IND vs AUS : இந்தியாவுக்கு அதன் சொந்த மண்ணில் சவால் கொடுக்கும் நேதன் லயன் – 41 வருட சாதனையை உடைத்து புதிய உலக சாதனை

Nathan-Lyon-1
- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் முதலிரண்டு போட்டிகளில் தோல்வியை சந்தித்து ஆரம்பத்திலேயே கோப்பையை வெல்லும் வாய்ப்பை நழுவ விட்ட ஆஸ்திரேலியா 3வது போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அதனால் ஒயிட் வாஷ் தோல்வியை தவிர்த்து நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்து டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெற்ற அந்த அணி அகமதாபாத் நகரில் மார்ச் 9ஆம் தேதி துவங்கிய கடைசி போட்டியில் பிளாட்டான பிட்ச்சில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து 480 ரன்கள் குவித்து அசத்தியுள்ளது.

IND

- Advertisement -

அந்த அணிக்கு அதிகபட்சமாக உஸ்மான் கவஜா 180 ரன்களும் கேமரூன் க்ரீன் 114 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவிச்சந்திரன் அஸ்வின் 6 விக்கெட் எடுத்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியா நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பது போல் சொந்த மண்ணில் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்து முதல் இன்னிங்ஸில் 571 ரன்கள் குவித்தது. இந்தியாவுக்கு ரோகத் சர்மா 35, புஜாரா 42, கேஎஸ் பரத், அக்சர் பட்டேல் 79 என முக்கிய வீரர்கள் நல்ல ரன்களை எடுக்க சுப்மன் கில் சதமடித்து 128 ரன்களும் விராட் கோலி 3 வருடங்கள் கழித்து சதமடித்து 186 ரன்களும் எடுத்தனர்.

அபார சாதனை:
அதை தொடர்ந்து 91 ரன்கள் பின்தங்கிய நிலையில் களமிறங்கிய ஆஸ்திரேலியா 4வது நாள் முடிவில் 3/0 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் ஆஸ்திரேலியா 88 ரன்கள் பின்தங்கியுள்ள நிலையில் கடைசி நாளில் 2 அணிகளும் தங்களுடைய 2வது இன்னிங்ஸை வெற்றிகரமாக முடிப்பதற்கு போதுமான நேரம் கிடைக்காது என்பதால் இந்த போட்டி டிராவில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு செல்ல நியூசிலாந்து கைகளை எதிர்பார்க்க வேண்டிய நிலைமை இந்தியாவுக்கு ஏற்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இந்த தொடரில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த மூத்த ஸ்பின்னர் நேதன் லயன் எதிர்பார்க்கப்பட்டது போலவே இந்தியாவுக்கு சவாலை கொடுத்து வருகிறார்.

Nathan Lyon

குறிப்பாக இந்தூரில் நடைபெற்ற 3வது போட்டியில் 11 விக்கெட்டுகள் எடுத்து ஆஸ்திரேலியாவின் கம்பேக் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருது வென்ற அவர் இந்திய மண்ணில் அதிக விக்கெட்டுகளை எடுத்த ஆஸ்திரேலிய பவுலர், ஆசிய கண்டத்தில் அதிக விக்கெட்களை எடுத்த வெளிநாட்டு பவுலர் ஆகிய 2 வரலாற்று சாதனைகளை படைத்தார். அதே போல பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் அதிக விக்கெட்களை எடுத்த பவுலராகவும் சாதனை படைத்த அவர் இந்த போட்டியில் எடுத்த 3 விக்கெட்டுகளை சேர்த்து இந்திய மண்ணில் 55 விக்கெட்களை எடுத்துள்ளார்.

- Advertisement -

இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய மண்ணில் அதிக விக்கெட்களை எடுத்த வெளிநாட்டு பந்து வீச்சாளர் என்ற இங்கிலாந்தின் டெரேக் அண்டர்வுட் அவர்கள் தன்வசம் வைத்திருந்த 41 வருட சாதனையை தகர்த்துள்ள நேதன் லயன் புதிய உலக சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. நேதன் லயன் (ஆஸ்திரேலியா) : 55* (11 போட்டிகள்)
2. டெரேக் அண்டர்வுட் (இங்கிலாந்து) : 54 (16 போட்டிகள்)
3. ரிச்சி பெனட் (ஆஸ்திரேலியா) : 52 (8 போட்டிகள்)
4. கோர்ட்னி வால்ஷ் (வெஸ்ட் இண்டீஸ்) : 43 (7 போட்டிகள்)
5. முத்தையா முரளிதரன் (இலங்கை) : 40 (10 போட்டிகள்)

Nathan-Lyon-1

இதையும் படிங்க:IND vs AUS : டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி இப்படி சதம் அடிப்பது இதுவே இரண்டாம் முறையாம் – விவரம் இதோ

முன்னதாக வரலாற்றின் மிகச்சிறந்த சுழல் பந்து வீச்சாளராக போற்றப்படும் ஷேன் வார்னே சுழலுக்கு சாதகமில்லாத மைதானங்களில் கூட வெற்றிகரமாக செயல்பட்டு அசத்திய போதும் இந்தியாவுக்கு எதிராக இந்திய மண்ணில் தடுமாற்றமாகவே செயல்பட்டுள்ளார். அப்படி சொந்த மண்ணில் வலுவான அணியாக கருதப்படும் இந்தியாவுக்கு எதிராக நவீன கிரிக்கெட்டில் சவாலை கொடுத்து வரும் நேதன் லயன் நிச்சயமாக உலகத்தரம் வாய்ந்த ஸ்பின்னர் என்பது இதிலிருந்து மீண்டும் நிரூபணமாகிறது.

Advertisement