- Advertisement -
ஐ.பி.எல்

லெஜெண்ட் லசித் மலிங்காவின் ஆல் டைம் சாதனையை உடைத்த சுனில் நரேன்.. ஐபிஎல் தொடரில் புதிய சாதனை

கோலாகலமாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2024 டி20 தொடரில் ஏப்ரல் 29ஆம் தேதி நடைபெற்ற 47வது லீக் போட்டியில் டெல்லியை 7 விக்கெட் வித்யாசத்தில் கொல்கத்தா தோற்கடித்தது. ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி சுமாராக விளையாடி 153/9 ரன்கள் மட்டுமே எடுத்தது. ரிஷப் பண்ட், பிரிதிவி ஷா உள்ளிட்ட முக்கிய பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் எடுக்க தவறிய அந்த அணிக்கு அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 35* ரன்கள் எடுத்தார்.

கொல்கத்தா சார்பில் அதிகபட்சமாக தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத் தொடர்ந்து 154 ரன்களை துரத்திய கொல்கத்தாவுக்கு பிலிப் சால்ட் அதிரடியாக 68 (33), கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 33*, வெங்கடேஷ் ஐயர் 26* ரன்கள் எடுத்தனர். அதனால் 16.3 ஓவரிலேயே இலக்கை எட்டிய கொல்கத்தா எளிதாக வெற்றி பெற்றது.

- Advertisement -

கொல்கத்தா நாயகன்:
இதையும் சேர்த்து 9 போட்டிகளில் 6வது வெற்றியை பதிவு செய்த அந்த அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறி பிளே ஆஃப் செல்தற்கான வாய்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. மறுபுறம் அதிகபட்சமாக அக்சர் பட்டேல் 2 விக்கெட்டுகள் எடுத்தும் 11 போட்டிகளில் 6வது தோல்வியை பதிவு செய்த டெல்லி அணி பிளே ஆஃப் செல்வதற்கான பயணத்தில் பின்னடைவை சந்தித்தது.

இந்த வெற்றிக்கு 4 ஓவரில் 16 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி ஆட்டநாயகன் விருது வென்றார். அதே போல இந்த போட்டியில் சுனில் நரேன் வழக்கம் போல 4 ஓவரில் 24 ரன்கள் மட்டும் கொடுத்து அக்சர் படேல் விக்கெட்டை எடுத்தார். இதையும் சேர்த்து கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இதுவரை அவர் மொத்தம் 69 ஐபிஎல் விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

- Advertisement -

இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட மைதானத்தில் அதிக விக்கெட்டுகளை எடுத்த வீரர் என்ற லசித் மலிங்காவின் ஆல் டைம் சாதனையை உடைத்த அவர் புதிய சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. சுனில் நரேன் : 69*, ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா
2. லசித் மலிங்கா : 68, வான்கடே, மும்பை
3. அமித் மிஸ்ரா : 58, பெரோசா கோட்லா, டெல்லி

இதையும் படிங்க: இவரையா ஏலத்தில் எடுக்கல.. கங்குலியின் 14 வருட தனித்துவ சாதனையை நொறுக்கிய பில் சால்ட்.. புதிய சாதனை

அந்த வகையில் தனித்துவ சாதனை படைத்த அவர் இந்த வருடம் பேட்டிங்கில் 9 போட்டிகளில் 372 ரன்களை எடுத்துள்ளார். அதனால் அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் 8வது இடத்தில் உள்ள அவர் இம்முறை பேட்ஸ்மேனாகவும் கொல்கத்தாவின் வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -