
ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடர் ஜூன் 2ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் கோலாகலமாக துவங்குகிறது. இந்த தொடரில் வரலாற்றிலேயே முதல் முறையாக உலகின் டாப் 20 கிரிக்கெட் அணிகள் விளையாட உள்ளன. அதில் 2007க்குப்பின் 17 வருடங்கள் கழித்து கோப்பையை வெல்லும் முனைப்புடன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி களமிறங்க உள்ளது.
வழக்கம் போல இம்முறையும் இந்திய அணிக்கு ஆஸ்திரேலியா நியூசிலாந்து, இங்கிலாந்து போன்ற அணிகள் சவாலை கொடுக்கும் என்று நம்பப்படுகிறது. குறிப்பாக 2022 டி20 உலக கோப்பையில் செமி ஃபைனலில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்து வெளியேற்றிய இங்கிலாந்து ஃபைனலில் பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை வென்றது. அதனால் நடப்பு சாம்பியனாக களமிறங்கும் அந்த அணி சமீபத்தில் 2 – 0 (4) என்ற கணக்கில் பாகிஸ்தானை தோற்கடித்தது.
இந்தியாவின் உதவி:
மேலும் கேப்டன் ஜோஸ் பட்லர், வில் ஜேக்ஸ், பில் சால்ட், மொய்ன் அலி, ஜானி பேர்ஸ்டோ என அந்த அணியின் முக்கிய வீரர்கள் ஐபிஎல் 2024 தொடரில் விளையாடி நல்ல ஃபார்மில் உள்ளனர். இந்நிலையில் ஒருவேளை இம்முறையும் இங்கிலாந்து கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை தக்க வைத்தால் அதற்கு இந்தியாவின் ஐபிஎல் தொடர் முக்கிய காரணமாக இருக்கும் என்று முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
ஏனெனில் இங்கிலாந்து அணி முழுமையாக தயாராகி உலகக் கோப்பையில் களமிறங்குவதற்கு ஐபிஎல் மிகப்பெரிய உதவியை செய்துள்ளதாகவும் அவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “இங்கிலாந்து சமநிலை கொண்ட அணியாக இருக்கிறது. அவர்கள் நிறைய பெரிய போட்டிகளில் விளையாடியுள்ளனர்”
“நாம் ஐபிஎல் தொடர் பற்றியும் அது எப்படி மிகப்பெரிய வீரர்களை உங்களுக்கு உருவாக்குகிறது என்பதை பற்றியும் அதிகமாக பேசுவதில்லை. அழுத்தமான சூழ்நிலையில் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் முன்னிலையில் அங்கே விளையாடி விட்டு நீங்கள் உலகக் கோப்பைக்கு வருகிறீர்கள். எனவே ஐபிஎல் தொடரில் இங்கிலாந்து வீரர்கள் தங்களால் என்ன செய்ய முடியுமோ அதை செய்து விட்டு வருகின்றனர்” என்று கூறினார்.
இதையும் படிங்க: நங்கூரமிட்ட கம்பீர், தோனியின் மேஜிக்.. பாகிஸ்தானின் கோப்பையை பறித்து ஐபிஎல்’க்கு விதையிட்ட இந்தியா.. டி20 உ.கோ ரீவைண்ட்
அவர் கூறுவது போல இங்கிலாந்து மட்டுமின்றி நிறைய வெளிநாட்டு வீரர்கள் தரமான ஐபிஎல் தொடரில் விளையாடி ஐசிசி தொடர்களுக்கு நன்றாக தயாராகின்றனர். அப்படி தயாராகும் அவர்கள் ஒரு கட்டத்தில் ஐசிசி தொடரில் இந்தியாவை அடித்து நொறுக்கி தங்கள் நாட்டை வெற்றி பெற வைக்கின்றனர். அதனால் ஐபிஎல் தொடர் இந்த வழியில் இந்தியாவுக்கு பாதகத்தை கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.