வீடியோ : 41 வயதில் வலியுடன் போராடிய தோனி, கடைசி பந்தில் ஏமாற்றம் – நொண்டி நடந்ததால் சிஎஸ்கே ரசிகர்கள் சோகம்

- Advertisement -

கோடைகாலத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2023 டி20 தொடரில் 6வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை பங்கேற்ற 4 போட்டிகளில் 2 வெற்றிகளையும் 2 தோல்விகளையும் பதிவு செய்து புள்ளி பட்டியலில் 5வது இடத்தில் தடுமாறி வருகிறது. குறிப்பாக ராஜஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற 4வது போட்டியில் தன்னுடைய கோட்டையான சேப்பாக்கத்தில் 15 வருடங்கள் கழித்து முதல் முறையாக தோல்வியை சந்தித்த சென்னை 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை நழுவ விட்டது. அந்தப் போட்டியில் ராஜஸ்தான் நிர்ணயித்த 176 ரன்களை துரத்திய சென்னைக்கு ருதுராஜ் 8 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தாலும் ரகானே 31 ரன்களும் டேவோன் கான்வே 50 ரன்களும் எடுத்துப் போராடி ஆட்டமிழந்தனர்.

ஆனால் மிடில் ஓவரில் ராஜஸ்தானின் தரமான பந்து வீச்சில் சிவம் துபே 8, மொயின் அலி 7, ராயுடு 1 என முக்கிய பேட்மின்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி பெரிய அழுத்தத்தை ஏற்படுத்தினர். அதனால் கடைசி 5 ஓவரில் 63 ரன்கள் தேவைப்பட்ட போது தோனியும் ஜடேஜாவும் போராடியதால் கடைசி ஓவரில் சென்னையின் வெற்றிக்கு 21 ரன்கள் தேவைப்பட்டது. அதில் 2 சிக்ஸர்களை பறக்க விட்ட தோனி சென்னையை வெற்றியின் விளிம்பு வரை அழைத்து வந்து போராடினார்.

- Advertisement -

ரசிகர்கள் சோகம்:
ஆனால் துல்லியமான யார் பந்தை வீசினால் உலகின் எந்த பேட்ஸ்மேனாலும் அடிக்க முடியாது என்று வல்லுனர்கள் சொல்வதற்கு எடுத்துக்காட்டான பந்தை வீசியை சந்திப் சர்மா கடைசிப் பந்தில் தோனியை சிக்ஸர் அடிக்க விடாமல் சென்னைக்கு தோல்வியை பரிசளித்தார். மறுபுறம் 32* (17) ரன்கள் எடுத்துப் போராடியும் கடைசி பந்தில் ஃபினிஷிங் செய்ய முடியாததால் தோனி ஏமாற்றமான ரியாக்சன் கொடுத்தது சென்னை ரசிகர்களின் நெஞ்சங்களை உடைத்தது. முன்னதாக பொதுவாகவே உள்வட்டத்திற்குள் அடித்து மின்னல் வேகத்தில் டபுள் ரன்கள் எடுக்கக்கூடிய தோனி இப்போட்டியின் கடைசி 3 ஓவரில் ஒருமுறை கூட 2 ரன்களை எடுக்க முயற்சிக்கவில்லை.

அப்படி வேகமாக ஓடக்கூடிய தோனி கடைசி கட்ட ஓவர்களில் பழைய பவர் இல்லாததை போல் நொண்டி நொண்டி ஓடியதாக விமர்சித்த முன்னாள் வீரர் மேத்தியூ ஹெய்டன் அவருக்கு என்னவாயிற்று என்பதை விளக்குமாறு கேட்டுக்கொண்டார். அந்த நிலைமையில் 41 வயதை கடந்து விட்டதால் சமீப காலங்களாகவே லேசான முழங்கால் வலியால் அவதிப்பட்டு வரும் தோனி குஜராத்துக்கு எதிரான முதல் போட்டியிலேயே விக்கெட் கீப்பிங் செய்யும் போது அதே இடத்தில் மீண்டும் காயத்தை சந்தித்தார்.

- Advertisement -

அந்த காயத்திற்காக சிகிச்சை எடுத்து வரும் காரணத்தாலேயே இப்போட்டியில் தோனி டபுள் ரன்களை எடுக்க முயற்சிக்கவில்லை என்று பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தெளிவுபடுத்தினார். இருப்பினும் இந்த வயதிலும் இந்தளவுக்கு தங்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் சிறப்பாக விளையாடும் தோனி அடுத்து வரும் போட்டிகளிலும் விளையாடுவார் என்றும் பிளமிங் நம்பிக்கை தெரிவித்தார். அந்த நிலையில் நேற்றைய போட்டியை முடித்துக்கொண்டு தோனி பெவிலியன் திரும்பிய வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளது.

பொதுவாகவே தன்னுடைய உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொண்டு கூலாக இருக்கும் தோனி பெவிலியனுக்கு திரும்பும் போது லேசாக நொண்டி நொண்டி வலியை வெளிக்காட்டாமல் நடந்து சென்றது தெளிவாக தெரிந்தது. குறிப்பாக மேலே நின்று கொண்டு “தல உங்களது தொப்பியை பரிசளியுங்கள்” என்று கேட்ட ரசிகர்களுக்கு வலியையும் பொறுத்துக் கொண்டு கையை அசைத்துக் கொண்டே தோனி உள்ளே சென்றார்.

இதையும் படிங்க: IPL 2023 : கொஞ்சம் வாய மூடுங்க இதுல எக்ஸ்பர்ட்னு பெருமை வேற, ஆகாஷ் சோப்ராவை கலாய்க்கும் ரசிகர்கள் – காரணம் இதோ

அதைப் பார்க்கும் சென்னை ரசிகர்கள் மிகவும் சோகமடைந்து விரைவில் குணமடையுமாறு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களை தெரிவிக்கிறார்கள். அதை விட 41 வயதிலும் வலிகளை தாண்டி மிகச் சிறப்பாக செயல்படும் நீங்கள் உண்மையாகவே கிரேட் என்றும் சென்னை ரசிகர்கள் தோனியை நெகிழ்ச்சியுடன் பாராட்டி வருகிறார்கள்.

Advertisement