
வரலாற்று சிறப்புமிக்க 2024 – 25 பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வரும் நவம்பர் மாதம் துவங்குகிறது. அந்தத் தொடரில் ஆஸ்திரேலியா தங்களுடைய சொந்த மண்ணில் இந்தியாவை எதிர்கொள்கிறது. கடைசியாக இந்தியாவுக்கு எதிராக விளையாடிய 2 தொடர்களிலும் ஆஸ்திரேலியா சொந்த மண்ணில் முதல் முறையாக தோல்வியை சந்தித்தது மோசமான சாதனை படைத்தது.
எனவே இம்முறை எப்படியாவது இந்தியாவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக ஆஸ்திரேலிய அணியினர் இப்போதே தயாராகி வருகிறார்கள். அது போன்ற சூழ்நிலையில் ரிஷப் பண்ட்டை எப்படியாவது கட்டுப்படுத்த ஆஸ்திரேலியா முயற்சிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் 2018/19 தொடரில் சிட்னி மைதானத்தில் நடந்த போட்டியில் சதமடித்த அவர் 2020/21 தொடரில் 90க்கும் மேற்பட்ட ரன்களை குவித்து ஆஸ்திரேலியாவின் வெற்றியை தகர்த்து இந்தியா டிரா செய்ய உதவினர்.
அப்போட்டிகளில் ஆஸ்திரேலியாவின் முதன்மை ஸ்பின்னரான நேதன் லயனை இறங்கி இறங்கி சென்று அடித்து நொறுக்கிய ரிஷப் பண்ட் பவுண்டரிகளும் சிக்ஸர்களுமாக தெறிக்க விட்டார். அதே போல 2020/21 தொடரில் காபா மைதானத்தில் 89* ரன்கள் குவித்த அவர் அம்மைதானத்தில் ஆஸ்திரேலியாவை 32 வருடங்கள் கழித்து இந்தியா தோற்கடித்து கோப்பையை வெல்ல உதவினார்.
எனவே இம்முறை எப்படியாவது ரிசப் பண்ட்டை அமைதியாக வைத்திருக்க முயற்சிப்போம் என்று ஆஸ்திரேலிய கேப்டன் பட் கமின்ஸ் சமீபத்தில் கூறியிருந்தார். இந்நிலையில் ரிஷப் பண்ட் அடித்தாலும் அதற்காக கவலைப்படாமல் அவரை கட்டுப்படுத்துவதற்கான திட்டங்களை வைத்துள்ளதாக நேதன் லயன் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“நீங்கள் மின்சாரத்தைப் போல் விளையாடக்கூடிய ரிஷப் பண்ட் போன்ற ஒருவருக்கு எதிராக பந்து வீச உள்ளீர்கள். அவரிடம் உலகில் உள்ள அனைத்து திறனும் இருக்கிறது. எனவே ஒரு பவுலராக நீங்கள் தவறு செய்வதற்கான வாய்ப்பு குறைவாகவே இருக்கும். நீங்கள் நன்றாக செயல்பட வேண்டும். ஒருவேளை நான் சிக்ஸரால் அடி வாங்கினால் அது ஒரு பவுலராக எனக்கு சவாலாக இருக்கும். இருப்பினும் சிக்ஸர் அடிப்பதற்காக நான் பயப்படப் போவதில்லை”
இதையும் படிங்க: அந்த 2 பேரை தாண்டி ஜெய்ப்பது கஷ்டம்.. இந்தியாவை வீழ்த்த இதை செய்ங்க.. நியூஸிலாந்துக்கு கப்டில் அட்வைஸ்
“ரிஷப் பண்ட் போன்றவரை வெள்ளைக் கோட்டுக்குள் நிற்க வைத்து எனக்கு எதிராக நிறைய தடுப்பாட்டத்தை விளையாட வைப்பதே சவாலாகும். அந்த சவால் வாய்ப்புகளை கொண்டு வரும் என்று நம்புகிறேன்” எனக் கூறினார். அதாவது ரிஷப் பண்ட் அதிகமாக தடுப்பாட்டம் ஆடும் அளவுக்கு பந்து வீச உள்ளதாக நேதன் லயன் கூறியுள்ளார். அதை செய்தால் சில சிக்சர்கள் சென்றாலும் விக்கெட் கிடைக்க வாய்ப்புள்ளதாக அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.