2023 உலக கோப்பையுடன் ஓய்வு பெற வாய்ப்புள்ள 5 நட்சத்திர இந்திய வீரர்கள் – சோகமான லிஸ்ட் இதோ

Rohit-and-Ashwin
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் 2023 ஐசிசி உலகக் கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் கோலாகலமாக நடைபெற உள்ளது. அதில் சொந்த மண்ணில் வலுவான அணியாக கருதப்படும் இந்தியா 2011 போல கோப்பையை வென்று 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. பொதுவாக உலகக் கோப்பை என்பது சாம்பியனை மட்டும் தீர்மானிக்காமல் பல வீரர்களின் வாழ்வையும் தீர்மானிக்கக் கூடிய ஒன்றாக இருந்து வருகிறது.

- Advertisement -

அதாவது நாட்டுக்காக விளையாடும் பல வீரர்கள் 4 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் உலகக்கோப்பையை மையப்படுத்தி தங்களுடைய வயது மற்றும் ஃபார்ம் ஆகியவற்றை கணக்கிட்டு ஓய்வு முடிவு முடிவை அறிவிப்பார்கள். அந்த வரிசையில் இந்த உலகக் கோப்பையுடன் சொந்த மண்ணில் விடை பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் 5 நட்சத்திர இந்திய கிரிக்கெட் வீரர்களை பற்றி பார்ப்போம்:

1. ஷிகர் தவான்: 2013 சாம்பியன்ஸ் டிராபியில் தோனியின் முடிவால் நிரந்தர தொடக்க வீரராக உருவெடுத்து தங்க பேட் விருது வென்று இந்தியா கோப்பையை வெல்ல உதவிய இவர் 2017 தொடரிலும் தங்க பேட் விருது வென்று 2019 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக காயத்துடன் சதமடித்து வெற்றி பெற வைத்து வெளியேறினார்.

Dhawan

ஆனால் அந்த இடத்தை கேஎல் ராகுல் தனதாக்கிய நிலையில் காயத்திலிருந்து குணமடைந்து சற்று அதிரடியாக விளையாட தடுமாறிய இவருக்கு போட்டியாக தற்போது சுப்மன் கில், இசான் கிசான் போன்ற இளம் வீரர்கள் வந்து விட்டனர். அதனால் மிஸ்டர் ஐசிசி என்று ரசிகர்களால் அழைக்கப்படுவதுடன் 37 வயதை கடந்த இவர் 2027 உலக கோப்பை நிச்சயமாக விளையாட மாட்டார் என்று சொல்லலாம்.

- Advertisement -

2. ரோஹித் சர்மா: அதே தோனியால் மிடில் ஆர்டரில் தடுமாறிய இவர் ஓப்பனிங் வீரராக வாய்ப்பு பெற்று 3 இரட்டை சதங்களை அடித்து ஜாம்பவானாக உருவெடுத்து இன்று இந்தியாவின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இருப்பினும் 2019 உலகக் கோப்பையில் 5 சதங்கள் அடித்து சாதனை படைத்த அவர் சமீப காலங்களாகவே ஹிட்மேன் என்ற தன்னுடைய பெயருக்கேற்றார் போல் அல்லாமல் சுமாரான ஃபிட்னஸ் காரணமாக பேட்டிங்கிலும் தடுமாற்றமாக செயல்பட்டு வருகிறார்.

Rohit-Sharma

அதனால் கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ள அவர் 36 வயதாவதால் நிச்சயமாக 2027 உலகக்கோப்பையில் 40 வயதில் விளையாட வாய்ப்பில்லை. எனவே 9825 ரன்கள், 30 சதங்களை அடித்து ஜாம்பவானாக போற்றப்படும் அவர் சொந்த மண்ணில் கேப்டனாக கோப்பையை வென்று சாம்பியனாக ஓய்வு பெறுவதற்கு போராடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

3. விராட் கோலி: 23 வயதிலேயே 2011 உலக கோப்பையை வென்ற இவர் 2010 தசாப்தத்தின் சிறந்த ஒருநாள் வீரர் என்ற ஐசிசி விருதை வென்று 12000க்கும் மேற்பட்ட ரன்களையும் 46 சதங்களை அடித்து நவீன கிரிக்கெட்டில் ஜாம்பவானாக இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வருகிறார்.

Virat Kohli

ஆனாலும் வரும் அக்டோபரில் 35 வயதை தொடுவதற்காக காத்திருக்கும் அவர் 2027இல் 39 வயதில் உலகக்கோப்பையில் விளையாடுவதற்கு வாய்ப்பில்லை. சொல்லப்போனால் குறிப்பிட்ட வயதிற்கு பின் ஏதோ ஒரு வகையான கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவேன் என்று அவர் ஏற்கனவே தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் தமக்கு பிடித்த டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ரசிகர்களை மகிழ்விக்க டி20 கிரிக்கெட்டிலும் தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படும் ஒருநாள் கிரிக்கெட்டில் 2023 உலக கோப்பைக்குப்பின் விடை பெறுவார் என்றே சொல்லலாம்.

- Advertisement -

4. ரவிச்சந்திரன் அஸ்வின்: 2011 உலகக்கோப்பை 2013 சாம்பியன்ஸ் டிராபி வெற்றிகளில் முக்கிய பங்காற்றிய இவர் தோனி கேப்டனாக விடைபெற்றதுமே வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் நிரந்தர வாய்ப்பை இழந்தார். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டிலேயே ஜாம்பவானாக உருவெடுத்தும் இன்னும் நிலையான வாய்ப்பு பெறாத அவருக்கு ஒருநாள் அணியில் சஹால், குல்தீப், அக்சர் படேல் போன்ற நிறைய இளம் வீரர்கள் போட்டியாக இருக்கின்றனர்.

Ravichandran Ashwin

அதனால் 37 வயதாகும் அவர் இந்த உலகக் கோப்பைக்கு பின் அதிகாரப்பூர்வமாக வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் ஓய்வு முடிவை அறிவித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடும் முடிவை எடுக்க அதிக வாய்ப்புள்ளது.

5. ஜஸ்பிரித் பும்ரா: 29 வயது மட்டுமே நிரம்பியிருந்தாலும் அடிக்கடி காயத்தை சந்திக்கும் இவர் வித்தியாசமான பவுலிங் ஆக்சனை கொண்டிருப்பதால் டெஸ்ட், ஒருநாள், டி20, ஐபிஎல் என அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் விளையாட முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார். குறிப்பாக தற்போது காயத்திலிருந்து குணமடைந்து வரும் அவர் 2023 உலகக்கோப்பையில் பங்கேற்பாரா என்பதே சந்தேகமாக பார்க்கப்படுகிறது.

Bumrah

இதையும் படிங்க:டி20ல அடிச்சா போதுமா? இந்தியாவுக்காக அதை செய்விங்கன்னு எதிர்பார்க்கிறேன் – சூரியகுமாருக்கு ஏபிடி முக்கிய கோரிக்கை

எனவே ஏதேனும் ஒரு வகையான கிரிக்கெட்டில் ஓய்வு பெற வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ள அவர் 2 உலக கோப்பைக்கு நடுவே முக்கியமற்றதாக நடைபெறும் ஒருநாள் போட்டிகளில் காலத்தின் கட்டாயத்தால் விடைபெற்று டி20 கிரிக்கெட்டில் அதிகம் விளையாடுவதற்கு வாய்ப்புள்ளது.

Advertisement