டி20ல அடிச்சா போதுமா? இந்தியாவுக்காக அதை செய்விங்கன்னு எதிர்பார்க்கிறேன் – சூரியகுமாருக்கு ஏபிடி முக்கிய கோரிக்கை

AB DE villiers Suryakumar Yadav
- Advertisement -

மும்பையை சேர்ந்த நட்சத்திர கிரிக்கெட் வீரர் சூரியகுமார் யாதவ் உள்ளூர் மற்றும் ஐபிஎல் தொடரில் கடுமையாக போராடி ஒரு வழியாக கடந்த 2021ஆம் ஆண்டு இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் தாமதமாக 30 வயதில் அறிமுகமானார். அதன் காரணத்தாலேயே டி20 கிரிக்கெட்டில் கிடைத்த எந்த வாய்ப்புகளையும் வீணடிக்காமல் பெரும்பாலான போட்டிகளில் களமிறங்கிய முதல் பந்திலிருந்தே எதிரணிகளை அடித்து நொறுக்கி பெரிய ரன்களை குவித்த அவர் இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து லேட்டஸ்ட் மேட்ச் வின்னராக அவதரித்து தர வரிசையில் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக முன்னேறி சாதனை படைத்தார்.

SUryakumar Yadav 112

- Advertisement -

குறிப்பாக எப்படி போட்டாலும் அடிக்கிறார் என்ற வகையில் எதிரணி பவுலர்களை மைதானத்தின் நாலாபுறங்களிலும் நினைத்துப் பார்க்க முடியாத வித்யாசமான ஷாட்களால் சிக்ஸர்களாக பறக்க விட்ட அவரை இந்தியாவின் மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என்றும் இந்த தலைமுறையின் மகத்தான வீரர் என்றும் நிறைய முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் பாராட்டினர். ஆனால் டி20 கிரிக்கெட்டில் அசால்டாக 3 சதங்களை அடித்துள்ள அவர் சற்று நிதானத்துடன் விளையாட வேண்டிய ஒருநாள் கிரிக்கெட்டில் ஆரம்பம் முதலே தடுமாற்றமாக செயல்பட்டு இதுவரை வெறும் ஒரு அரை சதம் மட்டுமே அடித்துள்ளார்.

ஏபிடி கோரிக்கை:
அதிலும் கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஹாட்ரிக் கோல்டன் டக் அவுட்டான அவர் மோசமான உலக சாதனை படைத்தார். அதனால் டி20 கிரிக்கெட்டுக்கு மட்டுமே சரிப்பட்டு வருவார் என்ற விமர்சனங்கள் எழுந்த நிலையில் ஐபிஎல் 2023 தொடரின் 2வது பகுதியில் மீண்டும் அடித்து நொறுக்கிய அவர் மும்பை பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முக்கிய பங்காற்றி ஃபார்முக்கு திரும்பினார். எனவே அடுத்து வரும் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு 2023 உலக கோப்பையை அவர் வென்று கொடுக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது.

இந்நிலையில் சில சமயங்களில் தம்மையும் மிஞ்சி வித்தியாசமான ஷாட்டுகளை அடிக்கும் சூரியகுமார் யாதவ் டி20 மட்டுமின்றி டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அசத்துவதை எதிர்பார்ப்பதாக தென்னாபிரிக்க ஜாம்பவான் ஏபி டீ வில்லியர்ஸ் கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் தொடர்ந்து சிறப்பாக செயல்படுவதே அவருக்கு காத்திருக்கும் மிகப்பெரிய சவால் என்று நினைக்கிறேன். குறிப்பாக டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என வெவ்வேறு வகையான போட்டிகளில் எப்படி அசத்த வேண்டும் என்பதை அவர் புரிந்து கண்டறிய வேண்டும்”

- Advertisement -

“சொல்லப்போனால் இப்போது அவர் அதை உணர்ந்திருப்பார் என்று நம்புகிறேன். மேலும் அவர் அடிக்கும் அபாரமான ஃபுல் ஷாட்டை நான் கூட அடித்ததில்லை. குறிப்பாக நான் பெரிய இன்னிங்ஸ் விளையாடும் போது தான் அது போன்ற ஷாட்களை அடிப்பேன். ஆனால் அவர் அதை அடிக்கடி அடிப்பதை பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இருப்பினும் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ள அவரிடம் வருங்காலங்களில் நிறைய திறமைகள் வெளிப்படும் என்று நம்புகிறேன். எனவே எதிர்காலத்தில் இன்னும் அவர் சிறந்த வீரராக செயல்படுவார் என்பதை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று கூறினார்.

ABD

முன்னதாக உண்மையான 360 டிகிரி பேட்ஸ்மேன் என்று கொண்டாடப்படும் ஏபி டீ வில்லியர்ஸ் வரலாறு காணாத ஷாட்களை அடித்து டி20 கிரிக்கெட்டில் புதிய பரிணாமத்தை ஏற்படுத்திய நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக சதமடித்த வீரராக உலக சாதனை படைத்தார்.

இதையும் படிங்க:IND vs WI : வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் புஜாராவின் இடத்தில் ஆடப்போவது யாருன்னு தெரியுமா? – இதுதான் ரிசல்ட்

அதே போல 2012இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 220 பந்துகளை எதிர்கொண்டு வெறும் 33 ரன்கள் மட்டும் எடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தகுந்தார் போல் விளையாடும் திறமையை வெளிப்படுத்திய அவரை ஆல் இன் ஆல் அழகுராஜா என்றே சொல்லலாம். அந்த வகையில் டி20 மட்டுமல்லாமல் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் அசத்தினால் தான் சூரியகுமார் யாதவ் முழுமையான பேட்ஸ்மேனாக தம்மை அடையாளப்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement