என்னடா பந்து வீசுற நீ. கோபத்தில் கொந்தளித்த முரளிதரன். என்ன நடந்தது? – கெட்ட வார்த்தையில வேற திட்டிட்டாரு

Muralitharan Angry
- Advertisement -

பல எதிர்பாராத திருப்பங்களுடன் நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 27-ஆம் தேதி நடைபெற்ற 40-வது லீக் போட்டியில் வெறும் ஒரு ஒரே ஓவரில் எதிர்பாராத வகையில் வெற்றி கைமாறியது அனைவருக்கும் மிகப்பெரிய ஆச்சரியமாக அமைந்தது. புகழ்பெற்ற வான்கடே மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் ஹைதராபாத் மற்றும் குஜராத் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்திய நிலையில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 195/6 ரன்கள் குவித்தது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக இளம் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 65 (42) ரன்களும் ஐடன் மார்க்ரம் 56 (40) ரன்களும் எடுக்க கடைசி நேரத்தில் அறிமுகப் போட்டியில் களமிறங்கி வெளுத்து வாங்கிய இளம் வீரர் ஷஷாங்க் சிங் 25* (6) ரன்கள் குவித்து முரட்டுத்தனமான பினிஷிங் கொடுத்தார். குஜராத் சார்பில் அதிகபட்சமாக முகமது சமி 3 விக்கெட்டுகளை எடுத்தார். அதைத்தொடர்ந்து 196 என்ற இலக்கை துரத்திய குஜராத்துக்கு தொடக்க வீரர்கள் ரித்திமான் சஹா – சுப்மன் கில் ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 69 ரன்கள் எடுத்து அற்புதமான தொடக்கம் கொடுத்தனர்.

- Advertisement -

போராடிய உம்ரான்:
அப்போது 7-வது ஓவரில் முதல் முறையாக பந்தை கையிலெடுத்த ஜம்மு காஷ்மீரின் 22 வயது இளம் மிரட்டல் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் சுப்மன் கில்லை 22 (24) ரன்களில் க்ளீன் போல்டாக்கி அடுத்து வந்த குஜராத் கேப்டன் பாண்டியாவையும் 10 (6) ரன்களில் காலி செய்தார். அந்த நிலைமையில் அதிரடியாக 68 (38) ரன்கள் எடுத்து வெற்றிக்கு போராடிக்கொண்டிருந்த சகாவின் ஸ்டம்ப்களையும் பறக்கவிட்ட அவர் 15-வது ஓவரில் மிரட்டல் டேவிட் மில்லரை 17 (19) ரன்களிலும் அபினவ் மனோகரை கோல்டன் டக் அவுட் செய்தும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை எடுத்து போட்டியை மொத்தமாக ஹைதராபாத் கைக்குள் கொண்டு வந்தார்.

அதனால் கடைசி 5 ஓவரில் வெற்றிக்கு 56 ரன்கள் தேவைப்பட்டதாலும் குஜராத் ஏற்கனவே 5 விக்கெட்டுகளை இழந்த காரணத்தாலும் ஹைதராபாத் வெற்றி உறுதி என அனைவரும் நம்பினர். ஆனால் அந்த நேரத்தில் ஹைதெராபாத் வில்லனாக களமிறங்கிய ராகுல் திவாடியா அதிரடியான பவுண்டரிகளை பறக்கவிட்டு போட்டியில் திருப்புமுனையை ஏற்படுத்த அவருக்கு உறுதுணையாக ரஷீத் கான் கைகோர்த்தார். அதன் காரணமாக வெற்றியை நெருங்கிய குஜராத்துக்கு கடைசி ஓவரில் 22 ரன்கள் தேவைப்பட்டது.

- Advertisement -

சொதப்பிய மார்கோ யான்சென்:
அப்போது இதர பவுலர்கள் அனைவரும் ஏற்கனவே ஓவர்களை வீசி முடித்த காரணத்தாலும் பெங்களூருக்கு எதிரான போட்டியில் நட்சத்திரம் விராட் கோலியை கோல்டன் டக் அவுட் செய்தார் என்ற காரணத்தாலும் அந்த கடைசி ஓவரை தென் ஆப்பிரிக்காவின் இளம் வேகப்பந்து வீச்சாளர் மார்கோ யான்சனிடம் நம்பி கேப்டன் கேன் வில்லியம்சன் வழங்கினார். ஆனால் நம்பிக்கைக்கு பாத்திரமாக பந்து வீசாத அவரின் முதல் பந்திலேயே ராகுல் திவாடியா மிரட்டல் சிக்சரை பறக்கவிட்டு 2-வது பந்தில் சிங்கிள் எடுக்க 3-வது பந்தை எதிர்கொண்ட ரஷித் கான் அதைவிடப் பெரிய சிக்சரை பறக்க விட்டார்.

அப்போது சுதாரித்த யான்சன் 4-வது பந்தில் ரன் ஏதுவும் கொடுக்காத நிலையில் 5-வது பந்தில் மீண்டும் சிக்ஸரை வழங்கினார். அதனால் மிகப்பெரிய பரபரப்பு ஏற்பட்ட நிலையில் கடைசி பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்ட போது தேவையில்லாமல் ஃபுல் லென்த் பந்தாக மார்கோ யான்சென் வீசிய நிலையில் அதை மெகா சிக்ஸராக தெறிக்கவிட்ட ரசித் கான் “சியர்ஸ்” சொல்லி குஜராத்துக்கு 5 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.

- Advertisement -

கொந்தளித்த முரளிதரன்:
கடைசி ஓவரில் 22 ரன்களை கட்டுப்படுத்த முடியாத மார்கோ யான்சென் அதுவும் ரஷித் கான் போன்ற பகுதி நேர பேட்ஸ்மேனுக்கு எதிராக மோசமான பந்து வீசி அடுத்தடுத்த சிக்சர்களை கொடுத்ததுடன் கையிலிருந்த வெற்றியையும் எதிரணிக்கு தாரை வார்த்தது ஹைதராபாத் ரசிகர்களின் நெஞ்சை உடைத்தது. குறிப்பாக அதை பெவிலியனிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த ஹைதராபாத் அணியின் சுழல் பந்துவீச்சு பயிற்சியாளர் மற்றும் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் கோபத்தில் “எதற்கு புல் லென்த் பந்தை வீசினார்” என்பது போல் ஒருசில கெட்ட வார்த்தைகளை உபயோகித்து கோபத்தில் கொந்தளித்து துள்ளி குதித்த வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி விடுகிறது.

அதிலும் 1300 விக்கெட்டுகள் எடுத்த முரளிதரன் எத்தனையோ முறை பீல்டர்கள் கேட்சை கோட்டை விட்டபோது கூட இந்த அளவுக்கு கோபம் கொண்டதில்லை என ரசிகர்கள் வியக்கின்றனர். முன்னதாக இப்போட்டியில் வெற்றியோடு சேர்த்து மொத்தம் 63 ரன்களை எதிரணிக்கு வாரி வழங்கிய அவர் ஐபிஎல் வரலாற்றில் ஒரு போட்டியில் அதிக ரன்களை வாரி வழங்கிய 2-வது வெளிநாட்டு பவுலர் என்ற பரிதாபமான சாதனையும் படைத்தார்.

இதையும் படிங்க : கடைசி ஓவர்ல இப்படி நடக்கும்னு நாங்க எதிர்பார்க்கல. குஜராத் அணிக்கெதிரான தோல்வி குறித்து பேசிய – கேன் வில்லியம்சன்

அந்த பட்டியல் இதோ:
1. முஜீப் உர் ரஹ்மான் : 66 ரன்கள்
2. மார்கோ யான்சென் : 63* ரன்கள்
3. மைக்கெல் நாசர்/லுங்கி நிகிடி: 62 ரன்கள்

Advertisement