இந்திய கிரிக்கெட் அணி தற்போது வங்கதேசத்துக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அதை முடித்துக்கொண்டு நியூசிலாந்துக்கு எதிராக மீண்டும் சொந்த மண்ணில் இந்தியா 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அக்டோபர் 16ஆம் தேதி துவங்கும் அந்தத் தொடரை வென்று 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஸ் ஃபைனலுக்கு தகுதி பெற இந்தியா போராட உள்ளது.
கடந்த 12 வருடங்களாக சொந்த மண்ணில் உலகின் எந்த அணிக்கு எதிராகவும் இந்தியா ஒரு டெஸ்ட் தொடரில் கூட தோற்காமல் வெற்றி நடை போட்டு வருகிறது. எனவே அத்தொடரில் நியூஸிலாந்தையும் வீழ்த்தி இந்தியா வெல்லும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர். இந்நிலையில் சுழலுக்கு சாதகமான இந்திய மைதானங்களில் வெப்பம் அதிகமாக இருக்கும் என்று நியூசிலாந்து நட்சத்திர வீரர் மார்ட்டின் கப்டில் தெரிவித்துள்ளார்.
சவாலான இந்தியா:
அதனால் அங்கே அஸ்வின், ஜடேஜா ஆகியோரை தாண்டி இந்தியாவை வீழ்த்துவது மிகவும் கடினம் என்று அவர் ஒப்புக் கொண்டுள்ளார். இருப்பினும் இந்தியா தடுமாறக்கூடிய நேரங்களை பயன்படுத்தி நியூசிலாந்து தங்களுடைய கையை அதிகமாக ஓங்குவதே அத்தொடரில் வெற்றிக்கான வழி என்று கப்டில் தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.
“சில நேரங்களில் உங்களால் இங்கே ரன்களே அடிக்க முடியாது என்ற சூழ்நிலை இருப்பதே இந்தியாவுக்கு வரும் போது இருக்கக்கூடிய கடினமான விஷயமாகும். ஏனெனில் இந்தியாவில் பந்துகள் ஸ்கொயராக வரும், அதே போன்று பந்துகள் திடீரென வழுக்கிக் கொண்டு நேராக வரும். எனவே எந்த பந்து திரும்பும் எது நேராக வரும் என்பது உங்களுக்குத் தெரியாது”
அஸ்வின் – ஜடேஜா:
“அதனால் நீங்கள் எப்போதும் அங்கே மனதளவில் உங்களுடைய ஆட்டத்தின் மேலே இருக்க வேண்டும். இந்தியாவுக்கு மேலே இருக்க முயற்சிப்பது மிகவும் கடினமான ஒன்றாகும். அதையும் தாண்டி மேலே இருப்பது போல் உணர்ந்தால் அதை முடிந்த வரை போட்டியில் அதிகமாக வைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். இந்தியாவில் வெப்பம், வியர்வை போன்ற அனைத்தும் உங்களுக்கு எதிராக இருப்பது போல் தோன்றும்”
இதையும் படிங்க: ஆஸ்திரேலியர்கள் கஷ்டப்படுவாங்க.. ஆனா இந்தியாவின் வெற்றி அவங்க கையில் தான் இருக்கு.. சஞ்சய் மஞ்ரேக்கர்
“அதே போல அஸ்வின், ஜடேஜாவை வெளியே எடுக்க முடியாது. வங்கதேசத்துக்கு எதிராக ஜடேஜா 86 ரன்கள் அடித்தார் அல்லவா? அவர்கள் 199 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அப்படி இந்தியாவுக்கு எதிராக நீங்கள் கயிற்றை போடுகிறீர்கள் என்று நினைக்கும் போது அவர்கள் பேட்டிங் செய்ய வருவார்கள். பேட்ஸ்மேனாக முன்னேறியுள்ள நிலையில் அஸ்வின் தாக்கத்தை ஏற்படுத்தும் ரன்களை எடுக்கக் கூடியவர். எனவே உங்களால் இந்தியாவுக்கு மேலே வருவது கடினம். ஏனெனில் அவர்களிடம் அந்தளவுக்கு ஆழமான திறமை உள்ளது” என்று கூறினார்.



