40 வயதிலும் மாறாத ஸ்டைல் ! மாஸ்டர் ஆஃப் ஃபின்சிங், தல தோனி படைத்த சாதனைகளின் பட்டியல் இதோ

MS Dhoni vs MI
Advertisement

ஐபிஎல் 2022 தொடரில் ஏப்ரல் 21-ஆம் தேதி நடைபெற்ற 33-ஆவது லீக் போட்டியில் மும்பையை தோற்கடித்த நடப்புச் சாம்பியன் சென்னை வெறும் 3 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை சுவைத்தது. நவி மும்பையில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை தட்டுத்தடுமாறி 155/7 ரன்களை போராடி சேர்த்தது. ஏனெனில் முதலில் பேட்டிங் செய்த அந்த அணிக்கு முதல் ஓவரிலேயே ரோகித் சர்மா மற்றும் இஷான் கிசான் ஆகியோர் அடுத்தடுத்து டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர்.

அதனால் 2/2 என ஆரம்பத்திலேயே தடுமாறிய மும்பையை நடுவரிசையில் இளம் வீரர் திலக் வர்மா 51* (43) ரன்களும் சூரியகுமார் யாதவ் 32 ரன்களும் எடுத்து காப்பாற்றினார்கள். சென்னை சார்பில் பந்துவீச்சில் மிரட்டிய இளம் வீரர் முகேஷ் சவுத்ரி 3 விக்கெட்டுகளையும் டுவைன் பிராவோ 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.

- Advertisement -

பினிஷர் தல தோனி:
அதை தொடர்ந்து 156 என்ற இலக்கை துரத்திய சென்னைக்கு தொடக்க வீரர் ருதுராஜ் முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டாகி அதிர்ச்சியளிக்க அடுத்து வந்த மிட்செல் சான்ட்னர் 11 (9) ரன்களில் அவுட்டாகி சென்றதால் 16/2 என்ற கணக்கில் சென்னையும் ஆரம்பத்திலேயே தடுமாறியது. அந்த நிலையில் ஜோடி சேர்ந்த ராபின் உத்தப்பா 30 (25) ரன்களும் அம்பத்தி ராயுடு 40 (35) ரன்களும் எடுத்து ஓரளவு சென்னையை மீட்டெடுத்தனர். ஆனால் அதை வீணாக்கும் வகையில் அடுத்து வந்த ஷிவம் டுபே 13 (14) ரன்களிலும் கேப்டன் ஜடேஜா 3 (8) ரன்களிலும் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினர்.

MS Dhoni 28

இதனால் 106/6 என தோல்வியின் பிடியில் சிக்கிய சென்னைக்கு அடுத்து களமிறங்கிய பிரெடோரியஸ் 2 பவுண்டரி 1 சிக்சர் உட்பட 22 ரன்கள் எடுத்து வெற்றிக்காக போராடிய நிலையில் கடைசி ஓவரின் முதல் பந்தில் அவுட்டானார். அதனால் போட்டியில் மிகபெரிய பரபரப்பு ஏற்பட்ட நிலையில் மறுபுறம் காலம் காலமாக இதுபோன்ற தருணங்களில் அபாரமாக செயல்பட்டு வெற்றிகளைத் தேடி கொடுத்து பினிஷர் என பெயரெடுத்த எம்எஸ் தோனி சென்னையின் வெற்றிக்கும் மும்பைக்கும் குறுக்கே நின்றார். அதிலும் கடைசி 4 பந்துகளில் 16 ரன்கள் தேவைப்பட்ட போது 3-வது பந்தில் மெகா சிக்சரை தெறிக்கவிட்ட அவர் 4-வது பந்தில் பவுண்டரி எடுத்து 5-வது பந்தில் 2 ரன்கள் விளாசினார்.

- Advertisement -

கடைசி பந்தில் வெற்றிக்கு 4 ரன்கள் தேவைப்பட்ட போது அதிரடியான பவுண்டரியை பறக்க விட்ட அவர் 3 பவுண்டரி 1 சிக்சர் உட்பட 28* ரன்கள் குவித்து வெறித்தனமான பினிஷிங் செய்து சென்னையை வெற்றிபெற வைத்தார். இதனால் 7 போட்டிகளில் 2-வது வெற்றியை பதிவு செய்த சென்னை பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பில் தொடர்ந்து நீடிக்கிறது.

MS Dhoni Finisher

தல தோனியின் சாதனைகள்:
கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் முறையாக கிரிக்கெட்டில் அறிமுகமாகி அதன்பின் இந்தியாவிற்காகவும் சென்னைக்காகவும் இதுபோன்ற எத்தனையோ போட்டிகளில் கடைசி நேரத்தில் களமிறங்கி தனி ஒருவனாக பல வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்த எம்எஸ் தோனியை கிரிக்கெட்டின் மகத்தான பினிஷெர் என அனைவரும் அழைக்கின்றனர்.

