IND vs NZ : எந்த நாட்டுக்கு போனாலும் இப்படித்தான் அடிப்பேன். சூரியகுமார் யாதவ் வெறியாட்டம் – இமாலய இலக்கு நிர்ணயிப்பு

Suryakumar Yadav
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் தோல்வியை சந்தித்து வெளியேறிய இந்தியாவின் கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட சீனியர்கள் நாடு திரும்பியுள்ள நிலையில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இளம் அணி நியூசிலாந்துக்கு பயணித்து 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்று வருகிறது. 2024 டி20 உலக கோப்பைக்கு முன்பாக புதிய அணியை உருவாக்கும் முயற்சியின் முதல் தொடராக கருதப்படும் இத்தொடரின் முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில் 2வது போட்டி நவம்பர் 20ஆம் தேதியன்று மௌன்ட் மௌங்கனி நகரில் துவங்கியது.

இந்திய நேரப்படி மதியம் 12 மணிக்கு துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு வித்தியாச முயற்சியாக ரிஷப் பண்ட் – இஷான் கிசான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். அதில் டி20 கிரிக்கெட்டில் எப்போதுமே சிறப்பாக செயல்படாத ரிசப் பண்ட் வழக்கம் போல தடவலான பேட்டிங்கை வெளிப்படுத்தி 6 (13) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினார். இடையே மழை குறுக்கே வந்தாலும் ரசிகர்களின் மகிழ்ச்சியை தடை செய்யாமல் குறுகிய நேரத்திலேயே விலகி சென்ற நிலையில் மறுபுறம் தடுமாற்றமாக செயல்பட்ட மற்றொரு தொடக்க வீரர் இஷான் கிசான் 5 பவுண்டரி 1 சிக்சருடன் 36 (31) ரன்கள் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

அசத்திய சூர்யா:
அடுத்த சில ஓவர்களிலேயே அடுத்ததாக களமிறங்கி அதிரடி காட்ட முயன்ற ஸ்ரேயாஸ் ஐயர் 1 பவுண்டரி 1 சிக்ருடன் 13 (9) ரன்களில் ஹிட் விக்கெட் முறையில் தன்னைத்தானே அவுட்டாக்கி ஏமாற்றத்துடன் பெவிலியன் திருப்பினார். இருப்பினும் 3வது இடத்தில் களமிறங்கி வழக்கம் போல எதிரணி எப்படி பந்து வீசினாலும் தனக்கே உரித்தான சூப்பர் ஸ்டார் ஸ்டைலில் அடித்து நொறுக்கிய நம்பிக்கை நட்சத்திரம் சூரியகுமார் யாதவ் இந்தியா நல்ல ஸ்கோரை எடுக்க போராடினார். 6வது ஓவரில் களமிறங்கி நியூசிலாந்து பவுலர்கள் எப்படி வீசினாலும் மைதானத்தில் நாலாபுறமும் சுழன்றடித்த அவர் முதல் பந்திலிருந்தே வழக்கம் போல 150க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டில் வெளுத்து வாங்கி அரை சதம் கடந்து இந்தியாவை காப்பாற்றினார்.

நேரம் செல்ல செல்ல அதிரடியை இரு மடங்கு அதிகப்படுத்திய அவர் 15 ஓவர்களுக்கு மேல் 200 ஸ்ட்ரைக் ரேட்டில் நியூசிலாந்து பவுலர்களை பவுண்டரிகளும் சிக்ஸர்களுமாக பறக்க விட்டு அதிரடியான சதமடித்து இந்தியாவை செங்குத்தாக தூக்கி நிறுத்தினார். மறுபுறம் அதை வேடிக்கை பார்த்த கேப்டன் ஹர்திக் பாண்டியா கடைசி ஓவரில் வெறும் 13 (13) ரன்களில் அவுட்டான நிலையில் அடுத்து வந்த தீபக் ஹூடா கோல்டன் டக் அவுட்டானார். ஆனால் அடுத்து வந்த வாஷிங்டன் சுந்தரையும் கோல்டன் அவுட்டாக்கிய நியூசிலாந்தின் டி சவுத்தி ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார்.

- Advertisement -

இருப்பினும் எதிர்புறம் கில்லியாக சொல்லி அடித்த சூரியகுமார் கடைசி வரை அவுட்டாகாமல் 11 பவுண்டரி 7 சிக்ஸருடன் 111* (51) ரன்களை 217.65 என்ற தெறிக்க விடும் ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்து இந்தியா 20 ஓவர்களில் 191/6 ரன்கள் குவிக்க உதவினார். நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக டிம் சவுத்தி 3 விக்கெட்டுகளை சாய்த்தார். இப்போட்டியில் இதர பேட்ஸ்மேன்கள் 50 ரன்கள் கூட எடுக்காத நிலையில் சூரியகுமார் யாதவ் மட்டுமே அதிரடியாக விளையாடி இந்தியாவை காப்பாற்றினார் என்று கூறலாம்.

முன்னதாக 30 வயதில் தாமதமாக அறிமுகமானாலும் கடந்த 2 வருடங்களில் பெரும்பாலான போட்டிகளில் எதிரணிகளை இதே போல் பந்தாடி வரும் சூரியகுமார் யாதவ் முதல் முறையாக தற்போது தான் நியூசிலாந்து மண்ணில் களமிறங்கினார். ஆனால் ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக சமீபத்திய உலகக்கோப்பையில் களமிறங்கி வெளுத்து வாங்கியது போலவே உலக தரத்தை கொண்டுள்ள தம்மால் உலகின் எந்த நாடுகளிலும் அதிரடியாக செயல்பட முடியும் என்பதை நியூசிலாந்து மண்ணிலும் காட்டியுள்ள சூரியகுமார் தன்னை உலகின் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேன் என்பதையும் மீண்டும் நிரூபித்துள்ளார் என்றே கூறலாம்.

Advertisement