நங்கூரமிட்ட கம்பீர், தோனியின் மேஜிக்.. பாகிஸ்தானின் கோப்பையை பறித்து ஐபிஎல்’க்கு விதையிட்ட இந்தியா.. டி20 உ.கோ ரீவைண்ட்

IND vs PAK 2007
- Advertisement -

ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஜூன் மாதம் நடைபெறுகிறது. 2007 முதல் நடைபெற்று வரும் இந்த தொடரில் இந்தியா சில மகத்தான வெற்றிகளை பதிவு செய்துள்ளது. அதில் தென்னாபிரிக்காவில் நடைபெற்ற முதல் டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்ற விதம் யாராலும் மறக்க முடியாது.

அந்தத் தொடரில் அனுபவமற்ற தோனி தலைமையில் களமிறங்கிய இந்தியா லீக் சுற்றில் நியூஸிலாந்திடம் தோற்றாலும் பாகிஸ்தான், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி செமி ஃபைனலுக்கு தகுதி பெற்றது. அதைத் தொடர்ந்து செமி ஃபைனலில் வலுவான ஆஸ்திரேலியாவை தோற்கடித்த இந்தியா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. அந்த நிலையில் 2007 செப்டம்பர் 24ஆம் தேதி ஜோஹன்ஸ்பர்க் நகரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய மாபெரும் இறுதிப்போட்டி நடைபெற்றது.

- Advertisement -

சரித்திர வெற்றி:
அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு கௌதம் கம்பீர் நங்கூரமாகவும் அதிரடியாகவும் விளையாடினார். ஆனால் எதிர்ப்புறம் அறிமுகமாக களமிறங்கி அதிரடி காட்டிய யூசுப் பதான் 15 (8) ரன்னில் அவுட்டாகி சென்ற நிலையில் அடுத்ததாக வந்த ராபின் உத்தப்பா 8 (11) ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினார்.

அப்போது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட யுவராஜ் சிங் 14 (19), கேப்டன் தோனி 6 (10) ரன்களில் அவுட்டாகி அழுத்தத்தை அதிகரித்தனர். ஆனால் எதிர்ப்புறம் அழுத்தத்தை உடைக்கும் வகையில் பாகிஸ்தான் பவுலர்களை அட்டகாசமாக எதிர்கொண்ட கௌதம் கம்பீர் 8 பவுண்டரி 2 சிக்சருடன் 75 (54) ரன்கள் விளாசி இந்தியாவை காப்பாற்றினார். இறுதியாக ரோகித் சர்மா முக்கியமான 30* (16) ரன்கள் எடுத்து சூப்பர் ஃபினிஷிங் கொடுத்தார்.

- Advertisement -

அதனால் தப்பிய இந்தியா 158 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதைத் துரத்திய பாகிஸ்தானுக்கு முகமத் ஹபீஸை 1 ரன்னில் காலி செய்த ஆர்பி சிங் அடுத்து வந்த கம்ரான் அக்மலை டக் அவுட்டாக்கினார். அடுத்த சில ஓவரில் மறுபுறம் தெறிக்கவிட்ட இம்ரான் நசீர் 33 (14) ரன்னில் உத்தப்பாவின் அபார ஃபீல்டிங்கில் ரன் அவுட்டானார். ஆனால் அடுத்ததாக வந்த கேப்டன் யூனிஸ் கான் 24 (24) அவுட்டான நிலையில் கேப்டன் சோயப் மாலிக்கை 8 (17) ரன்களில் காலி செய்த இர்பான் பதான் அடுத்ததாக வந்த ஷாஹித் அப்ரிடியை கோல்டன் டக் அவுட்டாக்கினார்.

அதன் காரணமாக 77/6 என பாகிஸ்தான் சரிந்ததால் இந்தியா எளிதாக வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது குறுக்கே வந்த மிஸ்பா-உல்-ஹக் நங்கூரத்தை போட்டு 17வது ஓவரில் ஹர்பஜனுக்கு எதிராக 3 சிக்சர்களைப் பறக்க விட்டு இந்திய ரசிகர்களின் வயிற்றில் புளியை கரைத்தார். போதாக்குறைக்கு எதிர்புறம் யாசிர் அரபாத் 15, சோஹைல் தன்வீர் 12, ஆசிப் 4* ரன்கள் எடுத்ததால் வெற்றியை நெருங்கிய பாகிஸ்தானுக்கு கடைசி ஓவரில் 13 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.

- Advertisement -

அப்போது சீனியர் ஸ்பின்னரான ஹர்பஜனை கேப்டன் தோனி அழைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முந்தைய ஓவரில் மிஸ்பா அடித்ததாலும் மற்ற வேகப்பந்து வீச்சாளர்களுக்கு 4 ஓவர்கள் முடிந்து விட்டதாலும் அனுபவமற்ற ஜோஹிந்தர் சர்மாவின் கையில் பந்தை கொடுத்த தோனி சூதாட்டம் போன்ற மிகப்பெரிய ரிஸ்க் எடுத்தார். அந்த ஓவரை ஒய்ட் போட்டு துவங்கிய ஜோஹிந்தர் சர்மாவை 2வது பந்தில் மிஸ்பா சிக்ஸர் அடித்ததால் தோல்வி உறுதியென இந்திய ரசிகர்கள் கவலையடைந்தனர்.

ஆனால் அப்போது அவருடைய அருகில் சென்ற தோனி தேவையான தெம்பையும் ஆதரவையும் கொடுத்தார். அந்த தெம்புடன் அவர் வீசிய அடுத்த பந்தில் தேவையின்றி மிஸ்பா ஸ்கூப் ஷாட் அடித்து கேட்ச் கொடுத்தார். அந்த அதிர்ஷ்டத்தை ஸ்ரீசாந்த் கச்சிதமாக பிடித்ததால் வெறும் 5 ரன்கள் வித்தியாசத்தில் பரம எதிரி பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா உலகின் முதல் டி20 சாம்பியனாக சாதனை படைத்தது.

இதையும் படிங்க: டி20 உ.கோ 2024 : இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளின் பலம், பலவீனம் என்ன? புள்ளி விவரத்தோடு ஒரு அலசல்

அந்த வெற்றியால் தோனி தலைமையிலான இந்தியா அதே வருடம் டிராவிட் தலைமையில் 2007 உலகக்கோப்பையில் சந்தித்த படுதோல்வியால் துவண்டு கிடந்த ரசிகர்களின் காயத்திற்கு மருந்து போட்டது. இந்தியாவின் அந்த த்ரில் வெற்றியே டி20 உலகக் கோப்பையும் 20 ஓவர் கிரிக்கெட்டும் வளர்வதற்கான ஆணிவேரை ஊன்றியது. அந்த வெற்றியே இன்று ஐபிஎல் எனும் சாம்ராஜ்யம் உருவாவதற்கான விதையை 2008இல் போட்டது.

Advertisement