ஆஹா என்ன ஒரு எளிமை, மரத்தடி மருத்துவரிடம் சிகிக்சை பெற்ற தல தோனி – முழுவிவரம் இதோ

MS DHoni Ranchi
- Advertisement -

இந்தியாவை சேர்ந்த நட்சத்திர முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் மற்றும் கேப்டன் எம்எஸ் தோனி சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கு பல சரித்திர வெற்றிகளை பெற்றுக்கொடுத்த மகத்தான கேப்டனாக போற்றப்படுகிறார். 2007இல் உள்ளூர் போட்டிகளில் கூட கேப்டன்ஷிப் செய்த அனுபவமில்லாத போதிலும் கொடுக்கப்பட்ட பொறுப்பில் அபாரமாக செயல்பட்ட அவர் அனைத்து வீரர்களையும் சிறப்பாக வழிநடத்தி வரலாற்றின் முதல் டி20 உலகக் கோப்பையை இந்தியாவுக்கு வென்று கொடுத்தார்.

2010இல் சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட் போன்ற ஜாம்பவான்களை ஒருங்கிணைத்து டெஸ்ட் போட்டிகளில் உலகின் நம்பர் ஒன் அணியாக இந்தியாவை தரம் உயர்த்திய அவர் 2011இல் சொந்த மண்ணில் நடந்த உலகக் கோப்பையில் தொடர் முழுக்க சிறப்பாக வழிநடத்தி முக்கியமான பைனலில் அதிரடியான ரன்களைக் குவித்து 28 வருடங்கள் கழித்து இந்தியா கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினார்.

- Advertisement -

ராஞ்சியில் தோனி:
அதேபோல் 2013இல் தாம் வளர்த்த ரோகித் சர்மா, விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, ஜடேஜா போன்ற இளம் வீரர்களை வைத்து இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் கோப்பையையும் வென்ற அவர் கிரிக்கெட்டில் உள்ள அனைத்து ஐசிசி கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டனாக சரித்திரம் படைத்துள்ளார். இன்றைய இந்திய அணியில் விளையாடும் 70% வீரர்களுக்கு ஆரம்ப காலத்தில் வாய்ப்பையும் ஆதரவையும் அளித்து வருங்காலத்தில் வளமான இந்திய கிரிக்கெட்டுக்கு வித்திட்ட அவர் கடைசியாக 2019 உலக கோப்பையில் விளையாடிய கடந்த 2020 சுதந்திர தினத்தில் ஓய்வு பெற்றார். இருப்பினும் வழக்கம்போல ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடி வரும் அவர் 4 கோப்பைகளை வென்று வெற்றிகரமான 2-வது கேப்டனாகவும் சாதனை படைத்துள்ளார்.

கடைசியாக சமீபத்திய ஐபிஎல் 2022 தொடரில் விளையாடிய அவரது தலைமையில் சென்னை பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை. இருப்பினும் 40 வயதை கடந்துள்ள அவர் தன்னை “தல” தலையிலும் மனதிலும் வைத்துக் கொண்டாடும் தமிழக ரசிகர்களுக்காக அடுத்த வருடம் சென்னை மண்ணில் விளையாடுவேன் என்று உறுதியளித்துள்ளார். தற்போது ஐபிஎல் தொடரை முடித்து விட்டு தனது சொந்த ஊரான ராஞ்சியில் இருக்கும் அவருக்கு வயதின் காரணமாக லேசான மூட்டுவலி ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

- Advertisement -

மரத்தடி மருத்துவர்:
கிரிக்கெட்டில் பல வெற்றிகளை குவித்ததைப்போலவே கோடிக்கணக்கில் சம்பாதித்து உலக அளவில் ஒரு பணக்கார விளையாட்டு வீரராக கருதப்படும் எம்எஸ் தோனி போன்ற நட்சத்திரங்கள் இதுபோன்ற மருத்துவ சிகிச்சைகளுக்காக பெரும்பாலும் நட்சத்திர உயர்தர மருத்துவமனைகளுக்கு தான் செல்வார்கள். அதிலும் சிலர் கோடிகளை பார்க்காமல் வெளிநாடுகளுக்குப் போய் சிகிச்சை மேற்கொள்வார்கள். ஆனால் மற்றவர்களை விட களத்தில் வித்தியாசமான முடிவுகளை எடுத்து அதனால் மாபெரும் வெற்றிகளை சாத்தியமாக்கி காட்டிய தோனி களத்திலும் களத்திற்கு வெளியேவும் கோடீஸ்வரர் என்று பாராமல் பல தருணங்களில் எளிமையாக நடந்து கொண்டதை பார்த்துள்ளோம்.

அந்த வகையில் தனது மூட்டு வலிக்காக பிரபல மருத்துவர்கள் கொண்ட நட்சத்திர மருத்துவமனைகளை நாடாத அவர் ராஞ்சியிலிருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் “வந்தன் சிங் கார்வேர்” என்ற உள்ளூர் மக்களிடம் மிகவும் புகழ் பெற்ற சித்த வைத்தியரை நாடி சென்றுள்ளார். லபுங் எனும் சிறிய கிராமத்தில் மரத்தடியில் பாரம்பரிய ஆயுர்வேத சிகிச்சைகளை செய்யக்கூடிய அந்த மருத்துவர் அனைவரிடமும் வெறும் 40 ரூபாய் மட்டுமே வசூலிக்கிறார். தோனியிடமும் அதே 40 ரூபாயை தான் அந்த மருத்துவர் வசூலித்ததாகவும் தெரிகிறது. அவரிடம் சாதாரண மரத்தடியில் சிகிச்சை பெற்றுக் கொண்ட தோனி ஒவ்வொரு 4 நாட்களுக்கு ஒரு முறை அங்கு சென்று மருந்துகளை வாங்கி வருவதாக தெரிகிறது.

- Advertisement -

எளிமையின் சிகரம்:
ஒரு முறை தனது பெற்றோர்கள் இந்த மருத்துவரிடம் சென்று விரைவாக குணமடைந்ததால் அவர்களின் பரிந்துரைப்படி சிறிய மருத்துவராக இருந்தாலும் எளிமையுடன் தோனி சிகிச்சை பெற்று வருகிறார். இப்போதெல்லாம் சாதாரண மக்கள் கூட ஆயுர்வேதத்தை நம்பாமல் ஆங்கில மருத்துவத்தை நம்பி அதை நாடிச் செல்கிறார்கள்.

ஆனால் பெற்றோரின் பேச்சைக் கேட்டு மரத்தடி ஆயுர்வேத மருத்துவரை நம்பி சிகிச்சை பெற்றுவரும் தோனி பெரியாளாக மாறினாலும் எளிமையான வழியில் நடப்பதை காட்டுகிறது. இதுபோக சிகிச்சை பெற்று திரும்பிய போது அந்த பகுதியில் இருந்த இளம் பெண் ரசிகைகளுடன் ஒன்றாக நின்று மிகவும் நெருக்கமாக அமர்ந்து அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : IND vs ENG : இங்கிலாந்து அணிக்கெதிரான அதிரடியான சதம் குறித்து போட்டி முடிந்து – ரிஷப் பண்ட் சொன்னது என்ன?

அதை பார்த்த அவரின் ரசிகர்கள் “ஆஹா என்ன ஒரு எளிமை தல தல தான்” என்று மகிழ்ச்சியுடன் அதை பகிர்ந்து வருகிறார்கள்.

Advertisement