ஜடேஜா தலைவணங்கியதை எல்லாரும் பாத்திருப்பீங்க. தோனியை பாத்து ராயுடு என்ன பண்ணாரு தெரியுமா? – விவரம் இதோ

Hats Off MS Dhoni
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் ஏப்ரல் 21-ஆம் தேதி நடைபெற்ற 33-ஆவது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை மற்றும் மும்பை ஆகிய அணிகள் நேருக்கு நேர் மோதின. நவி மும்பையில் கடைசி ஓவர் வரை அனல் தெறித்த அந்த போட்டியில் இந்தியாவின் நட்சத்திர முன்னாள் கேப்டன் மற்றும் ஜாம்பவான் எம்எஸ் தோனி கடைசி பந்து வரை நின்று மெகா பினிஷிங் செய்தது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்து கொண்டாட வைத்துள்ளது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் கடும் போராட்டத்துக்கு பின் 155/7 ரன்கள் எடுத்தது.

ஏனெனில் அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திர தொடக்க வீரர்கள் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் இஷான் கிசான் ஆகிய இருவரும் சென்னை பவுலர் முகேஷ் சவுத்ரி வீசிய முதல் ஓவரிலேயே அடுத்தடுத்து டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர். இதனால் 2/2 என ஆரம்பத்திலேயே திண்டாடிய அந்த அணிக்கு அதிகபட்சமாக நடுவரிசையில் நங்கூரமாக நின்ற இளம் வீரர் திலக் வர்மா 3 பவுண்டரி 2 சிக்சருடன் 51* ரன்களும் சூர்யகுமார் யாதவ் 32 (21) ரன்களும் எடுத்து காப்பாற்றினார். சென்னை சார்பில் பந்துவீச்சில் மிரட்டிய முகேஷ் சவுத்ரி 3 விக்கெட்டுகளையும் டுவைன் பிராவோ 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.

- Advertisement -

தடுமாறிய சென்னை, தாங்கிய தல:
அதை தொடர்ந்து 156 என்ற இலக்கை துரத்திய சென்னைக்கு தொடக்க வீரர் ருதுராஜ் முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டாகி அதிர்ச்சியளிக்க அடுத்து வந்த மிட்செல் சான்ட்னர் 11 (9) ரன்களில் அவுட்டாகி சென்றார். இதனால் 16/2 என தடுமாற்ற தொடக்கத்தை பெற்ற சென்னைக்கு மற்றொரு தொடக்க வீரர் ராபின் உத்தப்பா 30 (25) ரன்களும் அடுத்து களமிறங்கிய அம்பத்தி ராயுடு 40 (35) ரன்களும் பொறுப்புடன் சேர்த்து ஓரளவு காப்பாற்றி அவுட்டானார்கள். ஆனால் அதை வீணாக்கும் வகையில் அடுத்து வந்த ஷிவம் துபே 13 (14) கேப்டன் ரவீந்திர ஜடேஜா 3 என சொற்ப ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினர்.

இதனால் 106/6 என திண்டாடிய சென்னைக்கு மீண்டும் ஒரு தோல்வி உறுதி என அனைவரும் எதிர்பார்த்த வேளையில் தென் ஆப்பிரிக்க வீரர் ட்வைன் பிரெடோரியஸ் அதிரடியாக 2 பவுண்டரி 1 சிக்சர் உட்பட 22 (14) ரன்கள் எடுத்து கடைசி ஓவரில் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்ட போது முதல் பந்தில் ஆட்டமிழந்தார். ஆனால் இதுபோல எத்தனையோ போட்டிகளை பார்த்த நான் இருக்கும் வரை கவலை வேண்டாம் என்ற வகையில் மறுபுறம் நின்ற எம்எஸ் தோனி அழுத்தத்திற்கு அஞ்சாமல் பேட்டிங் செய்த நிலையில் 2-வது பந்தில் களமிறங்கிய டுவைன் பிராவோ சிங்கிள் எடுத்து அவருக்கு ஸ்ட்ரைக் கொடுத்தார்.

