
1992 உலக சாம்பியனான பாகிஸ்தான் கடைசியாக இந்தியாவை தோற்கடித்து 2017 சாம்பியன்ஸ் டிராபியை வென்றது. 2021 டி20 உலகக் கோப்பையில் முதல் முறையாக இந்தியாவை தோற்கடித்து பாகிஸ்தான் வென்றது. அந்த வெற்றியை பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் உலகக்கோப்பை வென்றதைப் போல் கொண்டாடினார்கள் என்றால் மிகையாகாது. அங்கிருந்தே பாகிஸ்தானின் வீழ்ச்சி ஆரம்பமானது எனலாம்.
ஏனெனில் அடுத்த வருடமே நடைபெற்ற 2022 டி20 உலகக் கோப்பையிலும் இந்தியாவை மெல்போர்ன் மைதானத்தில் கலங்கடித்த பாகிஸ்தான் ஆரம்பத்திலேயே கையை ஓங்கியது. ஆனால் அப்போது நங்கூரமாக விளையாடிய விராட் கோலி வரலாற்றின் மகத்தான டி20 இன்னிங்ஸ் விளையாடி இந்தியாவுக்கு மறக்க முடியாத வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.
மறுபுறம் ஏமாற்றத் தோல்வியை சந்தித்த பாகிஸ்தானை மீண்டும் 2023 ஆசியக் கோப்பையில் கேஎல் ராகுல் – விராட் கோலி அதிரடியில் அடித்து நொறுக்கிய இந்தியா மிரட்டலான வெற்றி பெற்றது. 2023 உலகக் கோப்பையில் பாகிஸ்தானை அடித்து நொறுக்கிய ரோஹித் சர்மா இந்தியாவை வெற்றி பெற வைத்தார். 2024 டி20 உலகக் கோப்பையில் வெறும் 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் நெஞ்சை உடைக்கும் தோல்வியை சந்தித்தது.
அதற்கிடையே ஜிம்பாப்வே, ஆப்கானிஸ்தான், அமெரிக்கா போன்ற கத்துக்குட்டிகளிடம் ஐசிசி தொடர்களில் தோற்ற பாகிஸ்தான் 2024இல் தங்களுடைய சொந்த மண்ணில் வங்கதேசதிடம் டெஸ்ட் தொடரில் முதல் முறையாக விழுந்தது. அதனால் இந்தியாவிடம் வாங்கி அடியினாலேயே பாகிஸ்தான் மீண்டெழவில்லை என்று இந்திய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தெரிவிப்பது வழக்கம். இந்நிலையில் அதை பாகிஸ்தான் வாரியத்தின் முன்னாள் தலைவர் நஜாம் சேதி உறுதி செய்துள்ளார்.
ஒரு கட்டத்தில் மனதளவில் உத்வேகப்படுத்துவதற்காக பாகிஸ்தான் வீரர்களை மன நல மருத்துவர்களிடம் காண்பிக்க முடிவெடுத்ததாக அவர் கூறியுள்ளார். ஆனால் தெளிவான ஆங்கிலம் தெரியாததால் பாகிஸ்தான் வீரர்கள் அதற்கான சிகிச்சைகளை எடுக்க முடியாமல் தடுமாறியது பற்றியும் அவர் வேதனை தெரிவித்துள்ளார். இது பற்றி சாமா எனும் பாகிஸ்தான் தொலைக்காட்சியில் சேதி பேசியது பின்வருமாறு.
“ஆம் என் காலத்தில் நான் அதை முயற்சி செய்தேன். ஆனால் உண்மையில் வீரர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனெனில் நமது கலாச்சாரத்தில் சிகிச்சை என்பது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. மனநல மருத்துவரிடம் செல்வதை நாம் பலவீனத்தின் அறிகுறி அல்லது பைத்தியக்காரத்தனத்தை ஏற்படுத்தக்கூடிய களங்கமாக நினைக்கிறோம். உண்மையில் மன ஆரோக்கியம் அகன்ற கருத்து”
இதையும் படிங்க: டாசுக்கு பிறகு எதிர்பார்த்தபடியே 2 மாற்றங்களை செய்த கேப்டன்.. சூப்பர் 4 சுற்றுக்கான இந்திய அணி இதோ
“துரதிஷ்டவசமாக பாகிஸ்தானில் அது குறைத்து மதிப்பிடப்படுகிறது. இங்கே வெளிநாட்டுக்கு நிகராக மனநலம் பற்றிய வல்லுனர்கள் உள்ளனர். அவர்கள் ஆங்கிலத்தில் தொடர்பு கொள்கிறார்கள். அது எங்களுடைய வீரர்களின் மொழி அல்ல. அவர்கள் தொடர்பு கொள்ள உருது அல்லது பாஸ்தோ தேவைப்படுகிறது. நமது கிரிக்கெட் வீரர்களின் பின்னணி, சுமாரான படிப்பு போன்றவையும் பிரச்சனையாக உள்ளது. அதனால் மனநல மருத்துவர் அவர்களுக்கு ஒரே நாள் இரவில் உதவி செய்ய முடியாது” என்று கூறினார்.