ஜானி பேர்ஸ்டோவின் சர்ச்சையான ரன் அவுட் – மீண்டும் ட்ரெண்டிங்கில் வந்த தல தோனி – எதற்கு தெரியுமா (வீடியோ பாருங்க புரியும்)

Jonny Bairstow Out
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் ஆஷஸ் 2023 டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலியா 2வது போட்டியிலும் 43 ரன்கள் வித்தியாசத்தில் வென்று ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. மறுபுறம் அதிரடியாக விளையாடுகிறோம் என்ற பெயரில் அடுத்தடுத்த போட்டிகளில் கையில் வைத்திருந்த வெற்றியை கோட்டை விட்டு சொந்த மண்ணில் தலை குனிந்துள்ள இங்கிலாந்து விமர்சனங்களை சந்தித்துள்ளது.

அதை விட லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2வது போட்டியில் கேமரூன் கிரீன் வீசிய 56வது ஓவரில் பவுன்ஸ் ஆகி வந்த கடைசி பந்தை அடிக்காமல் குனிந்து விட்ட ஜானி பேர்ஸ்டோ விக்கெட் கீப்பர் முழுமையாக பிடிப்பதற்கு முன்பாகவே எதைப் பற்றியும் யோசிக்காமல் வெள்ளை கோட்டை விட்டு வெளியேறினார். அந்த சமயத்தில் விழிப்புணர்வுடன் செயல்பட்ட ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி பந்தை உடனடியாக ஸ்டம்ப்புகளில் அடித்து அவரை ரன் அவுட் செய்தது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

- Advertisement -

தோனி, சச்சின் மாதிரி வருமா:
குறிப்பாக விதிமுறைக்குட்பட்டு அவுட் செய்தாலும் அந்த பந்தை முழுமையாக எதிர்கொண்டு முடித்து விட்டேன் என்பதை காண்பிப்பதற்காக அனைத்து பேட்ஸ்மேன்களையும் போல வெள்ளை கோட்டுக்கு உள்ளே தம்முடைய காலால் குறிப்பிட்ட பின்பு தான் ஜானி பேர்ஸ்டோ வெளியேறினார். எனவே அதை கருத்தில் கொண்டு நியாயத்துடன் நடந்து கொள்ள வேண்டிய ஆஸ்திரேலியா நேர்மைக்கு புறம்பாக நடந்து கொண்டதாக இங்கிலாந்து சேர்ந்தவர்கள் விமர்சித்து வருகின்றனர். இதைப் பார்த்த பெரும்பாலான இந்திய ரசிகர்கள் “எல்லோருக்கும் குறிப்பாக ஆஸ்திரேலியர்களுக்கு தோனி தலைமையிலான இந்திய அணியின் மனசு வருமா” என்று நெகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.

ஏனெனில் இதே இங்கிலாந்துக்கு எதிராக கடந்த 2011ஆம் ஆண்டு நாட்டிங்காம் நகரில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் இஷாந்த் சர்மாவின் பந்தில் இயன் மோர்கன் லெக் சைட் திசையில் பவுண்டரி அடிக்க முயற்சித்தார். இருப்பினும் அதைத் துரத்திய இந்தியாவின் பிரவீன் குமார் பவுண்டரி எல்லையை தொடுவதற்கு சில இன்ச்கள் முன்பாக பந்தை கச்சிதமாக தடுத்தார். ஆனால் அது பவுண்டரி சென்று விட்டதாக நினைத்த இங்கிலாந்து வீரர்கள் வெள்ளை கோட்டை விட்டு வெளியே நின்று அதைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது பிரவீன் குமார் எடுத்து போட்ட பந்தை பிடித்த தோனி இதே போல விழிப்புணர்வுடன் செயல்பட்டு இயன் பெல்லை ரன் அவுட் செய்தார்.

- Advertisement -

அதைத்தொடர்ந்து இந்திய அணியினர் கேட்ட அவுட்டை 3வது நடுவர் சோதித்த போது பந்து பவுண்டரியை தொடாதது தெளிவாக தெரிய வந்தது. மறுபுறம் இயன் பெல் வெள்ளைக்கோட்டை விட்டு வெளியே இருந்ததால் இந்தியா கேட்ட படி நடுவர்கள் அவுட் கொடுத்தனர். இருப்பினும் அதை ஏற்றுக் கொள்ளாத இங்கிலாந்து ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்திய நிலையில் தேனீர் இடைவெளியை நோக்கி இயல் ஏமாற்றத்துடன் பெவிலியன் நோக்கி சென்றார். ஆனால் அந்த சமயத்தில் நேர்மைக்கு எதிராக நடந்து கொண்டதாக கருதிய சச்சின் டெண்டுல்கர் தம்முடைய கேப்டன் எம்எஸ் தோனயிடம் அதை திரும்ப பெறுமாறு கேட்டுக் கொண்டார்.

அதை ஏற்றுக்கொண்ட தோனி தேனீர் இடைவெளியில் நடுவர்களிடம் பேசி தங்களுடைய முடிவை வாபஸ் பெறுவதாக அறிவித்தார். இங்கு விஷயம் என்னவெனில் அந்த சமயத்தில் இயன் பெல் ஏற்கனவே 137 ரன்களை அடித்து இந்தியாவுக்கு சவாலை கொடுத்த நிலையில் இங்கிலாந்து 184 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. அதனால் இந்தியா நினைத்திருந்தால் விமர்சனங்களை தாண்டி வெற்றிக்காக அந்த முடிவை தொடர்ந்திருக்கலாம். ஆனாலும் நேர்மைக்கு புறம்பாக நடந்து கொள்ளக்கூடாது என்று கருதிய தோனி தலைமையிலான இந்தியா அந்த முடிவை வாபஸ் பெற்றதால் இயன் பெல் களமிறங்கியது இங்கிலாந்தினரை பாராட்ட வைத்தது.

இதையும் படிங்க:2023 உலக கோப்பையுடன் ஓய்வு பெற வாய்ப்புள்ள 5 நட்சத்திர இந்திய வீரர்கள் – சோகமான லிஸ்ட் இதோ

இறுதியில் எதிர்பார்க்கப்பட்டது போலவே அந்த போட்டியில் 319 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா மெகா தோல்வியை சந்தித்தாலும் அந்த குறிப்பிட்ட சமயத்தில் நேர்மையுடன் நடந்து கொண்டது. அதற்காக “2010 – 2019 தசாபத்தின் சிறந்த நேர்மை தன்மையுடன் நடந்து கொண்ட தருணம்” என்ற விருதை இந்தியாவின் எம்எஸ் தோனிக்கு ஐசிசி அறிவித்து கௌரவப்படுத்தியது. அப்படிப்பட்ட அந்த வரலாற்று சிறப்புமிக்க வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement