
இலங்கை நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச கிரிக்கெட் அணியானது தற்போது அந்நாட்டு அணிக்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டியானது கடந்த ஜூன் 17-ஆம் காலே நகரில் தேதி துவங்கிய வேளையில் இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதனை தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய வங்கதேச அணி 153.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 495 ரன்கள் குவித்தது. வங்கதேச அணி சார்பாக அதிகபட்சமாக அந்த அணியின் கேப்டன் நஜ்முல் ஷாண்டோ 148 ரன்களையும், முஷ்பிகுர் ரஹீம் 163 ரன்களையும் குவித்து அசத்தினர்.
இலங்கை அணி சார்பாக அஷிதா பெர்ணான்டோ 4 விக்கெட்டுகளையும், ரத்நாயகே மற்றும் தரிந்து ரத்நாயகே ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். அதனை தொடர்ந்து தற்போது தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வரும் இலங்கை அணியானது மூன்றாம் நாள் மூன்றாவது செஷன் வரை 4 விக்கெட்டுகளை இழந்து 365 ரன்கள் குவித்துள்ளது.
இந்நிலையில் இந்த போட்டியின் போது வங்கதேச அணி சார்பாக அதிக ரன்களை குவித்த அந்த அணியின் அனுபவ வீரரான முஷ்பிகுர் ரஹீம் 350 பந்துகளை சந்தித்து 9 பவுண்டரியுடன் 163 ரன்கள் குவித்து அசத்தினார். அவர் அடித்த இந்த 163 ரன்கள் மூலம் முன்னாள் ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்டின் மாபெரும் சாதனை ஒன்றினையும் முறியடித்துள்ளார்.
அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு பந்துகூட வீசாமல் அதிக ரன்கள் குவித்த வீரராக முன்னாள் ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஆடம் கில்கிறிஸ்ட் 15,461 ரன்களுடன் முதலிடத்தில் இருந்தார்.
இதையும் படிங்க : கிட்டத்தட்ட 8000 ரன்கள்.. 27 சதம்.. பர்ஸ்ட் அவருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு குடுங்க – முகமது கைப் கருத்து
இந்நிலையில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் 163 ரன்கள் அடித்ததன் மூலம் தற்போது வங்கதேச அனுபவ வீரரான முஷ்பிகுர் ரஹீம் சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு பந்துகூட வீசாமல் 15513 ரன்களை குவித்து ஆடம் கில்கிறிஸ்ட்டின் அந்த சாதனையை முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.