
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர இளம் ஆல்ரவுண்டரான நிதீஷ் குமார் ரெட்டி கடந்த ஆண்டு இந்திய அணிக்காக ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் அறிமுகமானார். அப்படி அறிமுகமான அந்த தொடரிலேயே பாக்சிங் டே டெஸ்ட் போட்டியின் போது சதம் அடித்தும் அசத்தியிருந்தார். ஆஸ்திரேலிய தொடரில் 5 போட்டிகளில் விளையாடிய அவர் 9 இன்னிங்ஸ்களில் 298 ரன்கள் குவித்து பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு நிலையான வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் இல்லாமல் தவித்து வந்த இந்திய அணிக்கு தீர்வாக நிதீஷ் குமார் ரெட்டி கிடைத்துள்ளார். ஏனெனில் பேட்டிங்கில் கை கொடுப்பதோடு மட்டுமின்றி வேகப்பந்து வீச்சாளரான அவரால் பந்துவீச்சிலும் குறிப்பிட்ட அளவு பங்களிப்பை வழங்க முடிகிறது. இதன் காரணமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் நிரந்தர வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டராக மாறுவார் என்ற நம்பிக்கையும் கிடைத்துள்ளது.
அந்த வகையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியிலும் இடம் பிடித்துள்ள அவர் நான்காவது வேகப்பந்து வீச்சாளராக அணியில் இடம் பிடிப்பார் என்று தெரிகிறது. ஏற்கனவே இங்கிலாந்து சென்ற முதன்மை இந்திய அணியுடன் பயணித்துள்ள நிதீஷ் குமார் ரெட்டி அங்கு தீவிர வலைப்பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளரான மோர்னே மோர்கல் நிதீஷ்குமார் ரெட்டியால் பேட்டிங்கில் மட்டுமல்லாமல் பந்து வீச்சிலும் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : நிதீஷ் ரெட்டி உண்மையிலேயே ஒரு மிகச்சிறந்த ஆல்ரவுண்டர். பந்துவீச்சில் அவரால் நிச்சயம் மாயாஜாலத்தை காட்ட முடியும்.
அவருடன் கலந்துரையாடியதிலிருந்து அவரை எப்படி பந்துவீச வைப்பது என்பது எனக்கு சவாலாக இருந்தது. ஆனாலும் அவர் நிறைய ஓவர்கள் வீசுவதை பார்க்க விரும்புகிறேன். பேட்டிங்கில் அவர் எப்படிப்பட்ட திறமை உடையவர் என்பதை நாம் பார்த்திருக்கிறோம். அதேபோன்று இந்த தொடரில் அவருடைய பந்துவீச்சு திறனையும் பார்ப்போம்.
இதையும் படிங்க : ஆஸ்திரேலியா – தெ.ஆ இறுதிப்போட்டியில் நடந்த அரிதான வரலாற்று நிகழ்வு.. என்ன நடந்தது? – விவரம் இதோ
இங்கிலாந்தில் உள்ள சூழ்நிலைகளை பயன்படுத்தி அவரால் நிச்சயம் சிறப்பாக பந்துவீச முடியும் என மோர்னே மோர்கல் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது எதிர்பவரும் ஜூன் 20-ஆம் தேதி லீட்ஸ் மைதானத்தில் துவங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.