IPL 2023 : எல்லாரும் வீரர்களை தேடுறாங்க, ஆனா தோனி மட்டும் தான் வீரர்களை உருவாக்குறாரு – முன்னாள் வீரர் பாராட்டு, காரணம் இதோ

Dhoni
- Advertisement -

இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2023 டி20 தொடரில் ஏப்ரல் 17ஆம் தேதி நடைபெற்ற 24வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை 8 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த சென்னை சூப்பர் கிங்ஸ் தங்களுடைய 3வது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் டாப் 4 இடத்திற்குள் நுழைந்தது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை டேவோன் கான்வே 83 (45) சிவம் துபே 52 (27) ரகானே 37 (20) என முக்கிய வீரர்களின் அதிரடியான ரன் குவிப்பால் 20 ஓவர்களில் 226/6 ரன்கள் சேர்த்தது.

Rahane CSk

- Advertisement -

அதைத்தொடர்ந்து 227 ரன்களை துரத்திய பெங்களூருவுக்கு ஆகாஷ் சிங் வீசிய முதல் ஓவரிலேயே விராட் கோலி 6 (4) ரன்னில் அவுட்டாக அடுத்து வந்த மஹிப்பால் லோம்ரர் டக் அவுட்டானார். அதனால் 15/2 என்ற தடுமாற்றத் தொடக்கத்தை பெற்ற தங்களது அணியை 3வது விக்கெட்டுக்கு 126 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து தூக்கி நிறுத்திய கிளன் மேக்ஸ்வெல் 76 (36) ரன்களும் கேப்டன் டு பிளேஸிஸ் 62 (33) ரன்களும் எடுத்து போராடி முக்கிய நேரத்தில் ஆட்டமிழந்தனர். அதை பயன்படுத்திய சென்னை தினேஷ் கார்த்திக் 28 (14), சபாஷ் அகமது 12 (10) என லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்களை அதிரடி காட்ட விடாமல் கச்சிதமாக செயல்பட்டு போராடி வென்றது.

தோனியின் கேப்டன்ஷிப்:
முன்னாதாக இந்த தொடரில் பெரிய தொகைக்கு வாங்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ், தீபக் சஹர் ஆகியோர் முழுதாக 3 போட்டியில் விளையாடாத நிலையில் கேரியர் முடிந்ததாக கருதப்பட்ட ரகானே, இதர அணிகளில் தடுமாறிய சிவம் துபே ஆகியோர் தோனி தலைமையில் அபாரமாக செயல்பட்டு வருவது அனைவருக்கும் ஆச்சரியமாகவே அமைகிறது. சொல்லப்போனால் வேகப்பந்து வீச்சு துறையில் துஷார் டேஷ்பாண்டே, ஆகாஷ் சிங், பதிரான போன்ற அனுபவமில்லாத இளம் வீரர்களை வைத்தே சென்னை வெற்றி நடை போடுகிறது.

Dube

இதிலிருந்து இதர அணிகளில் தடுமாறும் வீரர்களும் அனுபவமற்ற இளம் வீரர்களும் கூட தோனி தலைமையில் அசத்துவார்கள் என்ற அவருடைய ரசிகர்கள் மற்றும் சில முன்னாள் வீரர்களின் கூற்று மீண்டும் நிரூபணமாகியுள்ளது. இந்நிலையில் ஐபிஎல் தொடரில் விளையாடும் இதர அணிகளும் கேப்டன்களும் தரமான வீரர்களை தேடும் நிலையில் தோனி மட்டும் உள்ளுக்குள் இருக்கும் திறமையை வெளிக்கொண்டு வந்து வீரர்களை தரமானவர்களாக உருவாக்குவதாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா பாராட்டியுள்ளார். குறிப்பாக சிவம் துபே, ரகானே ஆகியோர் தோனி தலைமையில் அசத்துவதை மனதார பாராட்டும் அவர் இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“அஜிங்கிய ரகானே எப்போதுமே பெங்களூருவை விரும்பக் கூடியவர். களத்தில் இருந்த வரை அவர் இந்த போட்டியில் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்தார். சிவம் துபேவும் மிகச் சிறப்பாக செயல்பட்டார். இதற்கு முன் அவர் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணியில் விளையாடினார். ஆனால் தோனியிடம் நீங்கள் பார்க்கும் விஷயம் என்னவென்றால் இதர அணிகள் அனைத்தும் வீரர்களை தேடுகின்றன. ஆனால் தோனி வீரர்களை தேடுவதில்லை. மாறாக வீரர்களை உருவாக்குகிறார். அவரது தலைமையில் வீரர்கள் சிறப்பாக செயல்படுவதை பார்ப்பது நெஞ்சை தொடுகிறது”

Chopra

“ஏனெனில் இதர அணிகளில் தடுமாறிய சிவம் துபே சென்னையில் அசத்துகிறார். ரகானே இதுவரை 2 – 3 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். ஆனால் அவருடைய புல் ஷாட் அபாரமாக இருந்தது. இவர்களுடன் ஏற்கனவே அசத்தி வரும் டேவோன் கான்வே மிகச் சிறப்பாக பேட்டிங் செய்தார். அவர் சிறந்த வீரர் என்பதில் சந்தேகமில்லை. குறிப்பாக சிராஜ்க்கு எதிராக இடது கை பேட்ஸ்மேன்கள் ஆபத்தானவர்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் டேவோன் கான்வே சுதந்திரமாக பேட்டிங் செய்தார்” என்று கூறினார்.

இதையும் படிங்க:வீடியோ : நானே தல ரசிகன் தான் – சிஎஸ்கே ஆர்சிபி எல்லாம் ஓரினம் தான், விராட் கோலியின் பதிவால் இந்திய ரசிகர்கள் நெகிழ்ச்சி

இதையடுத்து சென்னை தன்னுடைய 5வது போட்டியில் ஏப்ரல் 21ஆம் தேதி சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை சேப்பாக்கத்தில் எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.

Advertisement