2023 உ.கோ : இந்திய ரசிகர்கள் எதிர்த்தாலும் அவங்க பாகிஸ்தானுக்கு சப்போர்ட் பண்ணுவாங்க – முன்னாள் வீரர் சர்ச்சை பேட்டி

Naveed ul hasan
- Advertisement -

உலக கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் ஐசிசி 2023 உலகக் கோப்பை வரும் அக்டோபர் 5ஆம் தேதி இந்தியாவில் துவங்குகிறது. வரலாற்றில் முதல் முறையாக முழுவதுமாக இந்திய மண்ணில் நடைபெறும் இந்த தொடரில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து உட்பட உலகின் டாப் 10 கிரிக்கெட் அணிகள் கோப்பையை வெல்வதற்காக மொத்தம் 48 போட்டிகளில் மோத உள்ளன. அந்த அணிகளுக்கு சவாலை கொடுத்து சொந்த மண்ணில் வலுவான அணியாக திகழும் இந்தியா 2011 போல கோப்பையை வென்று 2013க்குப்பின் கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தோல்விகளை நிறுத்துமா என்று எதிர்பார்ப்பு உச்சகட்டமாக காணப்படுகிறது.

அதற்கு நிகராக அக்டோபர் 15ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் நடைபெறும் பரம எதிரி பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வென்று இதுவரை கையில் வைத்திருக்கும் கௌரவத்தை இந்தியா காப்பாற்றுமா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் காணப்படுகிறது. குறிப்பாக 1992 முதல் இதுவரை உலக கோப்பையில் சந்தித்த 7 போட்டிகளிலும் பாகிஸ்தானை தோற்கடித்துள்ள இந்தியா இம்முறை அந்த வெற்றி நடையை சொந்த மண்ணிலும் தொடர்வதற்கு போராட உள்ளது.

- Advertisement -

சர்ச்சை கருத்து:
மறுபுறம் 30 வருடங்களாக தொடர் தோல்வியை சந்தித்து வருவதால் உலகக் கோப்பையை வெல்லாவிட்டாலும் பரவாயில்லை தங்களை புறக்கணிக்கும் இந்தியாவை அவர்களுடைய சொந்த மண்ணில் பதிலடி கொடுக்க இப்போட்டியில் வென்றாக வேண்டும் என்று பாகிஸ்தான் ரசிகர்கள் வெறியுடன் காத்திருக்கின்றனர். ஆனாலும் 90களில் சச்சின் அவுட்டானதால் மொத்தமாக போட்டியை புறக்கணித்த கொல்கத்தா ரசிகர்கள் முதல் 2005இல் தோற்றதால் கடுப்பாகி வீரர்கள் பயணித்த பேருந்து மீது கல்லால் அடித்தது வரை பாகிஸ்தான் அணிக்கு இந்திய ரசிகர்கள் பெரும்பாலும் ஆதரவுக்கு பதில் எதிர்ப்பு தெரிவிப்பவர்களாகவே இருக்கின்றனர்.

குறிப்பாக தற்சமயத்தில் பல்வேறு காரணங்களால் வட மாநிலங்களில் பாகிஸ்தான் அணிக்கு நிறைய எதிர்ப்புகள் இருக்கிறது என்றே சொல்லலாம். இருப்பினும் 1999இல் இந்தியாவை தோற்கடித்தும் தரமான கிரிக்கெட்டை விளையாடியதற்காக சென்னையை சேர்ந்த ரசிகர்கள் மட்டுமே பாகிஸ்தானுக்கு வரலாற்றில் கைதட்டி பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். அதனாலேயே பாகிஸ்தான் பங்கேற்கும் பெரும்பாலான உலகக் கோப்பை போட்டிகள் சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் போன்ற தென் மாநில நகரங்களில் நடக்கும் வகையில் அட்டவணையும் கட்டமைக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்திய மண்ணில் நடைபெறும் இந்த உலகக்கோப்பையில் இந்திய ரசிகர்கள் தங்களுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்றாலும் அங்குள்ள முஸ்லிம் ரசிகர்கள் மிகப்பெரிய ஆதரவை கொடுப்பார்கள் என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் நவீத்-உல்-ஹசன் சர்ச்சையான கருத்தை தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய யூடியூப் நிகழ்ச்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் விளையாடுவதால் நிச்சயமாக அவர்கள் வெல்வதற்கு அதிக வாய்ப்புள்ளது. அதே சமயம் பாகிஸ்தானும் சிறந்த அணியாக இருக்கிறது”

“ஆனால் அங்கு ரசிகர்களின் ஆதரவு பாகிஸ்தானுக்கு கிடைக்காது என்பதை நான் புரிந்து கொள்கிறேன். இருப்பினும் அங்கு முஸ்லிம் இனத்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். எனவே அவர்களுடைய ஆதரவு நமக்கு உறுதியாக கிடைக்கும். அவர்கள் எப்போதுமே நமக்கு பெரிய ஆதரவு கொடுத்து வருகிறார்கள். குறிப்பாக என்னுடைய காலத்தில் ஹைதராபாத் மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களில் விளையாடிய போது அங்குள்ள ரசிகர்கள் பாகிஸ்தான் அணிக்கு பெரிய ஆதரவு கொடுத்தனர்” என்று கூறினார்.

- Advertisement -

மேலும் 2007 காலகட்டங்களில் இந்தியாவில் நடைபெற்ற ஐசிஎல் தொடரில் விளையாடியது பற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு. “நான் ஏற்கனவே அங்கு இன்சமாம் தலைமையில் ஐசிஎல் தொடரில் விளையாடியுள்ளேன். ஆரம்பக் காலங்களில் இந்தியாவில் பிரீமியர் லீக் தொடர்கள் உருவாகிய போதும் எங்களுக்கு அங்கே நிறைய ஆதரவு கிடைத்தது. இந்தியா மட்டுமின்றி உலகில் பல்வேறு நாடுகளில் நாங்கள் விளையாடிய போதெல்லாம் அங்குள்ள முஸ்லிம் ரசிகர்கள் எங்களுக்கு ஆதரவு கொடுத்து வருகிறார்கள்” என்று கூறினார்.

இதையும் படிங்க:நேர்ல அவரை மீட் பண்ணனும். அவர்தான் என்னோட ரோல் மாடல். இந்திய அணிக்கு தேர்வான – ஜித்தேஷ் சர்மா விருப்பம்

இந்த நிலையில் கடந்த 10 வருடங்களாக இருதரப்பு மற்றும் ஐபிஎல் தொடர்களில் விளையாடாமல் இருந்து வரும் பாகிஸ்தானுக்கு இந்த உலகக் கோப்பையில் இந்தியாவின் கால சூழ்நிலைகள் புதிதாகவும் சவாலாகவும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement