இந்தியாவின் அந்த 2 வெற்றிகளுக்காக எதையும் செய்ய தயார் – விமர்சனங்களுக்கு விராட் கோலி அளித்த பதில் இதோ

kohli
- Advertisement -

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி கடந்த 2011 முதல் 3 வகையான கிரிக்கெட்டிலும் முடிந்த அளவுக்கு மிகச் சிறப்பாக பேட்டிங் செய்து ரன் மெஷினாக 20000க்கும் மேற்பட்ட ரன்களையும் 70 சதங்களையும் அடித்து ஏராளமான சரித்திர வெற்றிகளை பெற்றுக்கொடுத்த நம்பிக்கை நட்சத்திர நாயகனாக போற்றப்படுகிறார். சொல்லப்போனால் ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங் ஆகியோருக்கு அடுத்ததாக அதிக சதங்கள் அடித்த பேட்ஸ்மேனாக ஏற்கனவே தன்னை ஜாம்பவானாக நிரூபித்துள்ள அவர் 31 வயதிலேயே 70 சதங்கள் அடித்ததால் நிச்சயம் சச்சினின் 100 சதங்கள் சாதனையை துளாக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல் வளர்ச்சியை மட்டுமே சந்தித்து இமாலய உச்சத்தை தொட்ட அவர் கடந்த 2019க்குப்பின் பார்மை இழந்து சுமார் 3 வருடங்களாக டெஸ்ட், ஒருநாள், டி20 மற்றும் ஐபிஎல் என அனைத்து வகையான கிரிக்கெட்டையும் சேர்த்து 100 இன்னிங்ஸ்ளுக்கும் மேலாக சதமடிக்க முடியாமல் தவித்து வருகிறார். இருப்பினும் இந்த சோதனை காலத்திலும் இடையிடையே 40, 70 போன்ற நல்ல ரன்களை அவ்வப்போது அடித்து வரும் அவர் கடந்த 2020 – 2022* வரையிலான காலகட்டத்தில் 3 வகையான கிரிக்கெட்டிலும் அதிக ரன்கள் அடித்த இந்திய பேட்ஸ்மேன்களின் பட்டியலில் முதல் இடத்தில் தான் உள்ளார்.

- Advertisement -

கடுமையான விமர்சனம்:
ஆனாலும் களமிறங்கினாலே சதமடிப்பார் என்று அனைவரும் எதிர்பார்க்கும் அளவுக்கு ஆரம்ப காலங்களில் அபாரமாக செயல்பட்டு தனக்கென்று ஒரு தரத்தை உருவாக்கியுள்ள அவர் அடிக்கும் 50, 70 போன்ற ரன்களை கண்டுகொள்ளாத அனைவரும் விராட் கோலி பார்ம் அவுட்டாகி விட்டார் என்ற கோணத்திலேயே எப்போது சதமடிப்பார் என்று விமர்சனங்களை வைத்தனர். மேலும் உலகக் கோப்பை மற்றும் ஐபிஎல் கோப்பையை வாங்கி தரவில்லை என்பதற்காக கேப்டன்ஷிப் விமர்சனங்களை சந்தித்த அவர் அதிலிருந்து விடுபடுவதற்காக கடந்த 2021 அக்டோபர் முதல் 2022 ஜனவரி வரையிலான காலகட்டத்தில் அனைத்து பதவிகளையும் படிப்படியாக ராஜினமா செய்தார்.

அதனால் சாதாரண வீரராக சுதந்திர பறவையாக விளையாடி சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் ஐபிஎல் 2022 தொடரில் முதல் முறையாக 3 கோல்டன் டக் அவுட்டானது, கடைசி 5 ஒருநாள் இன்னிங்ஸ்களில் 20 ரன்களைக் கூட தாண்டாது என முன்பை விட சுமாராக செயல்பட துவங்கியுள்ளார். அதனால் பொறுமையிழந்த கபில் தேவ் உட்பட நிறைய முன்னாள் வீரர்கள் பெரிய பெயரை வைத்துக் கொண்டு எத்தனை நாட்கள் ரன்கள் அடிக்காமல் இளம் வீரர்களின் வாய்ப்பையும் கெடுத்துக் கொண்டு விளையாடுவீர்கள் என்ற கடுமையான விமர்சனங்களை வைத்து அணியிலிருந்து நீக்குமாறு கேட்க தொடங்கியுள்ளனர்.

- Advertisement -

ஓய்வுக்கான விமர்சனம்:
இதுபோக ஓடி ஓடி ரன்கள் சேர்த்த களைப்பு உடலிலும் ஆட்டத்திலும் தெரிவதால் ஐபிஎல் 2022 தொடரிலிருந்து பாதியிலேயே வெளியேறி சில மாதங்கள் ஓய்வெடுத்து புத்துணர்ச்சியுடன் பார்முக்கு திரும்புமாறு ரவிசாஸ்திரி போன்ற முன்னாள் வீரர்கள் கேட்டுக்கொண்டனர். ஆனால் தொடர்ந்து விளையாடினால் தானே பார்முக்கு திரும்ப முடியும் என்று பதிலளித்த அவர் தொடர்ச்சியாகவும் விளையாடாமல் இங்கிலாந்து தொடரில் மட்டும் பங்கேற்று விட்டு தற்போதைய வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஓய்வெடுக்கிறார். நாட்டுக்காக ஓய்வெடுப்பவர் இதுவே ஐபிஎல் தொடராக இருந்தால் இப்படி ஓய்வெடுப்பாரா என்று அதற்காக தனியாக விமர்சனங்களை சந்தித்துள்ளார்.

இருப்பினும் பென் ஸ்டோக்ஸ் போன்ற வீரர்கள் திடீரென ஒரு வகையான கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவதை பார்த்தால் இவருக்கும் ஓய்வு தேவைப்படுகிறது என்று புரிந்து கொள்ள முடிகிறது. மேலும் 70 சதங்கள் அடித்துள்ள அவருக்கு கெவின் பீட்டர்சன், கிராம் ஸ்வான், பாபர் அசாம் போன்றவர்களிடையே விமர்சனங்களையும் மிஞ்சிய ஆதரவும் கிடைத்துள்ளது. எனவே தற்போது ஓய்வில் இருக்கும் அவர் ஜிம்பாப்வே தொடரிலும் ஓய்வெடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுவதால் அடுத்ததாக வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் ஆசிய கோப்பையில் இந்தியாவுக்காக விளையாட உள்ளார்.

- Advertisement -

2 கோப்பைகள்:
இந்நிலையில் அந்த ஆசிய கோப்பையையும் அக்டோபரில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையையும் வெல்வதே தமது லட்சியம் என்று விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் விராட் கோலி தெரிவித்துள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்தியாவுக்காக ஆசிய கோப்பை மற்றும் உலக கோப்பை ஆகியவற்றை வெல்வதே என்னுடைய முதல் லட்சியமாகும். அதற்காக எதையும் செய்வதற்கு நான் தயாராகவுள்ளேன்” என்று கூறியுள்ளார்.

சேவாக், சச்சின் உட்பட எத்தனையோ ஜாம்பவான்கள் ஆசிய கோப்பையில் விளையாடியுள்ள நிலையில் 14 இன்னிங்ஸ் 766 ரன்களை குவித்துள்ள விராட் கோலி ஆசிய கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரராக சாதனை படைத்துள்ளார். இத்தனைக்கும் 2018 ஆசிய கோப்பை தொடரில் அவர் ஓய்வெடுத்த நிலையில் ரோகித் சர்மா தலைமையில் இந்தியா கோப்பையை வென்றது.

இதையும் படிங்க : ஒன்டே கிரிக்கெட் என்பது தூண் மாதிரி. அது எப்போதும் அழியாது, வாசிம் அக்ரமுக்கு முன்னாள் பாக் வீரர் பதிலடி

எனவே தமக்கு மிகவும் பிடித்த ஆசிய கோப்பையில் மிகச்சிறந்த கம்பேக் கொடுத்து அதன் வாயிலாக டி20 உலகக் கோப்பையையும் இந்தியாவிற்கு வாங்கி கொடுப்பதே லட்சியம் என்று விராட் கோலி விமர்சனங்களுக்கு மறைமுகமான பதில் தெரிவித்துள்ளார்.

Advertisement