நடப்பு 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 43-வது லீக் போட்டியானது நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் தோல்வியை தழுவி மீண்டும் ஒருமுறை ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. மேலும் இந்த போட்டியில் அடைந்த தோல்வியின் மூலம் தற்போது வரை இந்த தொடரில் 9 போட்டிகளில் விளையாடியுள்ள சி.எஸ்.கே 7 தோல்விகளுடன் புள்ளி பட்டியலில் பத்தாவது இடத்தில் நீடிக்கிறது.
தோனிக்கு அடுத்து யார் இருக்காங்க? : சுரேஷ் ரெய்னா கேள்வி
இதுவரை இரண்டு ஆட்டங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள சென்னை அணி தற்போது 4 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளதால் இந்த ஆண்டு பிளே ஆப் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது. ஏனெனில் இன்னும் சென்னை அணிக்கு 5 ஆட்டங்களே எஞ்சியுள்ள வேளையில் 5 போட்டிகளில் வெற்றி பெற்றால் கூட 14 புள்ளிகளை மட்டுமே சென்னை அணியால் பெற முடியும்.
அதனால் சென்னை அணியின் ப்ளே ஆப் கனவு முற்றிலுமாக தகர்ந்து விட்டது என்று தற்போதே கூறலாம். ஐபிஎல் வரலாற்றில் சாம்பியன் அணியாக திகழ்ந்து வரும் சி.எஸ்.கே அணி இம்முறை கண்டுள்ள மிகப்பெரிய சரிவு பலரது மத்தியிலும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக மற்ற அணிகளின் பிளேயிங் லெவனில் உள்ள வீரர்கள் எல்லாம் பலமாக இருக்கும் வேளையில் சென்னை அணி மட்டும் வீரர்களின் தேர்வில் மிகப்பெரிய சொதப்பலை செய்துள்ளதாக பல்வேறு கிரிக்கெட் விமர்சனங்களும் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா தோனிக்கு பிறகு சென்னை அணியின் விக்கெட் கீப்பர் யார்? என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். மேலும் இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : சென்னை அணி மெகா ஏலத்தின் போது இஷான் கிஷன் மற்றும் ரிஷப் பண்ட் போன்ற விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களை வாங்க முயற்சிக்கவில்லை. அதனால் சிஎஸ்கே அணிக்கு இது நல்ல ஏலமாக அமையவில்லை என்றே எனக்கு தோன்றுகிறது.
ஏனெனில் தோனிக்கு பிறகு சென்னை அணியின் விக்கெட் கீப்பராக யார் இருப்பார்கள்? என்பதை என்னால் யோசிக்க முடியவில்லை. இந்த சீசனில் சிஎஸ்கே அணியின் பேட்ஸ்மேன்கள் அதிக அளவில் டாட் பால்களை விளையாடுகிறார்கள். இதுபோன்று எந்த ஒரு சீசனிலும் சென்னை அணி மோசமாக விளையாடி நான் பார்த்ததில்லை. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களிடமிருந்து உதவி கிடைக்காததால் மிடில் ஆர்டரில் வரும் வீரர்களாலும் சரியாக விளையாட முடியவில்லை.
இதையும் படிங்க : சி.எஸ்.கே வீரர் ஷேக் ரஷீத்தின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் தனித்துவ சாதனை நிகழ்த்திய – முகமது ஷமி
நல்ல பார்மில் இருக்கும் ஒரு சில வீரர்கள் வெளியேறி விட்டதால் ஜடேஜா, சாம் கரண் போன்ற வீரர்கள் எல்லாம் நான்காவது இடத்தில் களமிறங்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. சென்னை அணி இப்படி மிகப்பெரிய குளறுபடிகளை இந்த சீசனில் சந்தித்துள்ளது என சுரேஷ் ரெய்னா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.



