IPL 2023 : ரோஹித்தால் நெருங்க முடியாது – கேப்டனாக மிஸ்பாவின் சாதனையை உடைத்த தல தோனி – புதிய உலக சாதனை

MS Dhoni Jadeja
- Advertisement -

கோடைகாலத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை பரபரப்பான போட்டிகளுடன் மகிழ்வித்து வந்த ஐபிஎல் 2023 டி20 தொடரில் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 5வது கோப்பையை வென்று வரலாற்றின் வெற்றிகரமான அணி என்ற மும்பையின் ஆல் டைம் சாதனையை சமன் செய்துள்ளது. கடந்த வருடம் ரவீந்திர ஜடேஜாவிடம் கேப்டன்ஷிப் பொறுப்பை கொடுத்ததாலும் முக்கிய வீரர்கள் சுமாராக செயல்பட்டதாலும் புள்ளி பட்டியலில் 9வது இடத்தை பிடித்து வெளியேறிய சென்னை இம்முறை மீண்டும் தோனி தலைமையில் ஆரம்பம் முதலே சீரான வெற்றிகளை பெற்று 2வது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

அதை தொடர்ந்து தங்களது சொந்த ஊரான சேப்பாக்கத்தில் நடைபெற்ற குவாலிபயர் 1 போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத்தை தோற்கடித்த சென்னை நேரடியாக வரலாற்றில் 10வது முறையாக ஃபைனலுக்கு தகுதி பெற்றது. அதை விட மீண்டும் நடப்பு சாம்பியன் குஜராத்தை அதன் கோட்டையான அகமதாபாத் மைதானத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் ஃபைனலில் தோற்கடித்த சென்னை 5வது சாம்பியன் பட்டத்தை முத்தமிட்டது. மழையால் ரிசர்வ் நாளில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் 20 ஓவர்களில் 214/4 ரன்கள் குவித்து அசத்தியது. அதிகபட்சமாக தமிழக வீரர் சாய் சுதர்சன் அதிரடியாக 96 (47) ரன்கள் எடுக்க சென்னை சார்பில் அதிகபட்சமாக பதிரனா 2 விக்கெட்களை எடுத்தார்.

- Advertisement -

வயதான சிங்கம்:
அதை தொடர்ந்து மழையால் 15 ஓவரில் 171 என்ற புதிய இலக்கை துரத்திய சென்னைக்கு ருதுராஜ் கைக்வாட் 26 (16) ரன்களும் டேவோன் கான்வே 47 (25) ரன்களும் எடுக்க மிடில் ஆர்டரில் சிவம் துபே 32* (21) ரகானே 27 (13) ராயுடு 19 (8) என முக்கிய வீரர்கள் அதிரடியான ரன்களை எடுக்க மோகித் சர்மா வீசிய கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்ட போது சிக்ஸரையும் பவுண்டரியும் பறக்க விட்ட ரவீந்திர ஜடேஜா மாஸ் ஃபினிஷிங் கொடுத்து வெற்றி பெற வைத்தார். அதனால் மோஹித் சர்மா 3 விக்கெட்டுகளை எடுத்தும் குஜராத் கோப்பையை தக்க வைக்கும் வாய்ப்பை நழுவ விட்டது.

அந்த வெற்றியால் 2010, 2011, 2018, 2021, 2023* என 5 கோப்பையை வென்ற எம்எஸ் தோனி ஐபிஎல் வரலாற்றில் அதிக கோப்பைகளை வென்ற கேப்டன் என்ற ரோகித் சர்மாவின் சாதனையை சமன் செய்தார். அத்துடன் 2010, 2014 ஆகிய வருடங்களில் வருடங்களில் நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் டி20 கோப்பையையும் கேப்டனாக தோனி சென்னைக்கு வென்று கொடுத்துள்ளார். அது போக இந்தியாவுக்காக 2007 டி20 உலக கோப்பையையும் கேப்டனாக வென்றுள்ள அவர் 2016இல் டி20 தொடராக நடைபெற்ற ஆசியக் கோப்பையையும் வென்றுள்ளார்.

- Advertisement -

அப்படி இதுவரை மொத்தமாக 9 டி20 தொடர்களின் ஃபைனல்களில் வென்றுள்ள தோனி டி20 கிரிக்கெட்டில் அதிக தொடர்களில் கோப்பையை வென்ற கேப்டன் என்ற சாதனையை படைத்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக ரோகித் சர்மா விரைவில் நெருங்க முடியாத அளவுக்கு 5 ஐபிஎல் கோப்பை (2013, 2015, 2017, 2019, 2020), 1 சாம்பியன்ஸ் லீக் (2013) மற்றும் 1 ஆசிய கோப்பை (2018) என மொத்தம் 7 கோப்பைகளுடன் 2வது இடத்தில் உள்ளார். 3வது இடத்தில் பாகிஸ்தானின் சோயப் மாலிக் (5) உள்ளார்.

அதை விட 41 வருடம் 326 நாட்களில் 5வது ஐபிஎல் கோப்பையை வென்றுள்ள அவர் உலக அளவில் அதிக வயதில் ஒரு தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்ற கேப்டன் என்ற பாகிஸ்தானின் மிஸ்பா-உல்-ஹக் சாதனையைத் தகர்த்து புதிய உலக சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் கடந்த 2016 பிஎஸ்எல் தொடரில் மிஸ்பா தனது 41 வயது 276 நாட்களில் கேப்டனாக கோப்பையை வென்றதே முந்தைய சாதனையாகும்.

இதையும் படிங்க:IPL 2023 : ப்ளீஸ் சீக்கிரம் அவர கழற்றி விடுங்க, 2 மோசமான சாதனையால் மானத்தை வாங்கிய பவுலரை – விளாசும் சிஎஸ்கே ரசிகர்கள்

அப்படி 41 வயதிலும் இந்த சீசனில் கடைசி நேரத்தில் களமிறங்கி ஒரு சில போட்டிகளில் அதிரடியான சிக்சர்களை பறக்க விட்டு தன்னை மிகச் சிறந்த ஃபினிஷர் என்பதை நிரூபித்த தோனி வயதானாலும் சிங்கத்தின் ஸ்டைல் மாறாது என்பது போல் தற்போது மூத்த வயதிலும் உலக டி20 கிரிக்கெட்டில் அதிக கோப்பைகளை வென்று தன்னை மகத்தான கேப்டன் என்பதையும் நிரூபித்துள்ளார்.

Advertisement