இந்தியாவில் நடைபெற்று முடிந்த 16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் அணிக்காக பினிஷர் ரோலில் விளையாடிய ஜித்தேஷ் சர்மா அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 160 ஸ்ட்ரைக் ரேட்டில் 309 ரகளை குவித்து அனைவரையும் வியக்க வைத்தார். எந்த நிலையில் அணி இருந்தாலும், எப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் இருந்தாலும் தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் அவர் ரன் குவிப்பில் ஈடுபடுவது அவரது திறனை வெளிக்காட்டியது. அதோடு களமிறங்கியதும் முதல் சில பந்துகளில் பவுண்டரி அடிக்கும் ஹிட்டராக பார்க்கப்படும் அவர் வெகு விரைவில் இந்திய அணிக்காக தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியான ஏசியன் கேம்ஸ் தொடருக்கான ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்திய அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ஜித்தேஷ் சர்மா இடம் பிடித்துள்ளார்.
இப்படி ஏசியன் கேம்ஸ் தொடரில் இந்திய அணிக்காக விளையாடப்போவது குறித்து பேசிய ஜித்தேஷ் சர்மா கூறுகையில் : இந்தியாவில் உள்ள மிகச்சிறந்த விளையாட்டு வீரர்களுடன் இந்த தொடரில் பங்கேற்க போகிறோம் என்பதை நினைத்தும், ஒன்றாக நடக்கப் போகிறோம் என்பதை நினைத்தும் பெருமையாக உள்ளது.
எனக்கு தங்கமகன் நீரஜ் சோப்ராவை நேரில் சந்திக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. இந்த வாய்ப்பின் மூலம் அவரை நான் நேரில் காண உள்ளேன். நீரஜ் சோப்ரா எனக்கு ஒரு ரோல் மாடல். ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அவரது சாதனை அவ்வளவு எளிதான ஒன்று கிடையாது. கிரிக்கெட் ஒரு குழு விளையாட்டு நம்மை சுற்றி எப்போதும் 10 பேர் இருப்பார்கள்.
ஆனால் தனி நபராக விளையாடும் போட்டிகள் அப்படி கிடையாது. நாமாக தான் எந்த முடிவையும் எடுக்க வேண்டும். இப்போது இந்தியாவில் உள்ள பல்வேறு விளையாட்டு வீரர்களுடன் ஒன்றாக தங்கி நாட்களை கழிக்கப்போவதை நினைத்தால் பெருமையாக இருக்கிறது. மற்ற விளையாட்டு வீரர்கள் எப்படி தயாராகிறார்கள் என்பதை காணவும் ஆவலாக காத்திருக்கிறேன்.
இதையும் படிங்க : தோனி, விராட் கோலி இல்ல, ஐபிஎல் கிங்கான அவர் தான் என்னோட ரோல் மாடல் – ரிங்கு சிங் உற்சாக பேட்டி
இந்த ஏசியன் கேம்ஸ் நிச்சயம் எனக்கு ஒரு புதிய அனுபவமாக இருக்கும். இந்திய அணிக்காக விளையாட இருப்பதை நினைத்தால் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது. நான் தற்போது ஏசியன் கேம்ஸ் தொடருக்காக சரியான முறையில் பயிற்சியில் ஈடுபட்டு தயாராகி வருகிறேன் என்றும் ஜித்தேஷ் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.