
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணி இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி கண்டுள்ளது. அயர்லாந்தை முதல் போட்டியில் வீழ்த்திய இந்தியா 2வது போட்டியில் பரம எதிரி பாகிஸ்தானை வெறும் 113 ரன்களுக்கு கட்டுப்படுத்தி 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அதே வேகத்தில் அமெரிக்காவையும் வீழ்த்திய இந்தியா குரூப் ஏ பிரிவிலிருந்து சூப்பர் 8 சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது.
அந்த சூழ்நிலையில் ஜூன் 13ஆம் தேதி நடைபெற்ற முக்கியமான போட்டியில் நியூசிலாந்தை 13 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ் சூப்பர் 8க்குள் நுழைந்துள்ளது. அதையும் சேர்த்து இதுவரை விளையாடிய 2 போட்டிகளிலும் நியூசிலாந்து 2 தோல்விகளை சந்தித்துள்ளது. அதனால் தனது கடைசி 2 போட்டிகளில் வென்றாலும் நியூசிலாந்து இந்த உலகக் கோப்பையில் லீக் சுற்றுடன் வெளியேறுவது 90% உறுதியாகியுள்ளது.
இந்தியாவின் வாய்ப்பு:
ஏனெனில் அதே பிரிவில் ஆப்கானிஸ்தான் ஏற்கனவே தனது முதலிரண்டு போட்டிகளில் 2 வெற்றிகளை பெற்றுள்ளது. அதனால் தற்போது இந்திய அணிக்கு அதிர்ஷ்டமும் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியும் கிடைத்துள்ளது. ஏனெனில் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் நியூசிலாந்தை இதுவரை இந்தியா ஒரு முறை கூட வென்றதில்லை.
அப்படிப்பட்ட வலுவான நியூசிலாந்தை ஒருவேளை சூப்பர் 8 அல்லது நாக் அவுட் சுற்றில் சந்திக்க வேண்டிய நிலைமை வந்தால் இந்தியாவின் வெற்றி கேள்விக்குறியாகவே இருக்கும். தற்போது அந்த பயமில்லாத இந்திய அணி சூப்பர் 8 சுற்றில் குரூப் 1 பிரிவுக்கு தகுதி பெற்றுள்ளது. அந்தப் பிரிவில் ஏற்கனவே ஆஸ்திரேலியாவும் தகுதி பெற்றுள்ளது. எஞ்சியுள்ள 2 இடங்களை பிடிக்க ஆப்கானிஸ்தான், வங்கதேசம்/நேபாள்/நெதர்லாந்து ஆகிய அணிகளுக்கு மட்டுமே வாய்ப்புள்ளது.
எனவே ஐசிசி அட்டவணைப்படி சூப்பர் 8 சுற்றில் வரும் ஜூன் 20, 22, 24 ஆகிய தேதிகளில் இந்தியா முறையே ஆப்கானிஸ்தான், நேபாள்/வங்கதேசம்/நெதர்லாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளை பார்படாஸ், ஆண்ட்டிகுவா, செயின்ட் லூசியா நகரில் எதிர்கொள்ள 100% வாய்ப்புள்ளது. அதில் 2 வெற்றிகளை பெற்றால் இந்தியா செமி ஃபைனலுக்கு தகுதி பெறும்.
அது போன்ற சூழ்நிலையில் ஒருவேளை ஆஸ்திரேலியாவிடம் தோற்றாலும் ஆப்கானிஸ்தான், நேபாள்/வங்கதேசம்/நெதர்லாந்து ஆகிய அணிகளுக்கு எதிரான எஞ்சிய 2 போட்டியில் இந்தியா வெல்லும் என்று நம்பலாம். அப்படி வெற்றி பெற்றால் ஜூன் 27ஆம் தேதி கயானாவில் நடைபெறும் 2வது செமி ஃபைனலில் தான் இந்தியா விளையாடும். ஏனெனில் அங்கே நடக்கும் செமி ஃபைனல் தான் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு நடைபெறும்.
இதையும் படிங்க: ஜெய்ஸ்வால் இல்லை.. ஓப்பனிங்கில் அவரை எறக்கி.. கோலியை 3வது இடத்தில் விளையாட வைங்க.. கைப் கோரிக்கை
அதனால் இந்தியா சூப்பர் 8 சுற்றில் எந்த இடத்தை பிடித்தாலும் 2வது செமி ஃபைனலில் தான் விளையாடும் என்று ஏற்கனவே ஐசிசி அறிவித்துள்ளது. அதனால் இந்தத் தொடரில் இந்தியா செமி ஃபைனல் தகுதி பெறுவதற்கான வாய்ப்பு இப்போதே பிரகாசமாக இருக்கிறது. அத்துடன் சூப்பர் 8லேயே ஆஸ்திரேலியாவை எதிர்கொள்வதால் மீண்டும் செமி ஃபைனலில் அந்த அணியுடன் இந்தியா விளையாட 100% வாய்ப்பில்லை. எனவே செமி ஃபைனல், ஃபைனல் ஆகிய 2 போட்டிகளில் வென்று கோப்பையை வெல்வது இனிமேல் இந்தியாவின் கையில் தான் உள்ளது.