- Advertisement -

இருப்பினும் 40 வயதைக் கடந்து விட்ட அவர் சமீப காலங்களாக ஒருசில போட்டிகளில் அந்த வேலையை செய்யத் தவறிய காரணத்தால் முடிந்து போன பினிஷர் என்று சிலர் கிண்டலடித்தனர். ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை போல வயதானாலும் கூடவே பிறந்த ஸ்டைல் என்றும் மாறாது என நேற்று மும்பைக்கு எதிரான போட்டியில் காட்டிய எம்எஸ் தோனி தன்னை வரலாற்றில் மிகச்சிறந்த பினிஷர் என்று மீண்டும் நிரூபித்துள்ளார். சரி இந்த போட்டியில் அவர் செய்த முக்கிய சாதனைகளின் பட்டியல் பற்றி பார்ப்போம்.

1. ஐபிஎல் வரலாற்றில் 40 வயதுக்கு பின் விளையாடிய பேட்ஸ்மேன்களில் அதிக பேட்டிங் சராசரியை கொண்ட பேட்ஸ்மேனாக தோனி சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல் இதோ:
1. எம்எஸ் தோனி : 32.83
2. கிறிஸ் கெயில் : 30.36
3. ராகுல் டிராவிட் : 29.44

- Advertisement -

2. நேற்றைய போட்டியை போல டி20 போட்டிகளில் சேசிங் செய்யும் போது அதிலும் கடைசி ஓவரில் 121 பந்துகளை எதிர்கொண்ட அவர் அதில் 323 ரன்களை 266.94 என்ற தெறிக்கவிடும் ஸ்ட்ரைக் ரேட் விகிதத்தில் விளாசியுள்ளார். இதில் 26 பவுண்டரிகளும் 26 சிக்சர்கள் அடங்கும். உலகில் வேறு எந்த ஒரு பேட்ஸ்மெனும் இதுபோன்ற ரன்களை அடிக்காத நிலையில் இது ஒரு பிரம்மாண்ட உலக சாதனையாகும்.

3. அதேபோல் ஐபிஎல் கிரிக்கெட்டில் 2-வதாக பேட்டிங் செய்யும்போது கடைசி ஓவரில் அதிக சிக்சர் அடித்த பேட்ஸ்மேனாகவும் எம்எஸ் தோனி 24* சிக்சருடன் முதலிடத்தில் உள்ளார். 2-வது இடத்தில் பொல்லார்ட் வெறும் 9 சிக்சர்களுடன் உள்ளார்.

4. மேலும் ஒட்டுமொத்த ஐபிஎல் போட்டிகளில் 20-வது ஓவரில் (முதல் பேட்டிங், சேசிங் இரண்டும்) அதிக சிக்ஸர்களையும் பவுண்டரிகளையும் பறக்க பேட்ஸ்மேனாகவும் டோனி முதலிடம் பிடிக்கிறார். அதுபோன்ற அழுத்தம் நிறைந்த கடைசி ஓவர்களில் அவர் 51 சிக்ஸர்களையும் 48 பவுண்டரிகளையும் பறக்கவிட்டுள்ளார்.

5. நேற்று கடைசி ஓவரில் எம்எஸ் தோனி 16 ரன்கள் அடித்து வெற்றிகரமாக பினிஷிங் செய்து காட்டினார். இவர் ஏற்கனவே கடந்த 2016இல் புனே அணிக்காக விளையாடிய போது பஞ்சாப்க்கு எதிரான போட்டியில் இதேபோல் 16 ரன்கள் எடுத்து பினிஷிங் செய்தார். அந்த வகையில் இவரைத் தவிர உலகில் வேறு எந்த பேட்ஸ்மேனும் ஒன்றுக்கு மேற்பட்ட போட்டிகளில் கடைசி ஓவரில் 15க்கும் மேற்ப்பட்ட ரன்கள் அடித்து வெற்றி பெற செய்ததே கிடையாது.

6. அதேபோல் ஐபிஎல் வரலாற்றில் 16 – 20 எனப்படும் இறுதி கட்ட ஓவர்களில் அதிக சிக்சர்களை பறக்கவிட்ட பேட்ஸ்மேனாகவும் 168 சிக்சர்களுடன் தோனி முதலிடம் உள்ளார். 2-வது இடத்தில் பொல்லார்ட் 143 சிக்சர்களுடன் உள்ளார்.

இதையும் படிங்க : தப்பு பண்ணிட்டீங்களே ரோஹித்! தனிஒருவன் தோனி நிற்கும்போது கடைசி ஓவரை போய் அவரிடம் கொடுக்கலாமா?

6. இதன் காரணமாகவே ஐபிஎல் வரலாற்றில் கடைசி பந்தில் அதிக வெற்றிகளை பதிவு செய்த அணி (8 வெற்றிகள்) என்ற மகத்தான சாதனையையும் சென்னை பெற்றுள்ளது. 6 வெற்றிகளுடன் 2-வது இடத்தில் மும்பை உள்ளது.

Advertisement