வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது அந்நாட்டு அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரை ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் கைப்பற்றியது. அதனை தொடர்ந்து நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றியது. அதற்கு அடுத்ததாக தற்போது ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.
இந்நிலையில் இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் சீனியர் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டதன் காரணமாக இந்திய அணியில் வாய்ப்புக்காக காத்திருந்த முகேஷ் குமாருக்கு இது ஒரு லக்கியான தொடராகவே மாறியுள்ளது.
ஏனெனில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் அறிமுக வீரராக களமிறங்கிய முகேஷ் குமார் அடுத்ததாக ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் முகமது சிராஜ் ஓய்வு எடுத்துக் கொண்டதன் காரணமாக ஒருநாள் போட்டிகளிலும் அறிமுகமானார். இப்படி சர்வதேச டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமான முகேஷ் குமார் குறைந்த இடைவெளியில் இரண்டு வகையான கிரிக்கெட்டிலும் இடம் பிடித்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார்.
அதோடு மட்டுமின்றி தற்போது டி20 தொடருக்கான இந்திய அணியிலும் இடம் பிடித்திருந்த அவர் நேற்று இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் விளையாடியதன் மூலம் மூன்று வகையான கிரிக்கெட்டிலும் ஒரே சுற்றுப்பயணத்தில் அறிமுகமான இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இதற்கு முன்னதாக தமிழக கிரிக்கெட் வீரரான நடராஜன் கடந்த 2020-21 இல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற தொடருக்கான அணியில் இடம் பெற்றிருந்த போது ஒரே தொடரில் மூன்று வகையான கிரிக்கெட்டிலும் அறிமுகமாகியுள்ளார். அவருக்கு அடுத்து முகேஷ் குமார் தான் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இதையும் படிங்க : வீடியோ : அடுத்தடுத்த சிக்சருடன் மாஸ் காட்டிட்டீங்க நண்பா புல்லரிக்குது – திலக் வர்மாவை பாராட்டிய குட்டி ஏபிடி ப்ரேவிஸ்
அதன்படி நேற்றைய டி20 கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான முகேஷ் குமார் இந்த ஒரே தொடரில் மூன்று வகையான கிரிக்கெட்டிலும் அறிமுகமாகியுள்ளார். நேற்றைய போட்டியில் 3 ஓவர்கள் வீசிய அவர் விக்கெட் எதுவும் எடுக்காமல் 24 ரன்கள் விட்டுக்கொடுத்திருந்தார். அதிலும் குறிப்பாக கடைசியாக அவர் வீசிய 18-வது மற்றும் 20-ஆவது ஓவர்களில் அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்தி அசத்தி பாராட்டுகளையும் பெற்றிருந்தார்.