அந்த அவமானத்தை சந்திக்க பயந்துட்டீங்கா? ஜெய் ஷா – இந்தியாவை ஓப்பனாக கிண்டலடித்த நஜாம் சேதி, நடந்தது என்ன

Najam Sethi
- Advertisement -

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இதுவரை நடைபெற்று முடிந்த லீக் சுற்றின் முடிவில் இந்தியா, பாகிஸ்தான், நடப்பு சாம்பியன் இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. முன்னதாக கடந்த வருடம் புதிய ஆசிய கவுன்சில் தலைவராக பொறுப்பேற்ற ஜெய் ஷா தலைமையில் உறுப்பு நாடுகளின் சம்மதத்துடன் இத்தொடரை முழுவதுமாக தங்களுடைய நாட்டில் நடத்தும் உரிமையை பாகிஸ்தான் பெற்றது.

ஆனால் பாதுகாப்பு காரணத்தால் அந்நாட்டுக்கு இந்தியா செல்லாது என்று அறிவித்த ஜெய் ஷா இத்தொடரை பொதுவான இடத்தில் நடத்துவோம் என கூறினார். அதற்கு உங்கள் நாட்டில் நடைபெறும் உலகக் கோப்பையை நாங்கள் புறக்கணிப்போம் என்று பாகிஸ்தான் வாரியம் பதிலடியாக கொடுத்தது. அப்போதிலிருந்தே அனல் பறந்த விவாதங்கள் நடைபெற்ற நிலையில் இறுதியாக உரிமையை கொடுத்து விட்டதால் பாகிஸ்தானின் முக்கியமான 4 போட்டிகளை அந்நாட்டில் நடத்துவதற்கு சம்மதம் தெரிவித்த ஆசிய கவுன்சில் இந்தியா பங்கேற்கும் போட்டிகளும் ஃபைனலும் இலங்கையில் நடைபெறும் என்று அறிவித்தது.

- Advertisement -

ஜெய் ஷா பயந்துட்டாரு:
அந்த நிலைமையில் இதுவரை நடைபெற்ற இத்தொடரில் பாகிஸ்தானில் நடைபெற்ற அனைத்து போட்டிகளும் எவ்விதமான தடைகளும் இல்லாமல் முழுமையாக நடைபெற்று வருகிறது. ஆனால் இலங்கையில் மழைக்காலம் என்பதால் அங்கு நடைபெறும் அனைத்து போட்டிகளிலுமே மழை குறுக்கிட்டு வருவது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது. குறிப்பாக செப்டம்பர் 2ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதிய போட்டி அனல் பறந்த தருணங்களுக்கு பின் மழையால் ரத்து செய்யப்பட்டது.

அதனால் விளையாட்டில் அரசியலை புகுத்தி 2008க்குப்பின் முதல்முறையாக தங்களுடைய நாட்டில் நடைபெறவிருந்த ஆசிய கோப்பையை முழுமையாக நடத்த விடாமல் செய்த ஜெய் ஷா’வுக்கு மழை தண்டனை கொடுத்து வருவதாக பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் விமர்சித்து வருகிறார்கள். இந்த நிலைமையில் சூப்பர் 4 சுற்றில் நடைபெறும் 6 போட்டிகளில் 5 போட்டிகள் இலங்கையின் கொழும்புவில் நடைபெற உள்ளது.

- Advertisement -

ஆனால் கொழும்பு நகரில் அடுத்த ஒரு வாரத்திற்கு இடியுடன் கூடிய 70% மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவிக்கிறது. அதனால் சூப்பர் 4 சுற்றை ஹம்பன்தோட்டாவுக்கு மாற்றலாம் என்று கருதிய ஆசிய கவுன்சில் கடைசி நேரத்தில் அந்த முடிவை கைவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தானிடம் சந்திக்கும் தோல்வியிலிருந்து முதல் போட்டியில் மழையின் உதவியால் தப்பியதைப் போல தோல்வியை தவிர்ப்பதற்காகவே ஜெய் ஷா அந்த முடிவிலிருந்து பின்வாங்கினாரா? முன்னாள் வாரிய தலைவர் நஜாம் சேதி கிண்டலடிக்கும் வகையில் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு.

இதையும் படிங்க: யாரை வேண்டுமென்றாலும் வேர்ல்டுகப் டீம்ல இருந்து தூக்கலாம் – ஆனா இவங்க 2 பேரையும் அசைக்கக்கூட முடியாது

“பிசிசிஐ மற்றும் ஆசிய கவுன்சில் அடுத்த இந்தியா – பாகிஸ்தான் போட்டியை மழை காரணமாக கொழும்புவிலிருந்து ஹம்பன்தோட்டாவுக்கு மாற்ற முடிவெடுத்ததாக எங்கள் வாரியத்திடம் தெரிவித்தனர். ஆனால் ஒரு மணி நேரத்தில் அந்த முடிவை மாற்றிய அவர்கள் கொழும்புவை இறுதி இடமாக அறிவித்துள்ளார்கள். என்ன நடக்கிறது? பாகிஸ்தானிடம் தோல்வியை சந்தித்து விடுவோம் என்று இந்தியா பயந்து விட்டதா? ஏனெனில் மழையின் அறிக்கையை பாருங்கள்” என்று கொழும்பு மற்றும் ஹம்பன்தோட்டா மைதானங்களின் வானிலை அறிக்கையை புகைப்படம் எடுத்து பதிவிட்டுள்ளார்.

Advertisement