- Advertisement -
இந்திய கிரிக்கெட்

தோனியே நேரடியா அழைத்து என்னை பாராட்டுனாரு, தினேஷ் கார்த்திக் மகிழ்ச்சி பேட்டி – எதற்குனு பாருங்க

தமிழக நட்சத்திர கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் கடந்த 2004ஆம் ஆண்டு இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி விக்கெட் கீப்பிங் செய்வதில் மிகச்சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தினார். இருப்பினும் பேட்டிங்கில் தொடர்ந்து ரன்களை குவிப்பதில் தடுமாறிய அவரை மிஞ்சும் வகையில் அதே வருடத்தில் அறிமுகமாகி வரலாற்றின் இதர இந்திய விக்கெட் கீப்பர்களை காட்டிலும் அதிரடியாக விளையாடி நிறைய வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்து அடிப்படை இலக்கணத்தை மாற்றிய எம்எஸ் தோனி நிரந்தரமான இடத்தைப் பிடித்தார். கூடவே கேப்டனாக பொறுப்பேற்று 3 விதமான உலக கோப்பைகளை வென்று கொடுத்ததால் தொடர்ந்து வாய்ப்புகளை பெற முடியாத தினேஷ் கார்த்திக் கிடைத்த வாய்ப்புகளிலும் சுமாராகவே செயல்பட்டார்.

அந்த வரிசையில் 2019 உலக கோப்பையில் விளையாடியிருந்த அவருக்கு போட்டியாக ரிஷப் பண்ட் உள்ளிட்ட நிறைய இளம் விக்கெட் கீப்பர்கள் வந்தனர். அந்த நிலையில் 2021 டெஸ்ட் சாம்பியன்ஷிப் சமயங்களில் வர்ணனையாளர் அவதாரம் எடுத்ததால் இந்திய கேரியர் முடிந்ததாக கருதப்பட்ட தினேஷ் கார்த்திக் 2022 ஐபிஎல் தொடரில் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி 3 வருடங்கள் கழித்து யாருமே எதிர்பாராத வகையில் மீண்டும் கம்பேக் கொடுத்தார். அதில் இருதரப்பு தொடர்களில் அசத்திய அவர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் சுமாராகவே செயல்பட்டதாலும் 37 வயதை கடந்து விட்டதாலும் இனிமேல் இந்தியாவுக்காக விளையாடுவது சாத்தியமற்றதாகவே பார்க்கப்படுகிறது.

- Advertisement -

பாராட்டிய தோனி:
இருப்பினும் வரும் மார்ச் 31ஆம் தேதி துவங்கும் 2023 ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக விளையாட காத்திருக்கும் தினேஷ் கார்த்திக் அதற்கிடையே தற்போது நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் மீண்டும் வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார். முன்னதாக களமிறங்கி விளையாடுவதை விட போட்டியின் நுணுக்கமான தருணங்களை ரசிகர்களுக்கு புரியும் படி விளக்குவது முதல் சில நேரங்களில் துல்லியமாக அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை கணிப்பது வரை வர்ணையாளராக அசத்தும் தினேஷ் கார்த்திக் ஏற்கனவே ரசிகர்களின் பாராட்டுகளை பெற்று வருகிறார்.

இந்நிலையில் தம்முடைய வர்ணனை மிகவும் சிறப்பாக இருப்பதாகவும் தொடர்ந்து அசத்துங்கள் என்றும் சமீபத்தில் எம்எஸ் தோனி பாராட்டியதாக தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். இது பற்றி ஆர்சிபி இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்த சிறிய இடைவெளியில் வர்ணனை செய்வதை நான் மிகவும் மகிழ்ச்சியாக செய்கிறேன். குறிப்பாக போட்டியை மிகவும் ஆராய்ந்து பேசுவதை விரும்பும் நான் அதை பார்க்கும் ரசிகர்கள் சிறப்பாக புரிந்து கொள்ளும் வகையில் செயல்படுவதை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன்”

- Advertisement -

“எனவே எப்போதும் ஒரு சூழ்நிலையை எனது சொந்த வழியில் புரிந்து கொள்ள முயற்சித்து அதை நான் நினைத்த விதத்தில் வெளிப்படுத்த முயற்சிக்கிறேன் என்பது உங்களுக்கு தெரியும் அதற்கு எம்எஸ் தோனி எனும் எதிர்பாராத நபரிடமிருந்து எனக்கு மிகப்பெரிய பாராட்டு கிடைத்தது. அவர் என்னை அழைத்து “நான் உங்களது வர்ணனையை மிகவும் விரும்புகிறேன். உங்களது பேச்சுக்கள் சிறப்பாக உள்ளது. சிறப்பாக செய்கிறீர்கள்” என்று பாராட்டினார்”

“அதைக் கேட்ட எனக்கு “வாவ் நீங்களே பாராட்டி விட்டீர்களா மிகவும் நன்றி” என்ற வகையில் இருந்தது. ஏனெனில் அவரைப் போன்ற இந்த கிரிக்கெட்டை அதிகமாக விளையாடி அதிகமாக பார்க்கும் ஒருவரிடம் பாராட்டு பெறுவது மிகவும் பெரியதாகும். அந்த வகையில் அவர் பாராட்டியது மிகவும் நல்ல உணர்வை கொடுத்தது. நீங்கள் என்னுடைய வர்ணனையை கேட்டு மகிழ்ந்ததை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன் என்று தோனிக்கு பதிலளித்தேன்” என கூறினார்.

இதையும் படிங்க:இதெல்லாம் ரொம்ப ஓவர் – ஆஸிக்கு ஒரு நியாயம் இந்தியாவுக்கு ஒரு நியாயமா? இந்தூர் பிட்ச்சை தண்டித்த ஐசிசிக்கு கவாஸ்கர் கண்டனம்

முன்னதாக தோனியால் மிகப்பெரிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக வர வேண்டிய தினேஷ் கார்த்திக் கேரியர் பாழாகி விட்டதாக சில ரசிகர்கள் விமர்சிப்பது வழக்கமாகும். ஆனால் தம்மை விட தமக்கு கிடைத்த வாய்ப்புகளில் சிறப்பாக செயல்பட்டு நிலையான இடத்தை பிடித்த தோனி மக்களால் ஹீரோவாக கொண்டாடப்படுவதில் எந்த வருத்தமும் இல்லை என்று சமீபத்தில் தெரிவித்த தினேஷ் கார்த்திக் தம்முடைய வாய்ப்புகளை தேடி தான் இப்போதும் விளையாடுவதாக கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -