப்பைகளில் லீக் சுற்றில் அனைத்து போட்டிகளிலும் வென்ற இந்தியா நாக் அவுட் சுற்றில் திடீரென தோற்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement