
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் இந்த தொடரில் முன்னிலை வகித்துள்ளது. அதேவேளையில் சுப்மன் கில் தலைமையிலான இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணியானது இந்த தொடரின் முதல் போட்டியிலேயே தோல்வியை சந்தித்து பின்னடைவை சந்தித்துள்ளது.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் ஜூலை 2-ஆம் தேதி எட்ஜ்பேஸ்டன் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கலாம் என்று தெரிகிறது. ஏனெனில் முதல் போட்டியிலேயே தோல்வியை சந்தித்ததால் அதிருப்தியில் இருக்கும் நிர்வாகம் சில முக்கிய முடிவுகளை எடுக்கும் என்று தெரிகிறது.
அதோடு முன்னாள் வீரர்கள் பலரும் இந்திய அணி மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்ப என்ன வழி? என்பது குறித்த தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான மான்டி பனேசர் இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி செய்ய வேண்டிய மாற்றம் குறித்து பேசியுள்ளார்.
அந்த வகையில் அவர் முதல் போட்டியின் போது விளையாடிய வேகப்ந்து வீச்சாளர் ஷர்துல் தாகூரை தூக்கிவிட்டு அவருக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவை அணிக்குள் கொண்டுவர வேண்டும் என்று தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : எட்ஜ்பேஸ்டன் மைதானத்தில் நிச்சயம் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு அதிக சாதகத்தை கொடுக்கும். எனவே ரவீந்திர ஜடேஜா அந்த போட்டியில் எக்ஸ் பேக்டர் வீரராக இருப்பார்.
அதேபோன்று இந்த இரண்டாவது போட்டியில் கூடுதல் சுழற்பந்து வீச்சாளராக குல்தீப் யாதவை கொண்டு வருவது சிறந்த தேர்வாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஏனெனில் ஐபிஎல் போட்டிகளிலேயே குல்தீப் சிறப்பாக பந்துவீசி இருந்தார். அதன் காரணமாக நிச்சயம் அவரால் அதே பார்மை இங்கும் தொடர முடியும் என்று நினைக்கிறேன். அதுமட்டும் இன்றி ஷர்துல் தாகூரை ஒரு வேகப்பந்து ஆல்ரவுண்டராக அணியில் எடுத்து அவருக்கு 6 முதல் 8 ஓவர்கள் கொடுப்பதை விட முழுநேர சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவை விளையாட வைக்கலாம்.
இதையும் படிங்க : பும்ராவுக்கு ஓய்வு வழங்கும் பட்சத்தில் அவருக்கு பதிலாக விளையாடப்போகும் வீரர் யார்? – விவரம் இதோ
அதிகமாக பந்து திரும்பாத மைதானத்திலேயே மிகச்சிறப்பாக பந்துவீசும் குல்தீப்பை இதுபோன்ற சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் விளையாட வாய்ப்பு கொடுத்தால் நிச்சயம் அவரது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்துவார். எனவே தான் ஷர்துல் தாகூரை வெளியேற்றிவிட்டு அவரை கொண்டுவர வேண்டும் என்று தான் கருதுவதாகவும் மான்டி பனேசர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.