
ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று ஏப்ரல் 25-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 43-வது போட்டியில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது சன் ரைசர்ஸ் அணியிடம் தோல்வியை தழுவி இந்த தொடரில் தங்களது ஏழாவது தோல்வியை பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் நீடிக்கிறது. இதனால் இந்த ஆண்டு சி.எஸ்.கே அணியின் பிளே ஆப் வாய்ப்பு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது.
இந்த போட்டிக்கு முன்பாக 399 டி20 போட்டிகளில் விளையாடியிருந்த முன்னாள் இந்திய அணியின் கேப்டனான தோனிக்கு இந்த சன் ரைசர்ஸ் அணிக்கெதிரான போட்டி 400 வது டி20 போட்டியாக அமைந்ததால் அதனை நேரில் காண ரசிகர்களும் பெருமளவில் மைதானத்தில் குவிந்திருந்தனர். அதோடு சேப்பாக்கம் மைதானத்தில் 400-வது போட்டியை விளையாடுவதால் அது தோனிக்கு ஸ்பெஷல் போட்டியாகவும் பார்க்கப்பட்டது.
இவ்வேளையில் நேற்றைய போட்டியின் போது சென்னை அணி முதலில் பேட்டிங் செய்கையில் 8-ஆவது வீரராக களம்புகுந்த தோனி இறுதிவரை களத்தில் நின்று அதிரடி காட்டுவார் என்று நினைத்தால் 10 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன் 6 ரன்களை மட்டுமே அடித்து ஆட்டமிழந்து வெளியேறினார்.
இப்படி தனது 400 வது போட்டியில் தோனி சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தது ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றத்தை அளித்தது. மேலும் இந்த போட்டியின் இறுதியில் சிஎஸ்கே அணி தோல்வியை சந்தித்தது பெரிய வேதனையை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இந்த போட்டியில் ஏற்பட்ட தோல்வியின் மூலம் தோனி ஒட்டு மொத்தமாக டி20 போட்டிகளில் ஒரு வினோதமான சோகமான நிகழ்வை சந்தித்துள்ளார்.
அதாவது நேற்றைய 400-வது போட்டியில் மட்டும் தோனி தோற்கவில்லை. இதற்கு முன்னதாக அவர் டி20 போட்டிகளில் விளையாடிய 100-ஆவது, 200-ஆவது மற்றும் 300-ஆவது போட்டிகளிலும் தோல்வியை சந்தித்திருக்கிறார். இப்படி நூறாவது போட்டிகளுக்கும் தோனிக்கும் ராசியில்லை என்பது இந்த முடிவின் மூலம் தெரிய வந்துள்ளது. சென்னை அணிக்காக 5 கோப்பைகளை பெற்றுத்தந்த தோனிக்கா இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது என்று கூறும் அளவிற்கு இந்த நிகழ்வு ஒரு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : தோனிக்கு அப்புறம் இதை யார் செய்யப்போறாங்கனு தெரியல? சி.எஸ்.கே அணியின் தவறை சுட்டிகாட்டிய – சுரேஷ் ரெய்னா
ஏற்கனவே இந்திய வீரர்கள் சார்பாக விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் 400 டி20 போட்டிகளுக்கு மேல் விளையாடியுள்ள வேளையில் தற்போது அவர்களது வரிசையில் நான்காவது இந்திய வீரராக தோனி 400 டி20 போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.