ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. அதில் 2007க்குப்பின் கோப்பையை வெல்லும் இலட்சியத்துடன் களமிறங்கும் இந்தியாவுக்கு சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் சிம்ம சொப்பனமாக திகழலாம். ஏனெனில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் சோடை போன அந்த அணி இப்போதும் டி20 கிரிக்கெட்டில் முரட்டுத்தனமாக அடிக்கக்கூடிய தரமான வீரர்களைக் கொண்டுள்ளது.
அதனாலேயே 2 டி20 உலகக் கோப்பைகளை வென்ற முதல் அணியாகவும் வெஸ்ட் இண்டீஸ் சாதனை படைத்தது. இம்முறை அந்த அணிக்கு புதிய முயற்சியாக மிடில் ஆர்டரில் அதிரடியாக விளையாடக்கூடிய இளம் வீரர் ரோவ்மன் போவல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அந்த அணிக்கு அதிரடியாக விளையாடக்கூடிய ஜான்சன் சார்லஸ் – பிரண்டன் கிங் ஆகியோர் ஓப்பனிங்கில் பலம் சேர்க்கிறார்கள்
இந்தியா – வெஸ்ட் இண்டீஸ்:
அவர்களைத் தொடர்ந்து விக்கெட் கீப்பர் நிக்கோலஸ் பூரான் தனி ஒருவனாக வெற்றியை எதிரணியிடமிருந்து பறிக்கக் கூடியவராக உள்ளார். ஷாய் ஹோப் மிடில் ஆர்டரில் நங்கூரமாக விளையாடும் வீரராக வலு சேர்க்கிறார். ரூதர்போர்ட், சிம்ரோன் ஹெட்மயர் ஆகியோர் அதிரடியான ஃபினிஷர்களாக எதிரணிக்கு அச்சுறுத்தலை கொடுப்பார்கள்.
அதை விட ஆண்ட்ரே ரசல், ரோமரியா ஃசெபார்ட் ஆகியோர் சரவெடியாக அடிக்கக்கூடிய வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர்களாக பலம் சேர்க்கிறார்கள். சுழல் பந்து வீச்சுத் துறையில் ராஸ்டன் சேஸ் இந்தியாவின் ஜடேஜா போல பேட்டிங்கிலும் அசத்தக் கூடியவர். அவருடன் குடகேஷ் மோட்டி, அகில் ஹொசைன் ஓரளவு நல்ல ஸ்பின்னர்களாக இருக்கின்றனர். இறுதியாக வேகப்பந்து வீச்சு துறையில் அல்சாரி ஜோசப், ஓபேத் மெக்காய், சமர் ஜோசப் ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.
மறுபுறம் ரோகித் சர்மா – ஜெய்ஸ்வால் ஆகியோர் அனுபவமும் இளமையும் கலந்த அதிரடியான துவக்க வீரர்களாக இந்தியாவுக்கு பலம் செய்கின்றனர். ஒருவேளை ஆரம்பத்திலேயே அவர்கள் ஏமாற்றத்தைக் கொடுத்தால் நங்கூரமாகவும் அதிரடியாகவும் விளையாடி இந்தியாவை தூக்கி நிறுத்த விராட் கோலி தயாராக உள்ளார். அதன் பின் 4வது இடத்தில் உலகின் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேன் சூரியகுமார் யாதவ் அச்சுறுத்தலை கொடுப்பார் என்று நம்பலாம்.
மிடில் ஆர்டரில் விக்கெட் கீப்பர்கள் சஞ்சு சாம்சன், ரிஷப் பண்ட் ஆகியோர் 2024 ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி நல்ல ஃபார்மில் நம்பிக்கை கொடுக்கின்றனர். இருப்பினும் ஆல் ரவுண்டர்களான ஹர்திக் பாண்டியா சுமாரான ஃபார்மில் இருப்பதும் சிவம் துபே பவுலிங் செய்வாரா என்பது கேள்விக்குறியாக இருப்பதும் இந்தியாவுக்கு பின்னடைவாகும். அதே போல ஜடேஜா – அக்சர் படேல் ஆகியோர் பேட்டிங்கில் நல்ல ரன்கள் அடிப்பது வெற்றிக்கு அவசியம்.
சுழல் பந்து வீச்சுத் துறையில் குல்தீப் யாதவ் – சஹால் ஜோடி தரமானதாக இருக்கிறது. இறுதியாக பும்ராவை தவிர்த்து சிராஜ், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் சுமாராக செயல்பட்டால் வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்களிடம் வாங்கக்கூடிய வேகப்பந்து வீச்சாளர்களாக இருப்பது கவலைக்குரிய விஷயமாகும். மொத்தத்தில் சொந்த மண்ணில் சரமாரியாக எதிரணிகளை அடித்து துவைக்கும் அளவுக்கு வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் பலமாக இருக்கிறது.
குறிப்பாக 11வது இடத்தில் களமிறங்கும் அந்த அணியின் டெயில் எண்டர் கூட சிக்சரை அடிக்கக்கூடிய திறமை கொண்டுள்ளனர். ஆனால் அந்த ரன்களை கட்டுப்படுத்தும் அளவுக்கு தரமான பவுலர்கள் இல்லை என்பதே வெஸ்ட் இண்டீஸ் அணியின் மிகப்பெரிய பின்னடைவாகும். மறுபுறம் பேட்டிங் – பவுலிங் ஆகிய இரண்டிலுமே சீரான பலத்தை கொண்டுள்ள இந்தியா இம்முறையும் சொதப்பாமல் சாதாரண செயல்பாட்டை வெளிப்படுத்தினாலே வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தும் தரத்தை கொண்டுள்ளது.
இதையும் படிங்க: என்னங்க இது எல்லாமே டெம்ப்ரவரி தானா? ஐ.சி.சி மீது இந்திய வீரர்கள் அதிருப்தி – நாங்க எப்படி விளையாடுறது?
சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் 30 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் இந்தியா 19 வெற்றிகளையும் வெஸ்ட் இண்டீஸ் 10 வெற்றிகளையும் பெற்றுள்ளது. 1 போட்டி மழையால் கைவிடப்பட்டது.



