
இந்தியாவில் இன்று கிரிக்கெட் இந்தளவுக்கு ஆலமரமாய் வளர்ந்து நிற்க கடந்த 1983இல் கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக உலக கோப்பையை வென்றதே முக்கிய காரணமாகும். அந்த அளவுக்கு மிகப்பெரிய எழுச்சியை காண வைத்த அந்த மகத்தான வெற்றிக்கு பின் முகமது அசாருதீன், சௌரவ் கங்குலி, ராகுல் டிராவிட் போன்ற எத்தனையோ மகத்தான கேப்டன்கள் வந்து அவர்களது தலைமையில் சச்சின் டெண்டுல்கர் உட்பட நிறைய மகத்தான வீரர்கள் விளையாடிய போதிலும் 2-வது உலக கோப்பையை வெல்ல முடியாமல் இந்தியா தவித்து வந்தது.
அந்த நிலைமையில் கடந்த 2011இல் சொந்த மண்ணில் நடந்த உலகக் கோப்பையில் வீரேந்திர சேவாக், யுவராஜ் சிங் உள்ளிட்ட கங்குலி உருவாக்கிய அனுபவ வீரர்களையும் விராட் கோலி, சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட தாம் உருவாக்கிய வீரர்களையும் சிறந்த வகையில் வழிநடத்திய கேப்டன் எம்எஸ் தோனி 28 வருடங்கள் கழித்து இந்தியாவுக்கு உலக கோப்பையை வென்று கொடுத்தார்.
அந்த தொடரில் முதல் போட்டியிலேயே வீரேந்திர சேவாக் அதிரடி சதமடித்து 175 ரன்கள் குவித்தது, விராட் கோலி சதம் அடித்தது, முக்கியமான தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் அடுத்தடுத்த சதங்கள் அடித்தது, ஜஹீர் கானின் சிறப்பான வேகம், ஹர்பஜன் – அஷ்வின் ஆகியோரின் சுழல், யுவராஜ் சிங்கின் அசத்தலான ஆல்-ரவுண்டர் செயல்பாடுகள், நாக்-அவுட்டில் ரெய்னா எடுத்த முக்கியமான ரன்கள், பைனலில் இலங்கைக்கு எதிராக தடுமாறிய போது கௌதம் கம்பீர் – எம்எஸ் தோனி அமைத்த மெகா பார்ட்னர்ஷிப் என அனைத்து இந்திய வீரர்களின் இணைந்த சிறப்பான செயல்பாடுகளே இந்தியாவுக்கு உலகக் கோப்பையை வென்று கொடுத்தது.
மகத்தான தோனி:
இருப்பினும் பார்மின்றி ஆரம்பம் முதலே பெரிய அளவில் அடிக்கவில்லை என்றாலும் அனைத்து வீரர்களையும் ஒருங்கிணைத்து சிறந்த முறையில் வழிநடத்திய கேப்டன் எம்எஸ் தோனி முக்கியமான இறுதிப் போட்டியில் முத்தையா முரளிதரனுக்கு எதிராக யுவராஜ் சிங் தடுமாறுவார் என்பதை கணித்து யாருமே எதிர்பாராத வகையில் அவருக்கு முன்கூட்டியே களமிறங்கினார். அந்த முக்கிய நேரத்தில் பார்முக்கு திரும்பிய அவர் 91* ரன்கள் விளாசி யாராலும் மறக்க முடியாத மெகா சிக்ஸரை பறக்க விட்டு சூப்பரான பினிஷிங் கொடுத்து வெற்றி பெற வைத்ததால் கௌதம் கம்பீர் 97 ரன்கள் குவித்த போதிலும் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
அதன் காரணமாக 2011 உலக கோப்பை என்று நினைத்தாலே தோனியின் சிறப்பான கேப்டன்ஷிப் மற்றும் பினிஷிங் தான் நினைவுக்கு வரும். அந்தளவுக்கு அந்த உலகக் கோப்பை வெற்றியில் அவரின் அளப்பறியது என்ற நிலையில் நிறைய ரசிகர்கள் அவர் என்ன தனியாளாக கோப்பையை வென்று கொடுத்தாரா என்ற விமர்சனங்களை இன்றும் வைக்கிறார்கள். இருப்பினும் நான் தனியாளாக உலக கோப்பையை வென்று கொடுத்தேன் என என்றுமே அவர் கூறியது கிடையாது.
தோனியே காரணம்:
இந்நிலையில் 2011 உலக கோப்பைக்கு 2 – 3 வருடங்கள் முன்பாகவே 25 – 30 வெவ்வேறு வீரர்களுக்கு வாய்ப்பளித்து அதில் தரமான வீரர்களை கண்டறிந்த எம்எஸ் தோனியின் கேப்டன்ஷிப் அணுகுமுறையே வெற்றிக்கு காரணம் என்று முன்னாள் இந்திய வீரர் பிரக்யான் ஓஜா தெரிவித்துள்ளார்.
இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “2011 உலகக் கோப்பையின் வெற்றிக்கு பின்புறம் எம்எஸ் தோனி இருப்பதாக நான் மிகுவும் ஆழமாக நம்புகிறேன். ஏனெனில் அதில் விளையாடப் போகும் வீரர்களை கண்டறிவதற்காக 25 அல்லது 30 வீரர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை உலக கோப்பைக்கு முன்பாக 40 போட்டிகளில் விளையாட வைக்க வேண்டும் என்ற முயற்சியில் அவர் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்”
“அதற்கு காரணம் உங்களால் உலக கோப்பையின் போது நிறைய ரன்களை அடிப்பது எளிதாகும். ஆனால் அழுத்தமான சூழ்நிலைகளை சமாளிக்க தேவையான அனுபவம் உங்களிடம் இல்லையெனில் அதை நீங்கள் லீக் சுற்றுப் போட்டிகளில் உணரவில்லை என்றாலும் நாக்-அவுட் சுற்று, அரையிறுதி அல்லது இறுதிப் போட்டி போன்ற முக்கிய கட்டத்தில் உணர்ந்து அழுத்தத்திற்கு உள்ளாகி தடுமாறி விடுவீர்கள். எனவே பெரிய தொடரை வெல்ல அனுபவம் மிகப்பெரிய உதவியாக இருக்கும் என்று அவர் நினைத்தார்” என கூறினார்.
இதையும் படிங்க: IND vs WI : சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனித்துவமான சாதனை படைத்த பாண்டியா – ஜேக் காலிஸ் மாதிரி வர விரும்புவதாக ஆசை
அந்த வரிசையில் வரும் அக்டோபரில் நடைபெறும் டி20 உலக கோப்பைக்கு முன்பாக தயாராகும் வகையில் தற்போதைய இந்திய அணியில் நிகழும் மாற்றங்கள் சரிதான் என்று தெரிவிக்கும் ஓஜா உலக கோப்பையில் விளையாட விரும்பும் வீரர்கள் சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா போல் சதங்களை அடித்து திறமையை நிரூபித்தால் மட்டுமே அடுத்தடுத்த வாய்ப்புகளைப் பெற்று இடத்தை பிடிக்க முடியும் என்று கூறியுள்ளார்.