விராட் கோலி, சங்கக்காரா வரலாற்று சாதனையை சமன் செய்த ஜெகதீசன் – மீண்டும் சென்னைக்கு பதிலடி

Narayan Jagadeesan Virat Kohli
- Advertisement -

இந்தியாவின் பிரபல உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பை 2022 தொடரின் லீக் சுற்று போட்டிகள் உச்ச கட்டத்தை எட்டியுள்ளன. அதில் நவம்பர் 19ஆம் தேதியன்று நடைபெற்ற 84வது லீக் போட்டியில் தமிழ்நாடு மற்றும் ஹரியானா அணிகள் மோதின. கர்நாடக வாரிய மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்ற ஹரியானா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய தமிழகம் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் சிறப்பாக செயல்பட்டு 284/7 ரன்கள் சேர்த்தது. தொடக்க வீரர் நாராயன் ஜெகதீசனுடன் இணைந்து 27 ஓவர்கள் ஆரம்ப முதலே அதிரடியாகவும் நங்கூரமாகவும் நின்று 151 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த சாய் சுதர்சன் 67 (74) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

அவருக்குப்பின் மிடில் ஆர்டரில் பாபா அபாரஜித் 3, பாபா இந்திரஜித் 2, கௌஷிக் 5, சோனு யாதவ் 13 என முக்கிய வீரர்கள் பெரிய ரன்களை எடுக்க தவறினாலும் தொடக்க வீரராக களமிறங்கி ஹரியானா பவுலர்களை வெளுத்து வாங்கிய இளம் தமிழக வீரர் ஜெகதீசன் 6 பவுண்டரி 6 சிக்ஸருடன் சதமடித்து 128 (123) ரன்கள் விளாசி 43வது ஓவரில் ஆட்டமிழந்தார். இறுதியில் ஷாருக்கான் 46 ரன்கள் எடுத்த நிலையில் ஹரியானா சார்பில் அதிகபட்சமாக ராகுல் திவாடியா மற்றும் மோகித் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

- Advertisement -

சாதனை சமன்:
அதை தொடர்ந்து 285 ரன்களை துரத்திய ஹரியானா முதல் ஓவரிலிருந்தே அனலாக பந்து வீசிய தமிழக பவுலர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் 28.3 ஓவரில் வெறும் 133 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணிக்கு அதிகபட்சமாக ராகுல் திவாடியா 34 (39) ரன்கள் எடுத்த நிலையில் தமிழகம் சார்பில் அதிகபட்சமாக பாபா அபாரஜித் 3 விக்கெட்டுகளை சாய்ந்தார். அதனால் 151 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியை சுவைத்த தமிழகம் எலைட் சி பிரிவில் 5 போட்டிகளில் 4 வெற்றிகளுடன் 18 புள்ளிகளை பெற்று முதலிடம் பிடித்து நாக் அவுட் சுற்று வாய்ப்பை உறுதி செய்துள்ளது.

இந்த வருடம் தமிழகத்தின் இந்த வெற்றி நடைக்கு தொடக்க வீரர் நாராயன் ஜெகதீசன் முக்கிய காரணமாக திகழ்கிறார் என்றே கூறலாம். ஏனெனில் இப்போட்டியில் சதமடித்த அவர் இதற்கு முந்தைய கடைசி 3 போட்டிகளில் முறையே கோவாவுக்கு எதிராக 168 (140) ரன்களும் சட்டிஸ்கர் அணிக்கு எதிராக 107 (113) ரன்களும் ஆந்திராவுக்கு எதிராக 114* (112) ரன்களும் குவித்து ஹாட்ரிக் சதங்களை விளாசினார். தற்போது இப்போட்டியிலும் சதமடித்துள்ள அவர் தொடர்ந்து 4 போட்டிகளில் 4 சதங்களை அடித்து விஜய் ஹசாரே கோப்பை வரலாற்றில் ஒரு தொடரில் அதிக சதங்களை அடித்த பேட்ஸ்மேன் என்ற விராட் கோலி, ருதுராஜ் கைக்வாட் ஆகியோரது சாதனைகளை சமம் செய்துள்ளார். அந்த பட்டியல்:
1. விராட் கோலி : 4 (2008/09)
2. பிரிதிவி ஷா : 4 (2020/21)
3. ருதுராஜ் கைக்வாட் : 4 (2020/21)
4. தேவ்தூத் படிக்கல் : 4 (2020/21)
5. நாராயண் ஜெகதீசன் : 4* (2022)

- Advertisement -

அது போக அந்த 4 சதங்களையும் தொடர்ச்சியாக அடித்துள்ள அவர் உள்ளூர் முதல் தர ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 4 போட்டிகளில் தொடர்ச்சியாக 4 சதங்களை அடித்த பேட்ஸ்மேன் என்ற இலங்கையின் குமார் சங்ககாரா தென்னாப்பிரிக்காவின் அல்விரோ பீட்டர்சன் மற்றும் இந்தியாவின் தேவ்தூத் படிக்கல் ஆகியோரது சாதனைகளையும் சமன் செய்துள்ளார். சமீப காலங்களாகவே இப்படி சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வரும் அவரை ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் குறைந்த விலைக்கு வாங்கி பெயருக்காக 7 போட்டிகளில் வாய்ப்பளித்து பெஞ்சில் அமர வைத்து வந்தது.

இருப்பினும் பெயரில் மட்டும் தமிழை வைத்துக்கொண்டு சமீப காலங்களாகவே தமிழக வீரர்களுக்கு வாய்ப்பளிக்காமல் இருந்து வரும் அந்த அணி நிர்வாகம் அடுத்த சீசனுக்காக நடைபெறும் ஏலத்திற்கு முன்பாக அவரையும் ஹரி நிஷாந்தையும் விடுவித்துள்ளது தமிழக ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்தது.

இதையும் படிங்க : IND vs NZ : எந்த நாட்டுக்கு போனாலும் இப்படித்தான் அடிப்பேன். சூரியகுமார் யாதவ் வெறியாட்டம் – இமாலய இலக்கு நிர்ணயிப்பு

ஆனால் சென்னை அணியிலிருந்து வெளியேறி அந்த அணிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உள்ளூர் தொடரில் சிறப்பாக செயல்படும் ஜெகதீசன் வரும் ஏலத்தில் வேறு ஏதேனும் அணிக்கு தேர்வாகி வளமான வருங்காலத்தை நோக்கி பயணிக்க தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement