ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடரில் மார்ச் 23ஆம் தேதி நடைபெற்ற 3வது லீக் போட்டியில் மும்பையை 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை தோற்கடித்தது. சேப்பாக்கத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய மும்பை 156 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அடுத்ததாக விளையாடிய சென்னை 19.1 ஓவரில் 158-6 ரன்கள் எடுத்துப் போராடி வென்று இத்தொடரை வெற்றிகரமாக துவங்கியது.
சென்னை அணிக்கு பேட்டிங்கில் கேப்டன் ருதுராஜ் 53, ரச்சின் ரவீந்திரா 65* ரன்களும் பந்து வீச்சில் கலீல் அஹ்மத் 3, நூர் அஹ்மத் 4 விக்கெட்டுகளை எடுத்து வெற்றியில் பங்காற்றினர். முன்னதாக அந்தப் போட்டியில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி அன்கேப்ட் வீரராக சிஎஸ்கே அணிக்கு களமிறங்கினார். இந்தியாவுக்காக 3 விதமான வெள்ளைப்பந்து ஐசிசி கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனான அவர் சென்னை அணிக்கும் 5 ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ளார்.
என்றும் தல தோனி:
அப்படிப்பட்ட அவர் 2019 உலகக் கோப்பையுடன் சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றார். அப்போதிலிருந்து ஐபிஎல் தொடரில் எப்போது தோனி ஓய்வு பெறுவார்? என்பது பலரது கேள்வியாக இருக்கிறது. ஆனால் தனது அற்புதமான ஃபிட்னஸ் காரணமாக தொடர்ந்து விளையாடும் தோனி இந்தப் போட்டியில் கூட வெறும் 0.12 நொடியில் சூரியகுமாரை ஸ்டம்ப்பிங் செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
இந்நிலையில் பழைய சரக்கு போல வயதை வெறும் நம்பராக்கி அசத்தும் தோனி ஐபிஎல் தொடரில் 50 வயது வரை விளையாடிய முதல் வீரராக சாதனை படைக்கக்கூடும் என்று முன்னாள் வீரர் நவ்ஜோத் சித்து தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “43 வயதிலும் தோனி சிறப்பாக செயல்படுகிறார். பழைய சரக்கைப் போல நாட்கள் செல்ல செல்ல அவர் இன்னும் சிறப்பாகிறார்”
இதயங்களின் தல:
“அவருடைய ஃபிட்னஸை பாருங்கள். அதைப் பொறுத்து விக்கெட் கீப்பிங் இருக்கிறது. தோனியின் டெக்னிக் மற்றும் முயற்சியற்ற செயல்படுத்துதல் ஆகியவை குறிப்பிடத்தக்கது. இத்தனை வருடங்களாக அவர் சம்பாதித்துள்ள மரியாதை அற்புதமானது. மும்பை இளம் வீரர் விக்னேஷின் தோளில் தட்டிக்கொடுத்த தோனி அவருக்கு உத்வேகத்தை கொடுத்ததைப் பார்த்தது இனிப்பான நெஞ்சைத் தொடும் தருணமாக அமைந்தது”
இதையும் படிங்க: துவக்க வீரரான ருதுராஜ் கெய்க்வாட் 3 ஆவது இடத்தில் களமிறங்கியது ஏன்? – அவரே கொடுத்த விளக்கம்
“அந்த வகையான உந்துதல் பிரீமியம் பெட்ரோல் போன்றது. அது வாழ்க்கையில் சவால்களை சமாளித்து வரும் ஒரு வீரருக்கு எரிபொருளாகிறது. தோனி இதயங்களை வென்றுள்ளார். அவர் தன்னைப் பற்றி நிரூபிக்க எதுவுமே இல்லை. ஆனாலும் மக்கள் அவரை கிரிக்கெட்டிலிருந்து விட விரும்பவில்லை. எனது வாழ்வில் ஒரே ஒரு பந்தயம் கட்டுவேன். அது சிஎஸ்கே அணிக்காக 50 வயதில் விளையாடும் ஒரே வீரராக தோனி இருக்கக்கூடும்” எனக் கூறினார்.



