
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் கடைசியாக விளையாடி இருந்தார். அந்த போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்து வெளியேறியதிலிருந்து எந்த ஒரு முடிவையும் அறிவிக்காமல் இருந்த தோனி திடீரென ஆகஸ்ட் 15-ஆம் தேதி சர்வதேச போட்டிகளில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக அதிரடியான ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
எப்போதுமே பெரிய அளவில் எதிர்பார்ப்பு இல்லாமல் அமைதியாக தன்னுடைய முடிவுகளை அறிவிக்கும் தோனி இப்படி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்தது. இருப்பினும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து அவர் ஓய்வு பெற்றாலும் ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் போது ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் ரசிகர்களின் அன்பிற்காகவும், ஆதரவிற்காகவும் மேலும் ஒரு ஆண்டு விளையாட இருப்பதாக தோனி அறிவித்திருந்தார்.
அந்த வகையில் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடருக்கான சிஎஸ்கே அணியில் நான்கு கோடி ரூபாய்க்கு அன் கேப்டு வீரராக தக்கவைக்கப்பட்டுள்ளதால் நிச்சயம் இன்னும் ஒரு சீசன் விளையாடுவார் என்று தெரிகிறது. என்னதான் இப்படி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து அவர் ஓய்வு பெற்றிருந்தாலும் இன்றளவும் அவர் குறித்த செய்திகள் அடிக்கடி இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றன.
அந்த வகையில் ஓய்வு பெற்று இத்தனை ஆண்டுகளாகியும் அவருடைய சந்தை மதிப்பு இன்னும் குறையாமல் இருந்து வருவது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தற்போது 43 வயதை எட்டியுள்ள தோனி இந்திய அணிக்காக விளையாடி 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகி இருந்தாலும் தன்னிடம் 42 பிராண்டுகளின் விளம்பர ஒப்பந்தங்களை வைத்துள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க : ஆர்சிபி’யில் எனக்கு சிராஜை நல்லா தெரியும்.. அந்த காரணத்தால் விராட் மாதிரி செஞ்சதில் தப்பில்ல? ஹேசல்வுட் ஆதரவு
பாலிவுட் சூப்பர் ஸ்டார்களான அமிதாப் பச்சன் மற்றும் ஷாருக்கான் ஆகியோர்களை விட தோனிக்கு விளம்பர ஒப்பந்தம் அதிகமாக உள்ளதாக அந்த தகவல் தெரிவிக்கிறது. இதன் மூலம் தோனிக்கு இந்தியாவில் மட்டுமின்றி உலகளவில் எவ்வளவு ஈர்ப்பு உள்ளது என்பதையும் இந்த விடயம் வெளிக்காட்டுகிறது.