ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியானது நேற்று ஜூன் 11-ஆம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணியானது தங்களது முதல் இன்னிங்சில் 212 ரன்களுக்கு சுருண்டது.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் நடந்த வரலாற்று நிகழ்வு :
ஆஸ்திரேலிய அணி சார்பாக அதிகபட்சமாக வெப்ஸ்டர் 72 ரன்களையும், ஸ்டீவ் ஸ்மித் 66 ரன்களையும் குவித்து அசத்தினர். பின்னர் தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வரும் தென்னாப்பிரிக்க அணியானது இரண்டாம் நாள் உணவு இடைவேளை வரை 5 விக்கெட்டுகளை இழந்து 121 ரன்கள் குவித்துள்ளது.
இந்நிலையில் இந்த போட்டியின் போது இங்கிலாந்து மண்ணில் 145 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் நிகழாத ஒரு அரிய சம்பவம் நடைபெற்றுள்ளது. அந்த வகையில் கடந்த 1880 ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்து மண்ணில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டிகளில் இதுவரை 561 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ளன.
இதில் எந்த ஒரு போட்டியிலுமே இரண்டு அணிகளின் துவக்க வீரர்களும் டக் அவுட்டானது கிடையாது. ஆனால் தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரராக விளையாடிய கவாஜா 20 பந்துகளை எதிர்கொண்டு டக் அவுட்டானார்.
அதனை தொடர்ந்து தென்னாப்பிரிக்க அணியின் துவக்க வீரரான எய்டன் மார்க்ரமும் 6 பந்துகளையும் சந்தித்து டக் அவுட்டானார். இங்கிலாந்து மண்ணில் இப்படி இரண்டு அணியை சேர்ந்த துவக்க வீரர்களையும் டக் அவுட்டாவது இதுவே முதல் முறை. ஒட்டுமொத்தமாக இதே போன்ற நிகழ்வு 9 முறை நடைபெற்றிருந்தாலும் இங்கிலாந்தில் முதல்முறையாக இப்படி ஒரு வரலாற்று நிகழ்வு நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : 2025 ஐ.பி.எல் தொடரில் கலக்கியதோடு மட்டுமில்லாமல் பயிற்சி போட்டியிலும் பட்டையை கிளப்பிய – வைபவ் சூர்யவன்ஷி
ஏற்கனவே பல ஆண்டுகளாக ஒரு ஐ.சி.சி கோப்பைக்காக காத்திருக்கும் தென்னாப்பிரிக்க அணி இந்த போட்டியிலாவது வெற்றி பெற்று சாம்பியன்ஸ் பட்டத்தை வெல்ல வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.