- Advertisement -

பினிஷர் தல தோனி:
ஜெயதேவ் உனட்கட் வீசிய அந்த ஓவரின் 3-வது பந்தை எதிர்கொண்ட எம்எஸ் தோனி தெறிக்கவிடும் மெகா சிக்சரை பறக்க விட்டு 4-வது பந்தில் அதிரடியான பவுண்டரியை விளாசி 5-வது பந்தில் 2 ரன்கள் எடுத்தார். இதனால் கடைசி பந்தில் வெற்றிக்கு 4 ரன்கள் தேவை என்ற நிலையில் மிரட்டலான பவுண்டரியை பறக்கவிட்ட அவர் கடைசி ஓவரில் தனி ஒருவனை போல சென்னைக்கு 3 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.

இதன் காரணமாக 7 போட்டிகளில் 2-வது வெற்றியை பதிவு செய்த சென்னையின் பிளே-ஆப் சுற்றுக்கான வாய்ப்பு தொடர்ந்து நீடிக்கிறது. மறுபுறம் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஐபிஎல் அணி என பெயரெடுத்த ரோகித் சர்மா தலைமையிலான மும்பை கடைசிப் பந்து வரை போராடிய போதிலும் தோல்வி அடைந்தது. மேலும் இதுவரை பங்கேற்ற 7 போட்டிகளிலும் தொடர்ச்சியாக தோற்ற அந்த அணி வரலாற்றிலேயே முதல் 7 போட்டிகளில் தோல்வி அடைந்த முதல் அணி என்ற மோசமான சாதனையை படைத்ததுடன் ஐபிஎல் 2022 தொடரின் லீக் சுற்றுடன் முதல் அணியாக வெளியேறுவதும் உறுதியாகியுள்ளது.

- Advertisement -

சல்யூட் பெற்ற தல:
முன்னதாக இந்த போட்டி முடிந்த பின் இரு அணி வீரர்களும் கை கொடுக்க வந்தபோது இப்படிப்பட்ட மிரட்டலான வெற்றியைப் பெற்றுக் கொடுத்த தோனிக்கு சென்னையின் புதிய கேப்டன் ரவீந்திர ஜடேஜா தனது தொப்பியை கழற்றிவிட்டு தலை வணங்கினார். அவருக்கு அடுத்ததாக நின்ற அம்பத்தி ராயுடு கையெடுத்து கும்பிடுவதை போன்ற ரியாக்ஷனை கொடுத்தார்.

இந்தியாவுக்காகவும் சென்னைக்காகவும் இதே போன்ற சூழ்நிலைகளில் கடைசி நேரத்தில் களமிறங்கி எதிரணிகளை பந்தாடி தனி ஒருவனாக பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்து பினிசெர் என பெயரெடுத்த எம்எஸ் தோனி சமீப காலங்களாக ரன்கள் அடிக்க முடியாமல் தடுமாறியதால் முடிந்து போன பினிஷெர் என்ற கிண்டலுக்கு உள்ளானார்.

இதையும் படிங்க : 40 வயதிலும் மாறாத ஸ்டைல் ! மாஸ்டர் ஆஃப் ஃபின்சிங், தல தோனி படைத்த சாதனைகளின் பட்டியல் இதோ

ஆனால் தனது 40-தாவது வயதில் மீண்டும் ஒருமுறை ஸ்டெடியாக நின்று பினிஷிங் செய்து காட்டிய அவர் கிரிக்கெட்டின் மகத்தான பினிசெர் என்று மீண்டும் ஒருமுறை தன்னை இந்த உலகிற்கு நிரூபித்துள்ளார். இதனால் இந்த உலகில் ஒரே சூரியன், ஒரே சந்திரன், ஒரே எம்எஸ் தோனி, ஒரே பினிசர் போன்ற பல வகைகளில் ரசிகர்களும் முன்னாள் இந்நாள் வீரர்களும் ஜாம்பவான்களும் சினிமா பிரபலங்களும் தோனிக்கு தலைவணங்கி வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.

Advertisement